இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்த மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிரான யோசனைகள் பரிசீலிக்கப்படும் என்று மத்திய மந்திரி ஹர்ஷ வர்த்தன் தெரிவித்தார்.
புதுடெல்லி,
இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்த மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிரான யோசனைகள் பரிசீலிக்கப்படும் என்று மத்திய மந்திரி ஹர்ஷ வர்த்தன் தெரிவித்தார்.
தடை
கால்நடை சந்தைகளில், இறைச்சிக்காக மாடுகளை விற்கவும், வாங்கவும் தடை விதித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ், இந்நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.
இந்த தடை, குறிப்பிட்ட தரப்பினரின் உணவு பழக்கத்தில் குறுக்கிடும் செயல் என்றும், இந்த தடையால் தோல் பொருள் வர்த்தகம் பாதிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த தடை உத்தரவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதுதொடர்பான ஒரு மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை, மத்திய அரசின் அறிவிக்கைக்கு 4 வார இடைக்கால தடை விதித்துள்ளது.
உணவு பழக்கத்தில் குறுக்கிடவில்லை
இந்நிலையில், இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கான தடைக்கு எதிரான யோசனைகளை பரிசீலிக்க தயார் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி ஹர்ஷ வர்த்தன் தெரிவித்துள்ளார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கான தடை அறிவிக்கை வெளியிடப்பட்ட உடன், மாற்று வழிமுறைகளை பரிசீலிக்கக்கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் ஏராளமான யோசனைகள் வந்தன.
நாங்கள் எந்த குறிப்பிட்ட பிரிவினரின் உணவு பழக்கத்தில் தலையிடும் நோக்கத்திலோ, மாட்டிறைச்சி வர்த்தகத்தை கெடுக்கும் நோக்கத்திலோ இந்த அறிவிக்கையை பிறப்பிக்கவில்லை.
பரிசீலிக்க தயார்
இதை மத்திய அரசின் கவுரவ பிரச்சினையாக நாங்கள் கருதவில்லை. ஆகவே, இந்த தடை அறிவிக்கைக்கு எதிரான யோசனைகளை பரிசீலிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு ஹர்ஷ வர்த்தன் கூறினார்.
-dailythanthi.com