கையை நீட்டி காசு வாங்கியாச்சு.. பாடாய்படுத்தும் கருமாந்திர அதிமுக அரசியல்!

money45566சென்னை : கட்சிகள் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட்ட சிலர் செய்த தவறுகள் இன்று அனைத்து தரப்பு மக்களையும் அதிமுகவின் முக்கோண அரசியலை வேடிக்கை பார்க்கும் நிலைக்கு தள்ளியுள்ளது.

தமிழகத்தில் திருமங்கலம் இடைத்தேர்தல் தான் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை வளர்த்துவிட்டது. அதுதான் முக்கிய ஆரம்பம். அதற்கு முன்பு வரை தேர்தல் என்றால் மக்களுக்கு சலுகைகளை அறிவிக்கும் நடைமுறையைத் தான் அரசியல் கட்சியினர் வைத்திருந்தனர்.

வாக்குப்பதிவு நாளன்று காரில் அழைத்து சென்று ஓட்டு போட வைப்பது, பரிசுப் பொருட்களை அளிப்பது, மதுபான சப்ளை செய்வது என்று இலை மறைவு காய் மறைவாக இவையெல்லாம் நடந்து வந்தன. இந்நிலையில் ஓட்டு போட முன்கூட்டியே பணம் கொ1க்கும் கலாச்சாரம் தலைதூக்கியதில் இருந்து தேர்தல் என்றாலே வாக்காளர்களுக்கு கொண்டாட்டம் தான் என்ற நிலையை ஏற்படுத்தி விட்டனர் அரசியல்வாதிகள்.

இந்த அவமானங்களுக்கெல்லாம் சாட்சி தான் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல். அதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். இன்று அதிமுகவின் அலங்கோலங்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது தமிழகம்.

யார் காரணம்? ஓட்டுக்கு பணம் வாங்கும் பெரும்பாலான வாக்காளர்களால் தான், இன்று நாட்டில் நடக்கும் அரசியல் நிலையை தட்டிக் கேட்க முடியாத திராணியற்றவர்களாக மக்கள் இருக்கின்றனர். பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டுவிட்டதோடு வாக்காளரின் கடமை முடிந்து விடுகிறது. அதற்குப் பின்னர் அந்தத் தொகுதியில் வெற்றி பெறும் எம்எல்ஏ தான் 5 ஆண்டுகளுக்கு ராஜா.

எங்கே ஜனநாயகம்? ஓட்டுக்கு பணம் கொடுக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் மாறி மாறி அட்வைஸ் செய்கிறது. ஆனால் அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு காகித காந்தியை வாங்கி சுருட்டி பையில் கமுக்கமாக வைத்து விட்டு ஜனநாயகத்தை அடக்கம் செய்து விடுகின்றனர் சில வாக்காளர்கள்.

3 முதல்வர்களால் என்ன பயன்? அதிமுக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து சிறப்பான ஆட்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். ஆனால் அதிகாரப் போட்டியால் அவருக்குப் பின்னர் சசிகலா முதல்வராக வேண்டிய நிலைமை ஏற்பட்டு, அதிர்ஷ்டவசமாக தமிழகம் தப்பியது. பழனிசாமி முதல்வரானார். சசிகலாவின் ஆட்சியை தான் பழனிசாமி நடத்துகிறார், அவர் துரோகி நாங்கள் தான் உண்மையான அதிமுக என்றெல்லாம் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். முதல்வர் பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கூட ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தனர்.

குட்டு உடைந்தது இந்நிலையில் கூவத்தூர் பேரம் தொடர்பாக எம்எல்ஏ சரவணன் பேசியதாக வெளியான வீடியோவால் இவர்களின் குட்டு அம்பலமாகியுள்ளது. அதிமுகவின் எதிர் அணியாக செயல்படும் சரவணன் இப்படி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில் சட்டப்பேரவையில் வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கமுக்கமான அதிமுக கோஷ்டிகள்

ஆனால் வழக்கம் போல திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமே சரவணன் வீடியோ சர்ச்சை குறித்த கேள்வி எழுப்பி அமளியை கிளப்பின. அந்த வீடியோவில் இருப்பது தான் தான் என்றும் ஆனால் குரல் அவருடையதல்ல என்றும் சரவணன் கூறிய பதிலை ஏற்றதால் பேரவையில் விவாதிக்க வேண்டாம் என்று சபாநாயகர் தனபால் அறிவித்துவிட்டார். பேரவையில் சர்ச்சைக்குள்ளான எம்எல்ஏ சரவணன் இருந்த போதும் அது குறித்து விளக்கமளிக்கவில்லை. இதோடு எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையில் சட்டப்பேரவையில் நடைபெற்ற மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தது.

தினகரன் கோஷ்டிக்கும்

பொறுப்பு தாங்கள் தான் உண்மையான அதிமுக என்று எதிர் எதிர் அணியில் போட்டி போட்டுக் கொண்டிருந்த அதிமுக கோஷ்டியினர், அவர்களின் குட்டு அம்பலப்பட்டு விடும் என்ற நிலைமை வந்தவுடன் ஒன்று கூடிவிட்டனர். மற்றொருபுறம் சபாநாயகர், துணை சபாநாயகர் இல்லாத நேரத்தில் அவையை நடத்தும் மாற்றுத் தலைவர்களாக யார் யார் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் தெரியுமா. தினகரன் தான் உண்மையான அதிமுக என்று அவரின் துதி பாடும் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பதிவிபடுத்தும் பாடு

ஆக மொத்தம் அதிமுகவின் முக்கோண அரசியலில் அரசியல்வாதிகள் நன்றாக அரசியல் செய்ய, அதை மக்கள் வேறு வழியில்லாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். பணமும், பதவியும் அரசியல்வாதிகளை எத்தனை பாடுபடுத்துகிறது என்பதற்கான முன் உதாரணமாகக் கூட இதை சொல்லலாம்.

tamil.oneindia.com

TAGS: