ஆறாவது ஆண்டாக இந்த ஆண்டும் வழக்கமான நாளில் மேட்டூர் ஆணை திறக்கப்படாததால் காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், குறுவை சாகுபடியை எதிர்பார்ப்பதைக் கைவிடவேண்டும் என்ற ஆலோசனைகளும் முன்வைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதியன்று சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கத்திலிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். சேலம், நாமக்கல், ஈரோடு, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் உள்பட 12 மாவட்டங்கள், இந்த நீரின் மூலம் குறுவை சாகுபடி செய்வது வழக்கம். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருக்கும்போதுதான், ஜூன் 12ஆம் தேதியன்று தண்ணீர் திறக்க முடியும். ஆனால், இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதியன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 23.68 அடியாக மட்டுமே இருந்தது. இதனால், அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக நீரைத் திறக்க முடியவில்லை.
காவிரி டெல்டா பகுதியில் குறுவைப் பருவத்தில், காவிரி நீரை நம்பி நெற்பயிர்கள் 3.15 லட்சம் ஏக்கரில் பயிர்செய்யப்படுகின்றன. பயறு வகைப் பயிர்கள் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 30 ஆயிரம் ஏக்கரிலும் பயிர்செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் இல்லாத காரணத்தால் ஆழ்துளை கிணறுகளின் மூலம் நெற்பயிரின் சாகுபடி 1.6 லட்சம் ஏக்கரில் மட்டுமே செய்ய முடியும் என தமிழக அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. மேலும் 1.3 லட்சம் ஏக்கரில் பயறு வகைகளைப் பயிரிட ஊக்குவிக்கவும் தமிழக அரசு முடிவுசெய்திருக்கிறது.
நிலத்தடி நீரைப் பயன்படுத்த ஏதுவாக, 12 மணி நேரம் மும்முனை இலவச மின்சாரம் வழங்கவும் அரசு உத்தரவிட்டிருக்கிறது.
அரசின் அணுகுமுறை சரியா?
“இது சரியான போக்கு அல்ல. ஏற்கனவே விவசாயிகள் கோடை மழையையும் நிலத்தடி நீரையும் சார்ந்து கோடை சாகுபடி செய்திருக்கின்றனர். அதனை அறுவடை செய்வதற்கு முன்பாகவே இப்படி ஒரு திட்டத்தை தமிழக அரசு அறிவிக்கிறது. இம்மாதிரி அறிவிப்புகள் நிலத்தடி நீரே இல்லாமல் செய்துவிடும்” என்கிறார் காவிரி டெல்டா விவசாயிகள் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். ரங்கநாதன்.
ஒரு டிஎம்சி தண்ணீருக்கு 7,000 ஏக்கரில் விவசாயம் செய்யலாம். காவிரி நடுவர் மன்ற ஆணையில் காவிரியில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நீர் 192 டிஎம்சி. அப்படியானால் நமக்குக் கிடைக்கும் நீரில் அதிகபட்சமாக 12 லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்யலாம். ஆனால், நாம் 19 லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்யத் திட்டமிடுகிறோம் என்று சுட்டிக்காட்டுகிறார் ரங்கநாதன்.
குறுவை சாகுபடி காவிரி டெல்டாவில் 3.15 லட்சம் ஏக்கரில் பயிர் செய்யப்படுகின்றன என்று அரசு சொல்வதை அவர் ஏற்கவில்லை. மிக மிக அரிதான காலகட்டங்களில் மட்டுமே அந்த அளவுக்கு குறுவை விவசாயம் செய்யப்பட்டது என்கிறார் ரங்கநாதன்.
ஆகவே, குறுவை சாகுபடி குறித்து தீவிர பரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்கிறார் அவர். மேலும், நெல் போன்ற தாவரங்களுக்கு அதிக நீர் தேவைப்படுவதால், அவற்றுக்குப் பதிலாக பருத்தி போன்ற தாவரங்களைப் பயிரிடுவது குறித்தும் நாம் யோசிக்க வேண்டும் என்கிறார் ரங்கநாதன்.
காவிரி டெல்டாவின் பல பகுதிகளில் தற்போதே 300 அடிக்கு மேல் ஆழ்துளை கிணறுகளைத் தோண்டினால்தான் தண்ணீர் கிடைக்கும் என்ற நிலை இருக்கிறது. பல இடங்களில் தண்ணீர் உவர்ப்புத்தன்மையுடனும் இருக்கிறது.
மாற்றுப் பயிர்தான் மாற்று வழியா?
அதனால், 150 நாள் பயிராக வளர்க்கப்படும் சம்பாவுக்கு தண்ணீரைச் சேமிக்க வேண்டும். அதன் மூலம்தான் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் அதிக பயனடைகிறார்கள் என்பதையும் ரங்கநாதன் சுட்டிக்காட்டுகிறார்.
ஆனால், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட செயலர் சாமிவேல் ராஜன், சம்பா குறுவை சாகுபடி மட்டும்தான் வடகிழக்குப் பருவமழையின் பாதிப்பின்றி செய்யமுடியும் என்கிறார். மாற்றுப் பயிர் எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் சாத்தியமில்லை என்கிறார் அவர்.
அரசு தற்போது குறுவையை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகளை அளிக்கிறது. உழவுப் பணிகளை உடனே மேற்கொள்ள ஏக்கருக்கு 500 ரூபாய், இயந்திரங்கள் மூலம் நெல் நடவு செய்ய ஏக்கருக்கு 4000 ரூபாய், பிவிசி குழாய்கள் வாங்க யூனிட்டிற்கு 21 ஆயிரம் ரூபாய் மானியம் என பல்வேறு மானியங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால், குறுவைப் பயிருக்குத் தேவையான நிலத்தடி நீர் கிடைக்காமலோ, தென் – மேற்கு பருவமழைக் காலத்தில் கிடைக்க வேண்டிய மழை சரியாகக் கிடைக்காமல் போனாலோ, மீண்டும் அரசுதான் நெருக்கடியை எதிர்கொள்ளும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் ரங்கநாதன்.
தண்ணீருக்கு ஏன் தட்டுப்பாடு?
ஆனால், காவிரி டெல்டா பகுதி விவசாயம் குறித்துப் பேசுபவர்கள் அனைவரும் சுட்டிக்காட்டும் ஒரு விஷயம், நடுவர் மன்ற உத்தரவுப்படி கர்நாடகத்திடமிருந்து காவிரி நீரைப் பெற வேண்டும் என்பது.
“கடந்த இருபதாண்டுகளாகவே, பெரிய மழை இருந்தால் தவிர ஜூன் 12ஆம் தேதி காவிரியில் தண்ணீர் திறக்கும் அளவுக்கு மேட்டூர் அணையில் நீர் இருப்பதில்லை. இதற்குக் காரணம் கோடை காலங்களில் கர்நாடகம் தண்ணீரைப் பயன்படுத்துவதுதான். முதலில் அதை நிறுத்த வேண்டும்” என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலர் கே பாலகிருஷ்ணன்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஜூன் 12ஆம் தேதி அணை திறக்கப்பட்டால் ஜனவரி 12ஆம் தேதி மூடப்பட்டுவிடுகிறது. கோடை காலத்தில் அணை திறக்கப்படுவதில்லை.
“தமிழகத்திற்கு வினாடிக்கு 2000 கன அடி நீரை திறந்துவிட வேண்டுமென கடந்த மார்ச் 21ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் கூறியது. கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கழிந்துவிட்டன. ஆனால், தண்ணீர் திறக்கப்படவேயில்லை. அந்தத் தண்ணீர் வந்திருந்தால் இப்போது பயன்பட்டிருக்கும்” என்கிறார் ரங்கநாதன்.
தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாகவும் மேட்டூர் அணை கட்டப்பட்ட பிறகு 58வது முறையாகவும் இந்த ஆண்டு, ஜூன் 12ஆம் தேதியன்று மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. -BBC_Tamil