சசிகலா அணியை ஆதரிக்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா?

vk-sasikalaசசிகலா அணியை ஆதரிக்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக, தனியார் டி.வி.யில் வெளியான ரகசிய வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புதுடெல்லி,

சசிகலா அணியை ஆதரிக்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக, தனியார் டி.வி.யில் வெளியான ரகசிய வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பரபரப்பான வீடியோ காட்சி

‘டைம்ஸ் நவ்’ ஆங்கில தொலைக்காட்சியில், மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் பேசுவது போன்ற, ரகசியமாக பதிவு செய்யப்பட்டது என்று கூறி நேற்று இரவு வீடியோ காட்சி ஒளிபரப்பானது.

ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டபோது சசிகலா அணிக்கு ஆதரவாக செயல்படுவதற்காக சென்னையை அடுத்த கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டு இருந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது பற்றி சரவணன் கூறுவது போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்று இருந்தன.

ரூ.10 கோடி

சொந்த ஊரில் இருந்து வந்த எம்.எல்.ஏ.க்களை விமானநிலையத்தில் சசிகலா அணியினர் மடக்கியதாகவும், அங்கு அவர்களை பஸ்களில் ஏற்றியபோது எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.2 கோடி என பேரம் பேசியதாகவும், பின்னர் எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் இருந்து கவர்னரை சந்திக்க சென்ற போது பேரம் ரூ.4 கோடி ஆனது என்றும், கூவத்தூர் போய்ச் சேர்ந்த போது எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.6 கோடி தர முன்வந்ததாகவும் சரவணன் கூறுவது போன்று அந்த காட்சிகள் இருந்தன.

அ.தி.மு.க.வை ஆதரிக்கும் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.10 கோடி கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் மற்றவர்களுக்கு அந்த அளவுக்கு பணம் வரவில்லை என்றும் அவர் கூறுவது போன்ற காட்சியும் வீடியோவில் இடம் பெற்று இருந்தது.

இதேபோன்று சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. கனகராஜ் தெரிவித்ததாக கூறியும் வீடியோ காட்சி ஒளிபரப்பானது.

சூடான விவாதம்

சரவணன் கூவத்தூர் விடுதியில் இருந்து தப்பி வந்து ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தவர் என்பதால், அவர் தெரிவித்ததாக வெளியான தகவல் பற்றி பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் சூடாக விவாதிக்கப்பட்டது.

ஏராளமானவர்கள் காரசாரமாக கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். அரசியல் சூதாட்டம் என்றும், வாக்களித்தவர்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும் சிலர் கொந்தளிப்புடன் கருத்து தெரிவித்தனர்.

சரவணன் எம்.எல்.ஏ. கருத்து

இந்த ரகசிய வீடியோ குறித்து சரவணன் எம்.எல்.ஏ.வை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறியதாவது:–

கூவத்தூருக்கு என்னைப் போன்று அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் எந்த காரணமும் சொல்லாமல் அழைத்துச் சென்றார்கள். அங்கு சென்றபின் நடந்த வி‌ஷயங்களை அறிந்தேன். அதற்குள் என்னை தொடர்பு கொண்ட தொகுதி மக்கள், நீங்கள் பன்னீர்செல்வம் அணிக்கு செல்ல வேண்டும் என்று கூறினர். அந்த அடிப்படையில் பன்னீர் செல்வம் அணியில் என்னை இணைத்துக்கொண்டேன். தொடர்ந்து அங்கிருந்து மக்கள் பணியாற்றியும் வருகிறேன்.

பணம் வாங்கவில்லை

இந்த சூழ்நிலையில் 3 மாதத்திற்கு முன்பு, எடுக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு வீடியோவை அப்போதே வெளியிடாமல் தற்போது வெளியிடுவது ஏன்? அதில் கூறப்பட்டுள்ள எந்த கருத்தையும் நான் சொல்லவில்லை. எனது குரலைப்போல் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். கூவத்தூரில் எனக்கு பணம் தருவதாக யாரும் சொல்லவில்லை. நானும் யாரிடமும் பணம் வாங்கவில்லை.

கடந்த 5 தினங்களுக்கு முன்பு கூட பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசிய கூட்டத்தில் நானும் கலந்துகொண்டேன். அப்போது நான், பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகி விட்டதாக வாட்ஸ்–அப்பில் தகவல் பரவியது. இது போன்ற பொய்யான தகவலை ஏன் பரப்புகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நான் தொடர்ந்து பன்னீர்செல்வத்துடன் இருப்பேன். இல்லாவிட்டால் எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முரண்பாடு

தொடர்ந்து அவரிடம், ‘‘நீங்கள் பன்னீர் செல்வம் அணியில் சேர்ந்தபின் பேட்டி அளித்த போது, கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களை விலை பேசுகிறார்கள் என்றும், நான் விலைபோகாமல் பன்னீர் செல்வத்துடன் இணைந்து விட்டேன் என்றும் கூறினீர்கள். ஆனால் இப்போது யாரும் பணம் கொடுப்பதாக கூறவில்லை என்று சொல்வது முரண்டுபாடாக இருக்கிறதே என்று கேட்டதற்கு, ‘‘‘எனக்கு பணம் கொடுப்பதாக யாரும் சொல்லவில்லை. இது தான் உண்மை’’ என்றார்.

தமிமுன் அன்சாரி

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. ‘‘தினத்தந்தி’’ நிருபரிடம் கூறியதாவது:–

இன்று சரவணன் எம்.எல்.ஏ. கூவத்தூரில் பல அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பண பட்டுவாடா செய்ததாக கூறியிருக்கிறார். இது ‘‘டைம்ஸ் நவ்’’ ஆங்கில தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் எனக்கு ரூ.10 கோடி கொடுக்கப்பட்டதாக நாக்கில் நரம்பு இல்லாமல் கூறி இருக்கிறார்.

நான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருந்த கூவத்தூர் முகாமிற்கு போகாதவன். இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கேட்டு அமைச்சர் செங்கோட்டையன் எங்கள் அலுவலகத்துக்கு வந்தபோது எங்களுக்கு ‘‘கரன்சி பாலிடிக்ஸ்’’ பிடிக்காது என்று கூறினேன்.

அவரும் உங்களைப்பற்றி எங்களுக்கு தெரியும் என்றார். அவரிடம் நான், ‘உங்களுக்கு ஆதரவு தருகிறோம். அதற்கு நன்றி கடனாக எதிர்காலத்தில் 2 வாரிய தலைவர்கள் பதவியை தாருங்கள்’ என்று கூறினேன். அப்போது எங்கள் கட்சி தலைவர்கள் உடன் இருந்தனர்.

வேதனை

இப்படி நான் பேசியது இறைவன் மீது ஆணையாக உண்மை. இதைத்தவிர அப்போது நாங்கள் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை. இப்போது சரவணன் எம்.எல்.ஏ. எங்கள் மீது கூறிய குற்றச்சாட்டை 100 சதவீதம் நிராகரிக்கிறோம். இதுதொடர்பாக சட்ட ரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்போகிறோம். இதுபோன்ற அவதூறுகளை நினைக்கும்போது ஏன் அரசியலுக்கு வந்தோம் என்று மனம் வேதனைப்படுகிறது. அ.தி.மு.க.வில் நடக்கும் உட்கட்சி பிரச்சினைகளால் தோழமை கட்சியான நாங்களும் அநியாயமாக அவதூறுகளுக்கு உள்ளானது வேதனையாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தனியரசு எம்.எல்.ஏ.

இந்த வீடியோ விவகாரம் குறித்து கொங்கு இளைஞர் பேரவை எம்.எல்.ஏ. (காங்கேயம் தொகுதி) தனியரசுவிடம் செல்போனில் கருத்து கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், ‘‘இதுதொடர்பாக வெளியான செய்தியை நான் பார்க்கவில்லை. யார்? என்ன சொன்னார்கள் என்ற தகவல் எனக்கு தெரியாது. நான் வெளியூரில் இருக்கிறேன்’’ என்றார்.

-dailythanthi.com

TAGS: