விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என்று மத்திய மந்திரி அருண்ஜெட்லி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் நிலவும் கடும் வறட்சி காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லிக்கு சென்று பல நாட்கள் போராடினார்கள். இதேபோல் மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே மராட்டியம், உத்தரபிரதேசம், பஞ்சாப் மாநில அரசுகள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்து உள்ளன.
இதைத்தொடர்ந்து மத்திய அரசு நாடு முழுவதும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய முன்வருமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதுகுறித்து டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-
தள்ளுபடி செய்ய முடியாது
விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அப்படி ஒரு யோசனை அரசிடம் இல்லை. மாநில அரசுகளின் விவசாயக்கடன் ரத்து அறிவிப்பு தொடர்பாக நான் எதுவும் கூற விரும்பவில்லை. நிதி பற்றாக்குறையை சீரமைப்பது உள்ளிட்டவற்றிலேயே மத்திய அரசு கவனம் செலுத்துகிறது.
கடன் தள்ளுபடி குறித்து கடந்த வாரம் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவித்தேன். விவசாய கடன்களை ரத்து செய்யும் மாநில அரசுகள், அதற்கான நிதி ஆதாரங்களை அவர்களே திரட்டிக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறது. கடந்த 2008-ம் ஆண்டு மத்திய அரசு ரூ.74 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளது.
இவ்வாறு அருண்ஜெட்லி தெரிவித்தார்.
-dailythanthi.com