மலேசியாவுக்குள் நுழைய வைகோவுக்கு தடை! பாஸ்போர்ட் பறிமுதல்- இன்று இரவு திருப்பி அனுப்பப்படுகிறார்!

vaiko91கோலாலம்பூர்: மலேசியாவுக்குள் நுழைய மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. வைகோவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த மலேசிய அரசு அவரை இன்று இரவு இந்தியாவுக்கு திருப்பி அனுப்புகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியதற்காக வைகோ மீது தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கால் வைகோவின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டிருந்தது.

இவ்வழக்கு விசாரணை முடிவடையாத நிலையில் தம்மை கைது செய்து சிறையில் அடைத்துவிடுங்கள் என சென்னை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வைகோ கோரிக்கை விடுத்தார். இதையடுத்து வைகோவை கைது செய்ய உத்தரவிட்டது சென்னை எழும்பூர் நீதிமன்றம். அதேநேரத்தில் வைகோவுக்கு ஜாமீன் வழங்கவும் நீதிமன்றம் முன்வந்தது.

ஜாமீனில் விடுதலை

ஆனால் வைகோ இதை நிராகரித்து சிறைக்குப் போனார். பின்னர் மதிமுக நிர்வாகிகள் வேண்டுகோளை ஏற்று ஜாமீனில் வெளியே வந்தார் வைகோ. இதனைத் தொடர்ந்து மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமியின் மகள் திருமணத்தில் பங்கேற்பதற்காக வைகோ அந்நாட்டுக்கு சென்றிருந்தார். ஆனால் மலேசியாவுக்கு ஆபத்தானவர்கள் என்ற பட்டியலில் வைகோ பெயர் இருக்கிறது.

மலேசியா தடை

வைகோ, விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் எனக் கூறி தங்களது நாட்டில் நுழைய வைகோவுக்கு மலேசிய அரசு தடை விதித்துள்ளது. மேலும் வைகோ மீது இலங்கையில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் மலேசிய அரசு கூறியுள்ளது.

பாஸ்போர்ட் பறிமுதல்

வைகோவின் பாஸ்போர்ட்டையும் மலேசிய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் வைகோவை இன்று இரவு 10.45 விமானத்தில் இந்தியாவுக்கு வைகோ திருப்பி அனுப்பப்பட இருக்கிறார்.

கேபி, சீமான்

மலேசியாவில் இருந்துதான் விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச செயற்பாட்டாளர் கேபி என்ற குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஏற்கனவே கனடா நாட்டில் இருந்து நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமானும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

TAGS: