மே.வங்கத்தில் கூர்க்காலாந்து போராட்டம் உச்சகட்டம்.. துப்பாக்கி சூட்டில் போலீஸ்காரர் உட்பட மூவர் பலி

darjeeling-unrest3கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தின் வடக்கு நகரம் டார்ஜிலிங். மலைப்பகுதியான இது கோடை வாசஸ்தலமாக பல லட்சம் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. ஆனால் அங்கு இப்போது உஷ்ணம் சுட்டெரிக்கிறது. மலைப்பகுதியில் கிடையாது, மக்களின் மனங்களில்.

மம்தா பானர்ஜி அரசு எடுத்த ஒரு முடிவுதான் இதற்கு காரணம். மேற்கு வங்க மாநிலத்தில் பத்தாம் வகுப்பு வரை வங்காள மொழியை கட்டாயப் பாடமாக பயில வேண்டும் என அரசு உத்தரவிட்டது. ஆனால் கலாசாரத்திலும், மொழிப்பற்றிலும் மாறுபட்ட டார்ஜிலிங் மக்களோ, இப்படி வங்கமொழியை திணிப்பதற்கு பதில் எங்களை பிரித்து தனி மாநிலமாக்கிவிடுங்கள் என கோரி போராட்டத்தில் குதித்துவிட்டனர்.

தங்களது பகுதிக்கு கூர்க்காலாந்து என பெயர் சூட்டியுள்ளார். பல வருடங்களாக இந்த கூர்க்காலாந்து தனி மாநில விவகாரம் நீறுபூத்த நெருப்பாகத்தான் உள்ளது. இப்போது மொழி பிரச்சினையால் எரிமலையாக வெடித்துவிட்டது.

முழு அடைப்பு

இந்த பிரச்சினையில் தீவிரம் காட்டும் கூர்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சி, கந்த 12ம் தேதியில் இருந்து கூர்காலாந்து பகுதியில் முழு அடைப்புக்கு அழைப்புவிடுத்தது. இதில் வன்முறை வெடித்தது. எனவே அப்பகுதியில் ராணுவம், துணை ராணுவம் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டம் நடத்திய அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆறாவது நாளாக போராட்டம்

ஆறாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்வதால் டார்ஜிலிங் முற்றிலும் முடங்கியுள்ளது. சுற்றுலா வந்திருந்த ஏராளமான பேர் செய்வதறியாது திகைத்து ஹோட்டல் அறைகளில் முடங்கியுள்ளனர். சுற்றுலாவை நம்பியிருந்த அந்த நகரம் தற்போது சுற்றுலா பயணிகள் வரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

துப்பாக்கி சூடு

இன்று டார்ஜிலிங் நகரில் பெும் வன்முறை வெடித்தது. மோதலின்போது, கூர்கா ஜனமுக்தி மோர்சா கட்சியை சேர்ந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். போராட்டக்காரர்களின் தாக்குதலில் இன்று படுகாயமடைந்த ரிசர்வ் படை போலீஸ் கமாண்டரான கிரண் தமாங் என்பவர் சிலிகுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ராணுவம் குவிப்பு

இந்த சம்பவங்களால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. கலவரக்காரர்களை ஒடுக்க ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ரப்பர் குண்டுகளை கொண்டு அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறார்கள்.

tamil.oneindia.com

TAGS: