இலங்கையின் மனித உரிமை மீறல்! சர்வதேச நீதிமன்றில் முறையிடக் கோரி மனு!

fishermen1

இலங்கை கடற்படையினரின் மனித உரிமை மீறல் குறித்து, சர்வதேச நீதிமன்றத்தில் முறையிடும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவுக்கு, மத்திய, மாநில அரசுகளிடம் விளக்கம் பெறும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீனவ நல அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் தாக்கல் செய்த மனு:

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே, 1974ல், மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை, இலங்கை கடற்படை மீறி வருகிறது. தமிழக மீனவர்களுக்கு எதிராக, மனித உரிமை மீறலில் இலங்கை கடற்படை ஈடுபட்டு வருகிறது.

மீனவர்களுக்கான பாரம்பரிய உரிமையை, பறித்து விட முடியாது. அவர்களுக்கான பாரம்பரிய உரிமைகள், இந்தியாவின் வெளியுறவு துறை செயலர், இலங்கை அரசுக்கு அனுப்பிய கடிதம் மூலம் பறிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்த போது, இந்த கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கவில்லை.

எனவே, நம் மீனவர்களுக்கான பாரம்பரிய உரிமையை பறிக்கும் வகையிலான, இந்திய வெளியுறவு துறை செயலரின் கடிதம் செல்லாது.

இந்த கடிதத்தை சாதகமாக எடுத்துக் கொண்டு, பாக் ஜலசந்தியில் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்குகின்றனர்.

கடந்த, 1983 முதல், 2013 வரை, 111 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; 439 பேர் காயமடைந்துள்ளனர்; 16 பேர் காணாமல் போயுள்ளனர்.

மீனவர்களின், 136 படகுகளை பறிமுதல் செய்த, இலங்கை கடற்படையினர், அவற்றை விடுவிக்கவில்லை.

மீனவர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்குவதற்காக, மத்திய அரசு, இந்த விஷயத்தில் தலையிடும்படி, தமிழக அரசும் கோரி வருகிறது. ஆனால், மத்திய அரசு, அமைதியாக இருக்கிறது.

இலங்கை கடற்படையினரால் நடத்தப்படும் மனித உரிமை மீறல்களை, சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன்; எந்த பதிலும் இல்லை.

இது குறித்து, மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் ராகவாச்சாரி, ”இதுபோன்ற ஒரு வழக்கில், சர்வதேச நீதிமன்றத்தை அணுகும்படி, மத்திய அரசுக்கு, குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை, உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது,”என்றார்.

மனுவுக்கு விளக்கம் பெறும்படி, மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் சீனிவாசன், மாநில அரசு சார்பில் ஆஜரான அரசு பிளீடர் எம்.கே.சுப்ரமணியனுக்கு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

விசாரணையை, ஜூலை, 17க்கு தள்ளி வைத்தது.

– Dina Malar

TAGS: