சீனாக்காரன் ஏன் நம் மீது இவ்வளவு “காண்டாக” இருக்கிறான்.. இதுதாங்க காரணம்!

india china boder

டெல்லி: 1962ம் ஆண்டு இருந்த இந்தியா இப்போது உண்மையிலேயே இல்லை. அப்போது இருந்ததை விட பல மடங்கு பொருளாதார வளர்ச்சி மற்றும் ராணுவ பலத்துடன் இந்தியா விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து வியாபித்து நிற்பதுதான் சீனாவை கடும் டென்ஷனுக்குள்ளாக்கியுள்ளது. இதனால்தான் சீனா நம் மீது காரணமே இல்லாமல் கோபம் காட்டுவதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவும் இதையேதான் கூறுகிறது. உண்மையிலேயே இந்தியா பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. சீனாவை பின்னுக்குத் தள்ளும் வகையில் இந்தியாவின் வளர்ச்சி அபரீதமாக இருப்பதாக பென்டகன் கூறியுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை அது அமெரிக்க அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

இது மட்டுமல் அல்லாமல், உலக நாடுகளுடன் இந்தியா இதுவரை இல்லாத அளவு நெருங்கி வருவதையும், பல உலக நாடுகள் இந்தியா மீது பாசத்தைப் பொழிவதும் கூட சீனாவுக்குப் பிடிக்கவில்லை. இடையில் விட்டுப் போயிருந்த ரஷ்ய நட்பையும் இந்தியா மீண்டும் வலுவாக்கி விட்டதும் சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானுக்கு சம்மட்டி அடி

ஒரு பக்கம் ஆப்கானிஸ்தானுடன் உறவு பாராட்டி பாகிஸ்தானை உலக நாடுகளிடம் தனிமைப்படுத்தும் இந்தியாவின் முயற்சிக்கு பெரும் வெற்றி கிடைத்து வருவதும் சீனாவின் கோபத்துக்கு ஒரு காரணம்.

பொருளதார சக்தி

உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்தி என்ற நிலையை நோக்கி சீனா போய்க் கொண்டுள்ளது. ஆனாலும் அதற்கு கடும் போட்டியாக இந்தியாவும் வளர்ந்து வருவது சீனாவை கவலைக்குள்ளாக்கியுள்ளது. இது இன்னொரு எரிச்சல்.

ராணுவ ரீதியிலும்

பொருளாதார ரீதியில் இந்தியா சுய சார்பை நோக்கி போய்க் கொண்டுள்ள அதேசமயத்தில் ராணுவ ரீதியிலும், விண்வெளி ஆய்விலும் இந்தியா கலக்கிக் கொண்டிருப்பதும் சீனாவை எரிச்சலுக்குள்ளாக்கியுள்ள இன்னொரு விஷயமாகும்.

சீனாவை ஒதுக்கி விட்டு

பல சர்வதேச நாடுகள் சீனாவை விட இந்தியாவை முக்கியமாக கருதுவதும் கூட சீனாவுக்குப் பிடிக்கவில்லை. அதையும் அது வெறுக்கிறது. இதுவும் கூட இந்தியா மீது சீனா ஆத்திரம் கொள்ள இன்னொரு காரணம்.

ஆயுதக் குவிப்பு

இந்திய எல்லையில் கடந்த சில வருடங்களாகவே தனது படைகளை சீனா அதிகரித்து வருகிறது. மிக நவீனமான சிசிஎஸ்-5 ரக அணு ஆயுத ஏவுகணைகளையும் நிலை நிறுத்தியுள்ளது. எல்லையில் பாராசூட் படையினரின் எண்ணிக்கையையும் போர் விமானங்களின் எண்ணிக்கையயும் அதிகரித்துள்ளது சீனா. மத்திய சீனாவின் குயின்காய் மாகாணத்தில் டெலின்ஹா, டா குவைடாம் ஆகிய இடங்களில் 60 ஏவுகணை ஏவுதளங்களை சீனா அமைத்திள்ளது. இங்கிருந்து வட இந்தியாவை குறி வைப்பது எளிது என்பதால் இந்த ஏவுதங்களை சீனா கட்டியுள்ளதை சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் உறுதி செய்கின்றன.

எல்லைப் பிரச்சினை

இந்தியா-சீனா இடையே 4,057 கி.மீ. தூர எல்லை உள்ளது. இதில் பல இடங்களில் இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்சனை உள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள டிரிக் ஹைட்ஸ், பான்கோங் சோ ஏரி, சிக்கிம், அருணாச்சல் பிரதேசம் ஆகிய பகுதிகளை சொந்தம் கொண்டாடி வருகிறது சீனா. இப்பகுதிக்குள் அடிக்கடி சீனப்படையினர் வருவதும் வழக்கமானதாக உள்ளது.

அருணாச்சல் வளர்ச்சியை தடுக்கும் சீனா

அருணாசலப் பிரதேசத்துக்கு ஆசிய வளர்ச்சி வங்கி வழங்க இருந்த ரூ. 15,000 கோடி கடனை தர விடாமல் சீனா தடுத்தது. இதற்காக அந்த வங்கிக்கு சீனா கடும் நெருக்குதல் தந்தது. இப்படி வாய்ப்புகிடைக்கும் போதெல்லாம் இந்தியாவை சீண்டுவதும், மிரட்டுவதுமாக உள்ளது சீனா.

பழைய பன்னீர் செல்வம் இல்லை

ஆனால் இந்தியா இந்தியா பழைய பன்னீர் செல்வமாக இல்லை என்பதை சீனா மறந்து விட்டது. 1962ம் ஆண்டு சீனாவிடம் படு மோசமாக தோற்றபோது இருந்த நிலையில் இந்திய ராணுவம் இப்போது இல்லை. இந்தியாவும் தனது படைகளை பலமடங்கு அதிகரித்துவிட்டதோடு, ஆயுதங்களையும் குவித்துவிட்டது. நிச்சயம் சீனாவுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு இந்தியாவின் வலிமையும் பலமாகவே உள்ளது.

மிகச் சிறந்த ராணுவம்

நமது படையினருக்கு மிக நவீன ஆயுதங்கள், மிகத் தரமான பயிற்சிகள் தரப்பட்டு இந்திய ராணுவம் உலகின் மிகச் சிறந்த படைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. தனது ஏவுகணைகளின் சக்தியையும் பயணிக்கும் தூரத்தையும் தொடர்ந்து அதிகரித்து வரும் இந்தியா, மிக நவீனான சுகோய் 30 எம்கேஐ ரக போர் விமானங்களை சீனாவை ஒட்டிய பகுதிகளி்ல் எப்போதும் தயார் நிலையில் வைத்துள்ளது. இவை உலகின் நவீனமான போர் விமானங்களில் முக்கியமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்ல!

அது மட்டுமல்ல. உலகமும் இப்போது நிறையவே மாறி விட்டது. இந்தியா இப்போது பல உலக வல்லரசுகளின் செல்லப் பிள்ளை. இந்தியாவைப் போன்றதொரு மிகப் பெரிய பொருளாதார சந்தை அடி வாங்குவதை இந்த நாடுகள் நிச்சயம் வேடிக்கை பார்க்காது. எனவே சீனா போர் தொடுக்க முற்பட்டால் நிச்சயம் சீனாவுக்கு பலவிதங்களில் இந்த நாடுகள் நெருக்கடி கொடுத்து இந்தியாவை விட்டு விலகச் செய்யும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

tamil.oneindia.com

TAGS: