தமிழகத்தில் மேலும் 70 குவாரிகள்: மொத்த மணலையும் சுரண்ட திட்டமா? பாமக கண்டனம்

manalதமிழ்நாடு முழுவதும் 70 இடங்களில் புதிய மணல் குவாரிகள் அமைக்கத் துடிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. சுற்றுச்சூழல் குறித்த அக்கறை இல்லாததால் தான் இப்படி ஒரு முடிவை அரசு எடுத்திருக்கிறது. தமிழகத்தில் அனைத்து ஆறுகளிலும் உள்ள மணலை முழுமையாக சுரண்டி கொள்ளையடித்து விட வேண்டும் என்ற எண்ணத்திலோ என்னவோ, 70 மணல் குவாரிகளை கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் அமைக்க அரசு தீர்மானித்துள்ளது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாட்டை சமாளிக்க 70 இடங்களில் புதிய மணல் குவாரிகளை தொடங்க அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மணல் குவாரிகளால் சுற்றுச்சூழலுக்கு கடுமையாக பாதிப்புகள் ஏற்பட்டு வரும் சூழலில் இவ்வளவு குவாரிகளை திறப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாலும், மாற்று மணல் குறித்து மக்களிடையே இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை என்பதாலும் ஆற்று மணலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது உண்மை தான். இத்தகைய சூழலை அறிவார்ந்த நடவடிக்கைகளின் மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் தான் சமாளிக்க வேண்டும். மாறாக, தமிழ்நாடு முழுவதும் 70 இடங்களில் புதிய மணல் குவாரிகள் அமைக்கத் துடிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. சுற்றுச்சூழல் குறித்த அக்கறை இல்லாததால் தான் இப்படி ஒரு முடிவை அரசு எடுத்திருக்கிறது.

தமிழகத்தில் மணல் குவாரிகள் அரசுடைமையாக்கப்பட்டது முதல் மொத்தம் 38 இடங்களில் மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. இவற்றிலிருந்து எடுக்கப்படும் ஆற்று மணல் தமிழகத்தின் தேவைக்கு போதுமானதாக இருந்தது மட்டுமின்றி, அண்டை மாநிலங்களுக்கும் கடத்திச் செல்லப்பட்டது.  குவாரிகளில் அளவுக்கு அதிகமாக மணல் வெட்டி எடுக்கப்பட்டதும், சுற்றுச்சூழல் அனுமதி காலாவதியானதும் தெரிய வந்ததையடுத்து அனைத்து மணல் குவாரிகளும் மூடப்பட்டன. தொடர் ஆய்வுக்குப் பிறகு 21 குவாரிகள் செயல்படத் தொடங்கிவிட்ட நிலையில், மேலும் 7 மணல் குவாரிகளை திறப்பதற்கும் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இவற்றையும் சேர்த்து மொத்தம் 28 குவாரிகள் செயல்படும் நிலையில், தமிழகத்தின் மணல் தேவையை நிறைவேற்ற இவையே போதுமானவையாகும்.

இவற்றுக்கும் மேலாக 70 புதிய மணல் குவாரிகளை திறக்க வேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை. அதிலும் இவற்றில் பெரும்பாலான குவாரிகள் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படுவதன் நோக்கம் புரியவில்லை. ஏற்கனவே மணல் குவாரிகள் செயல்பட்டு வரும் பகுதிகளில், குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து விட்டது. இதனால் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காகக் கூட நிலத்தடி நீர் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் மேலும் 70 இடங்களில் மணல் குவாரிகள் திறக்கப்பட்டால் மாநிலம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு குறைந்து நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட வழிவகுக்கக்கூடும்.

ஆற்று மணலை எந்திரங்களைக் கொண்டு அள்ளக்கூடாது; 3 அடி ஆழத்திற்கும் மேல் மணல் அள்ளக் கூடாது என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கும் போதிலும், அதை ஆட்சியாளர்களும் மதிப்பதில்லை; மணல் எடுக்கும் ஒப்பந்ததாரர்களும் மதிப்பதில்லை என்பது தான் உண்மை. புதிதாக திறக்கப்படக்கூடிய  மணல் குவாரிகளிலும் இதே நிலை தொடர்ந்தால் தமிழகம் மிகப்பெரிய இயற்கை பேரிடர்களை சந்திக்கும்.

மதுரையில் கடந்த மே 5-ஆம் தேதி நடந்த அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்திலுள்ள அனைத்து மணல் குவாரிகளையும் அரசே ஏற்று நடத்தும் என்றும், அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆற்று மணல் எடுப்பதற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்படும் என்றும் கூறியிருந்தார். இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு 35 நாட்களாகியும் இதுவரை எந்த மணல் குவாரியும் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வரவில்லை. அதேநேரத்தில் தமிழகத்தில் அனைத்து ஆறுகளிலும் உள்ள மணலை முழுமையாக சுரண்டி கொள்ளையடித்து விட வேண்டும் என்ற எண்ணத்திலோ என்னவோ, 70 மணல் குவாரிகளை கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் அமைக்க அரசு தீர்மானித்துள்ளது. கூடுதல் குவாரிகளை அமைப்பதால் மற்ற மாநிலங்களுக்கு மணல் கடத்துவது தான் அதிகரிக்கும்.

எனவே, 70 இடங்களில் புதிய மணல் குவாரிகளை அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். அதுமட்டுமின்றி, மாற்று மணல் உற்பத்தியை அதிகரிக்கவும், அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். படிப்படியாக மணல் குவாரிகளை மூடி, தமிழகத்தை மணல் குவாரி இல்லாத மாநிலமாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை செய்யத் தவறினால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தி, புதிய மணல் குவாரிகளை திறக்கும் முயற்சியை பாட்டாளி மக்கள் கட்சி தடுத்து நிறுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

-nakkheeran.in

TAGS: