உலகை ஒருங்கிணைப்பதில் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது என்று பிரதமர் மோடி யோகா தின நிகழ்ச்சியில் பேசினார்.
புதுடெல்லி,
உடல் நலத்துக்கும், மன நலத்துக்கும் உதவுகிற யோகா கலை உலகமெங்கும் பரவும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படும் என ஐ.நா. சபை அறிவித்தது. 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ந் தேதி வெளியிடப்பட்ட அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, 2015-ம் ஆண்டு முதல் யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், மூன்றாவது சர்வதேச யோகா தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் உள்ள ரமாபாய் அம்பேத்கர் மைதானத்தில் இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கி, 7.50 வரை, 51 ஆயிரம் பேர் கலந்து கொண்ட பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மாநில கவர்னர் ராம்நாயக், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் மந்திரிகள் பங்கேற்று யோகா பயிற்சி செய்தனர். இதில் இந்தியா உட்பட 84 நாடுகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். யோகா தின நிகழ்ச்சியின் போது கனமழை பெய்தது. இருப்பினும் மழையை பொருட்படுத்தாது பல்லாயிரக்கணக்கானோர் வந்து கலந்து கொண்டனர்.
பின்னர் இந்த யோகா தின விழாவில் பேசிய பிரதமர் மோடி பேசியதாவது:- உலகம் முழுவதும் உள்ள யோகா விரும்பிகளையும் இங்கு கூடியிருப்பவர்களையும் நான் வரவேற்கிறேன். தற்போது, பலருடைய வாழ்க்கையில் ஒரு அங்கமாக யோகா உருவெடுத்துள்ளது. இந்தியாவுக்கு வெளியே யோகாவின் புகழ் பெரிய அளவில் உள்ளது. யோகா உலகை இந்தியாவுடன் உலகை இணைக்கிறது. உலகை ஒருங்கிணைப்பதில் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த 3 ஆண்டுகளில் யோகா மையங்கள் அதிகரித்துள்ளன. யோகா ஆசிரியர்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்திய யோகா ஆசிரியர்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. உலக மக்கள் யோகாவை கற்றுக்கொள்ள இந்தியர்களை எதிர்பார்க்கின்றனர். யோகா செய்வது உங்கள் உடல் நிலைக்கு எந்த செலவும் இல்லாமல் காப்பீடு செய்வது போல் ஆகும். 24 மணி நேரமும் யோகா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 50 முதல் 60 நிமிடங்கள் செய்வதே பலன் அளிக்கும். ஏனெனில் உடல் மனது, அறிவுக்கு யோகா நல்லிணக்கத்தை அளிக்கிறது. உணவுக்கு சுவை அளிப்பது மட்டும் அல்லாமல் உடல் நலனுக்கு பயன் அளிக்கவும் உப்பு எவ்வளவு முக்கியமோ அதுபோல யோகாவும் வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றாகும்” இவ்வாறு அவர் கூறினார்.
குஜராத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா கலந்து கொண்டு யோகா செய்தார். இந்த நிகழ்ச்சியில், யோகா குரு பாபா ராம்தேவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதுடில்லியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு மற்றும் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பொறுப்பாளுநர் வித்யாசாகர் ராவ் பங்கேற்றுள்ளார். இந்நிகழ்ச்சியில் 5000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
-dailythanthi.com