அதளபாதாளத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் – இந்த ஆண்டும் ஜூன் 12ல் நீர் திறக்க முடியாது

mettur-dam362

சேலம்: குறுவை சாகுபடிக்கா மேட்டூர் அணையில் இருந்து நடப்பாண்டும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விடுவதற்கு வாய்ப்பில்லை என்பதால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையில் 90 அடி தண்ணீர் இருந்தால் மட்டுமே பாசனத்திற்கு திறக்கப்படுவது வழக்கம். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் நாளாக பின்பற்றப்படுகிறது.

காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கும் மட்டுமல்லாது கரையோர மாவட்டங்களான நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்கள் குடிநீருக்காக மேட்டூர் அணை தண்ணீரை மட்டுமே நம்பியுள்ளன.

உச்சநீதிமன்றம் உத்தரவுபடி கர்நாடக அரசு அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடாததாலும், பருவமழை பொய்த்து போனதாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது.

ஜூன் 12ல் அணை திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக 84வது ஆண்டாக தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது மேட்டூர் அணையில் 24 அடி மட்டுமே தண்ணீர் உள்ளதால் ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட வாய்ப்பில்லை. கடந்த 86 ஆண்டுகளில் 16 ஆண்டுகள் மட்டும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை திறப்பு

கடைசியாக 2006 மற்றும் 2008-ம் ஆண்டில் மட்டுமே ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு அணை நிரம்பி வழிந்ததால் ஜூன் 8ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை.

காலதாமதம்

கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதுமான நீர்இருப்பு இல்லாததால் 3 மாதம் காலதாமதமாக செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையும் பொய்த்துப்போனது. கர்நாடகாவும் தண்ணீர் தராமல் ஏமாற்றியதால் கடந்த ஆண்டு மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து முற்றிலும் குறைந்து போனது.

விவசாயிகள் தற்கொலை

அணையில் தண்ணீர் இல்லாத காரணத்தால் தண்ணீரை நம்பி சாகுபடி செய்த விவசாயிகள் கருகிய பயிர்களைக் கண்டு தற்கொலை செய்து கொண்டனர். விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தியும் எந்தவித பலனும் இல்லை.

பொய்த்துப்போன சாகுபடி

தஞ்சாவூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேர், திருவாரூர் மாவட்டத்தில் 36 ஆயிரம் ஹெக்டேர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 35 ஆயிரம் ஹெக்டேர் என மொத்தம் ஏறத்தாழ 1.10 லட்சம் ஹெக்டேரில் குறுவை நெல் சாகுபடி நடைபெறும். ஆறாவது ஆண்டாக குறுவை சாகுபடி பொய்த்துப்போனது.

விவசாயிகள் கவலை

காவிரி டெல்டா பகுதிகள் பாலைவனமாக மாறுவதை குறித்து எந்த கவலையும் இல்லாத அரசாக தமிழக அரசு உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை ஏதாவது அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

-http://tamil.oneindia.com

TAGS: