ம.பி விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு – போராட்ட களத்தில் குதித்த தமிழக விவசாயிகள்!

farmers-38சென்னை : மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

விவசாயப் பொருள்களுக்கு உரிய விலை, கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேச மாநில விவசாயிகள், கடந்த 2 -ம் தேதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மான்ட்சர் மாவட்டத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே வெடித்த மோதலில் போலீசார் நடத்திய தூப்பாக்கிச்சூட்டில் 5 விவசாயிகள் உயிரிழந்தனர்.

மத்திய பிரதேச அரசின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விவசாயக் கடன் தள்ளுபடி கோரி ஏறத்தாழ 40 நாட்களுக்கும் மேலாக நாள்தோறும் நூதன முறையில் போராட்டம் நடத்தி நாட்டையே திரும்பி பார்க்க வைத்த தமிழக விவசாயிகள் மீண்டும் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர்.

மத்திய அரசை அசைத்துப் பார்த்த தமிழக விவசாயிகள் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே 32 நாட்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி உள்ளனர். பச்சை வேஷ்டித் துண்டுடன் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்இந்திய நதிகள் இணைப்பு சங்கத் தவைர் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர்.

40 நாட்கள் போராட்டத்தில் ஒரு நாள் கூட பிரதமர் விவசாயிகளை சந்தித்து பேசவில்லை. தமிழக முதல்வர் பிரதமரிடம் விவசாயிகளின் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அளித்த வாக்குறுதியை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் இன்று போராட்டத்தை தொடங்கியுள்ள அய்யாகண்ணு செய்தியாளர்களிடம் பேசம் போது, “அரசு எங்களை அரை நிர்வாணம் ஆக்கிவிட்டது,கரும்புக்கு உரிய பணம் தருவதில்லை,ஹைட்ரோ கார்பன் எடுத்து எங்களை வஞ்சிக்கிறது” என்று தெரிவித்தார்.

தேர்தல் போது முதுகெலும்பு என்று சித்தரிக்கும் அரசியல் வாதிகள் , தேர்தலுக்கு பின் கோமாளியாக நினைக்கின்றனர். வரும் 16 ம் தேதி நடைபெற விருக்கும் அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டத்துக்கு பிறகு இந்தப் போராட்டம் இந்தியா முழுவதும் நடைபெறும். விவசாய பொருட்களுக்கு லாபகரமான விலை நிர்ணயிக்கும் வரை விவசாயிக்கு கடனை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் போராட உள்ளதாகவும் அய்யாகண்ணு கூறியுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: