83 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை தூர்வாரும் பணிகள் தொடங்கியது

zzzமேட்டூர்: சேலம் மாவட்டத்தில் கடந்த 83 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மேட்டூர் அணையில் இன்று தூர்வாரும் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இந்த பணிகள் இரண்டு மாதங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதால் தமிழகம் முழுவதும் வறட்சி நிலவி வருகிறது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே நீர் நிலைகள் வறண்டு விட்டதால் மக்கள் காலிக்குடங்களுடன் தண்ணீருக்காக அவதிப்பட்டு வருகின்றனர்.

முந்தைய வடகிழக்கு பருவமழை காலத்தின் போது வழக்கத்தை காட்டிலும் 2 மடங்கு மழை பெய்ததால் சென்னையே வெள்ளத்தில் தத்தளித்தது. மற்ற பகுதிகளிலும் நீர் நிலைகள் நிறைந்தே காணப்பட்டது.

தூர்வாரவில்லை

இந்த ஆண்டு வறட்சி காரண்மாக தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.இதற்கு பல ஆண்டுகளாக நீர் நிலைகள் தூர்வாரப்படாமல் உள்ளதே காரணம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து நீர் நிலைகளை தூர்வாரும் பணிக்காக தமிழக அரசு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்தது.

83 ஆண்டுகளுக்கு முன்

நீர் நிலைகள் தூர்வாரும் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் தொப்பையாறு, பாலாறு ஆகியவற்றில் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் மேட்டூருக்கு தண்ணீர் வரத்து 4,000 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையானது கடந்த 1934-ஆம் ஆண்டு காவிரியின் குறுக்கே கட்டப்பட்டது.

170 அடி ஆழம்

சுமார் 170 அடி ஆழம் கொண்ட இந்த அணையில் 20 சதவீதம் வண்டல் மண் காணப்படுகிறது. இதன் மூலம் சுமார் 16.5 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 93.47 டிஎம்சி தண்ணீர் தேக்கிவைக்கப்படும் இந்த அணையில் விவசாயிகள் துணையோடு தூர்வார முடிவு செய்யப்பட்டுள்ளன.

தூர்வாரும் பணிகள் தொடங்கியது

தூர்வாரும் பணிகளை அச்சங்காடு என்ற பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார். இந்த பணிகளால் 10 சதவீதம் கூடுதல் நீரை தேக்கி வைக்கமுடியும். இந்த பணிகளை தமிழக அரசு 4 மாதங்களுக்கு முன்னரே தொடங்கியிருந்தால், தமிழகத்தில் இதுபோன்ற வறட்சி ஏற்பட்டிருக்காது என்றும் , விவசாயமும் பாதிக்கப்பட்டிருக்காது என்றும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் வண்டல் மண்ணை விவசாயிகள் கொண்டு சென்று தங்கள் நிலங்களுக்கு உரமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் இந்த வண்டல் மண்ணை எடுக்கமுடியுமா என்பது சந்தேகம்தான் என்று விவசாயிகள் கூறுகின்றனர். மொத்தம் 1,00,000 கனமீட்டர் வண்டல் மண்ணை எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

oneindia.com

TAGS: