உத்தரபிரதேச மாநிலம் சகரன்பூர் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்னர் கலவரம் நடைபெற்ற பகுதிகளில் தடையை மீறி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் சகரன்பூர் நகரில் சுமார் 40 நாட்களுக்கு முன்பு தலித் இன மக்கள் அம்பேத்கார் பிறந்த தின விழாவைக் கொண்டாடினார்கள். அப்போது அவர்களுக்கும் உயர்சாதி தாக்கூர் இன மக்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஏராளமான கிராம மக்கள் படுகாயம் அடைந்தனர். நிறைய வீடுகள் சேதம் அடைந்தன.
ராணுவம் வரவழைக்கப் பட்டு அங்குள்ள கிராமங்களில் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு சகரன்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் அமைதி திரும்பிக் கொண்டிருந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கலவரத்தால் பாதிக்கப்பட்ட தலித் மக்களின் கிராமங்களுக்கு சென்றார். இதனால் அந்த ஊர்களில் மீண்டும் கலவரம் வெடித்தது.
அதில் ஒருவர் கொல்லப் பட்டார். ஏராளமான வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. அந்த கிராமங்களில் இன்னும் பதட்டம் தணியவில்லை. இந்த நிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட தலித் கிராமங்களுக்கு இன்று செல்ல காங்கிரஸ் துணைத் தலைவர் திட்டமிட்டார். இதை அறிந்த சகரன்பூர் மாவட்ட நிர்வாகத்தினர், “இப்போது ராகுல் வர வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டனர்.
ஆனால் அதை ஏற்க ராகுல்காந்தி மறுத்து விட்டார். சகரன்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 15 தலித்துகளை சந்தித்து ஆறுதல் கூறப் போவதாக தெரிவித்தார். ராகுல்காந்தி சகரன்பூர் வந்தால் மீண்டும் கலவரம் வெடிக்க வாய்ப்புள்ளதாக போலீசாருக்கு உளவுத்துறையினர் தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து ராகுல்காந்தி, கலவரம் பாதித்த சகரன்பூர் நகருக்கு வந்தால் தடுப்போம் என போலீசார் தெரிவித்தனர்.
என்றாலும் ராகுல் தனது முடிவை கைவிடவில்லை. சகரன்பூருக்கு போயே தீருவது என்று தீர்மானித்தார். அதேபோல் இன்று காலை டெல்லியில் இருந்து கிளம்பிய ராகுல் காந்தி தடையை மீறி சகரன்பூருக்கு பிற்பகலில் வந்தார். அப்போது, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஆலோசணை கூறினார்.
-maalaimalar.com