பனி படர்ந்த இந்திய-சீன எல்லை, 55 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு சூடான மோதலைச் சந்தித்திருக்கிறது.
புல்கூட அதிகம் முளைக்காத பூட்டான் நாட்டை ஒட்டிய சும்பிப் பள்ளத்தாக்குப் பகுதியில், 3,000 இந்திய வீரர்களும், 3,000 சீன வீரர்களும் கண்ணுக்குக் கண் பார்த்தபடி எதிரெதிர் எல்லைகளில் நிற்கிறார்கள்.
எந்தப் பேச்சுவார்த்தையும் பலன் தரவில்லை. ‘ஒரே ஒரு ரோடு போடும் விவகாரம், இரண்டு பெரிய நாடுகளுக்கு இடையேயான போரில் போய் முடியுமோ’ என்று உலகமே இப்போது கவலைப்படுகிறது.
கடந்த வாரம் சீனாவையும் பாகிஸ்தானையும் மறைமுகமாகக் குறிப்பிட்டு, ‘‘ஒரே நேரத்தில் இரண்டு எல்லைகளில் போர் வந்தாலும், இரண்டு இராணுவங்களையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக இருக்கிறது’’ என்று சொன்னார், இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்.
அடுத்த நாளே இப்படிப் பொறுப்பில்லாமல் பேசக் கூடாது. 1962-ம் ஆண்டு என்ன நடந்தது என வரலாற்றிலிருந்து அவர் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்’’ என்று சீனாவுடனான போரில், இந்தியா தோற்றதைக் குத்திக்காட்டினார் சீன இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல் வூ கியான்.
இதற்குப் பதிலடியாக, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பு வகிக்கும் அருண் ஜெட்லி, 1962-ம் ஆண்டு இருந்த சூழ்நிலை வேறு. இப்போதைய இந்தியா வேறு என்று உஷ்ணம் கூட்டினார்.
இந்த எல்லா வீர முழக்கங்களுக்கும் ப்ளாஷ்பேக் கடந்த ஜூன் 16-ம் தேதி ஆரம்பிக்கிறது.
இந்தியாவின் சிக்கிம் மாநிலத்துக்கும் பூட்டான் நாட்டுக்கும் இடையே, ஒரு குறுவாளின் நுனிபோல இருக்கும் சும்பிப் பள்ளத்தாக்குப் பகுதி சீனாவுக்குச் சொந்தம்.
இங்குள்ள டோக்லாம் பீடபூமியில், தங்கள் நாட்டின் எல்லையோரமாக இருக்கும் டோகா லா என்ற இராணுவ முகாமுக்கு ரோடு போட்டது சீனா.
தங்கள் இராணுவ முகாமுக்கு சீனா ரோடு போட்டது பிரச்சினை இல்லை; மலைப்பாங்கான தங்கள் நாட்டுப்பகுதியில் ரோடு போடுவது சாத்தியமில்லை என்பதால், அதை பூட்டான் நாட்டு வழியாகப் போட்டதுதான் பிரச்சினை.
பூட்டானுக்கும் இந்தியாவுக்கும் இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் இருக்கிறது. அதனால், இந்தியா இதில் தலையிட்டது. அடுத்தநாளே இந்திய இராணுவத்தினர் அங்கு போய் எதிர்ப்புத் தெரிவித்து, ரோடு போடும் பணியை நிறுத்தினர்.
கடுப்பான சீன இராணுவம், டோகா லா எல்லையில் இருந்த இரண்டு இந்திய இராணுவ முகாம்களைத் தாக்கி அழித்தது.
அங்கு எல்லையைத் தாண்டி இந்தியப் பகுதிக்குள் சீன இராணுவம் வர முயன்ற போது, இந்திய இராணுவத்தினர் மனிதச்சங்கிலி போல கைகோத்து நின்று தடுத்தனர்.
இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டனர். துப்பாக்கிகளே முழங்காத சண்டைபோல அது இருந்தது.
அங்கு இந்திய இராணுவம் எல்லை தாண்டி ஊடுருவி இருப்பதாகக் குற்றம் சாட்டும் சீனா, இந்தியர்கள் திரும்பிப் போக வேண்டும் என்கிறது.
இந்திய இராணுவத் தளபதி பிபின் ராவத் இரண்டு நாட்கள் சிக்கிம் பயணம் சென்று நிலைமையைக் கண்காணிக்க, இன்னொரு பக்கம் சீன ராணுவம் இதன் அருகே திபெத் எல்லையில் போர்ப்பயிற்சி மேற்கொண்டது.
இந்தியாவைக் குறிவைத்து இதைச் செய்யவில்லை என்று தேவையே இல்லாமல் விளக்கம் வேறு கொடுத்தது.
ஒரு காலத்தில் இந்தியாவுக்கு நெருக்கமாக இருந்த நேபாளம், வங்க தேசம் போன்ற நாடுகளை சீனா தன் வசம் ஈர்த்துக்கொண்டது.
இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில், இன்னமும் இந்தியாவுக்கு நெருக்கமாக இருப்பது பூட்டான் மட்டுமே! மன்னர் ஆட்சி நடைபெறும் பூட்டானுக்கு எல்லாமுமாக இருப்பது இந்தியாவே.
பூட்டான் இராணுவத்துக்குப் பயிற்சி தருவது இந்தியாதான். ‘ஒருவருக்கு ஆபத்து என்றால், இன்னொரு நாட்டின் இராணுவம் உதவிக்கு வர வேண்டும்’ என்ற ஒப்பந்தம் இந்தியாவுக்கும் பூட்டானுக்கும் இருக்கிறது.
சர்க்கரையில் ஆரம்பித்து சமையல் எரிவாயுவரை பூட்டானுக்கு எல்லாமே இந்தியாவிலிருந்துதான் போகின்றன.
பூட்டானின் வடக்கே இருக்கும் 499 சதுர கிலோ மீட்டர் பகுதியைச் சீனா சொந்தம் கொண்டாடுகிறது. இதேபோல, இப்போது பிரச்னைக்குள்ளாகி இருக்கும் டோக்லாம் பீடபூமியிலும் 269 சதுர கிலோமீட்டர் பகுதியைச் சீனா தன்னுடையது என்கிறது.
இப்போது பூட்டானுடன் சீனா வேறொரு டீல் பேசுகிறது. ‘டோக்லாம் பீடபூமியைக் கொடுத்து விட்டால், வடக்கே உரிமை கோருவதை நிறுத்தி விடுவோம்’ என்கிறது. இதற்குப் பூடான் ஒப்புக்கொள்ளவில்லை.
அதனால், வம்படியாக நுழைந்து ரோடு போடுகிறது. இப்போதும், ‘‘இது பூட்டானுக்கும் எங்களுக்குமான பிரச்சினை. இதில் உங்களுக்கு என்ன வேலை?’’ என இந்தியாவிடம் கேட்கிறது.
ஒரு ரோடு போடுவதற்கு எதற்காக இவ்வளவு எதிர்ப்பு?’ என்ற சந்தேகம் எழலாம். ஆனால், அந்த ரோட்டின் நோக்கம்தான் பிரச்சினைக்குரியது.
தன் எல்லையில் இருக்கும் இராணுவ முகாம்கள்வரை டாங்கிகள் போன்ற கனரக வாகனங்கள் வருவதற்காகவே, சீனா இப்படி ரோடு போடுகிறது.
சீனாவின் டோகா லா எல்லை முகாமுக்கு மிக அருகே இருக்கும் இந்தியப் பகுதி சிலிகுரி மண்டலம். நேபாளத்துக்கும் வங்க தேசத்துக்கும் இடையே, ஒரு பாட்டிலின் கழுத்து போல குறுகலாக இருக்கிறது இந்தச் சிலிகுரி மண்டலம்.
இந்த வழியாகத்தான் நம் ஏழு வட கிழக்கு மாநிலங்களும், இந்தியாவின் மையப்பகுதியோடு இணைக்கப் பட்டுள்ளன.
ஏதோ ஒரு சூழலில் சீன இராணுவம் முன்னேறினால், வடகிழக்கு மாநிலங்களோடு இந்தியாவின் மையநிலத்துக்கு இருக்கும் தொடர்பு சில மணி நேரங்களில் துண்டிக்கப்பட்டு விடும். அதன்பிறகு இந்தியாவைத் துண்டாடுவது சுலபம். நம் பிரதான அச்சமே இதுதான்.
1962 இந்திய – சீனப் போரின்போதே, சீனா சகல வசதிகளோடும் இருந்தது. அவர்கள் டாங்கிகளிலும் கவச வாகனங்களிலும் போர்முனைக்கு வர, நம் வீரர்கள் நடந்து சென்றார்கள்.
இப்போது அதைவிடத் தரமான சாலைகள், விமான நிலையங்கள், ஹெலிபேடுகள் என சீனா எங்கேயோ போய்விட்டது. இப்போது ரயில் பாதைகளுக்குத் திட்டமிடுகிறது.
நாம் இதற்குத் தயாராக இன்னும் 10 ஆண்டுகள் ஆகும் என்பதுதான் நிஜம்.மலைப்பகுதிகளில் போரிடும் திறமை கொண்ட 90,000 வீரர்களோடு மூன்று படைப்பிரிவுகளை உருவாக்க வேண்டும் என்பது இந்தியாவின் கனவு.
காங்கிரஸ் அரசின் இந்தக் கனவை மோடி அரசு 60,000 என்ற எண்ணிக்கைக்குக் குறைத்தது. இதை எட்டவே 2020-ம் ஆண்டு ஆகிவிடும்.
சீன எல்லையில் இருக்கும் நம் இராணுவ முகாம்களுக்கு 73 சாலைகள் அமைக்க 41,059 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2012-ம் ஆண்டு இவற்றை முடிப்பதாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், வெறும் 23 சாலைகளே இதுவரை போடப் பட்டுள்ளன. மற்றவை முடிய 2020-ம் ஆண்டு வரை ஆகலாம்.
கடந்த 1962 சீனப்போருக்குப் பிறகு கைவிடப்பட்ட எட்டு விமான ஓடுபாதைகளை இப்போது தான் புனரமைக்க ஆரம்பித்து இருக்கிறோம்.
அமெரிக்காவுக்கு இணையான ஒரு வல்லரசாகத் தன்னைக் காண்பித்துக்கொள்ள சீனா விரும்புகிறது. ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைத்து சீனா ஏற்படுத்தி வரும் ‘One Belt One Road (OBOR)’ திட்டமும் அதற்காகவே!
ஆனால், இதையெல்லாம் எதிர்க்கும் இந்தியா, அமெரிக்காவின் நிழலில் போய் நிற்பது சீனாவுக்கு எரிச்சல் தருகிறது.
இந்தத் திட்டத்தில் இந்தியா இணைந்தால், எல்லைப் பிரச்சினை இவ்வளவு பூதாகரமாக ஆகியிருக்காது’ என்று சீனப் பத்திரிகைகள் இப்போது எழுதுகின்றன.
ஆனாலும், ‘‘இந்தியா என்கிற 130 கோடி பேர் இருக்கிற மிகப்பெரிய மார்க்கெட்டை சீனா இழக்க விரும்பாது. இந்தியாவுக்குப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில், முதலிடத்தில் இருப்பது சீனாதான்.
அதோடு, பொருளாதார வளர்ச்சி என்கிற திசையில் போகிற சீனாவுக்குப் போர்க்களம் பக்கம் திரும்பிப் பார்க்க இப்போது நேரமில்லை’’ என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள் சிலர்.
அருகருகே இருக்கும் இரண்டு தேசங்கள் ஒரே நேரத்தில் வளர்ச்சி பெறுகிற போது, இரண்டுக்கும் இடையே மோதல்களைத் தவிர்க்க முடியாது. இது வரலாறு சொல்லும் உண்மை.
அப்படி ஒரு வரலாறு மீண்டும் நிகழாமல் இருப்பது, இரண்டு நாடுகளுக்குமே நல்லது!
உலகிலேயே சீனா அளவுக்கு அண்டை நாடுகளுடன் எல்லைத் தகராறில் ஈடுபடும் நாடு வேறு எதுவும் கிடையாது.
எந்தப் பகுதியையாவது ஆக்கிரமிக்க நினைத்தால், அது சீனாவின் பகுதி என்பதற்கு ஆதாரமாக ஏதாவது ஒரு ‘வரலாற்றை’ உருவாக்கி விடுவது சீனாவின் சாமர்த்தியங்களில் ஒன்று.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் 4,050 கிலோமீட்டர் பொதுவான எல்லை இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் ஆரம்பித்து அருணாசலப் பிரதேசம் வரை இது நீள்கிறது.
கடந்த 1962-ம் ஆண்டு யுத்தம் நடந்த போது, காஷ்மீரின் லடாக்கில் அக்சாய் சின் பகுதியை சீனா ஆக்கிரமித்துக் கொண்டது. பனி படர்ந்த மலையில் எல்லைக்கோடு என எதையும் அங்கு நிர்ணயிக்கவில்லை.
இப்போதும் கோடை நாள்களில் பனி உருகும்போது, லடாக்கில் சீன இராணுவத்தினர் எல்லை தாண்டி வருவதும், இந்திய இராணுவத்தினர் அவர்களைத் திரும்பிப் போகச் சொல்வதும் நடக்கும்.
சிக்கிமை இந்தியாவின் ஒரு மாநிலமாக சீனா ஏற்றுக்கொள்ளவே இல்லை. அதைத் தனிநாடு என்று சொல்லி வந்தது. அதேபோல அருணாசலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக சீனா அங்கீகரிக்கவில்லை.
அதை ‘தெற்கு திபெத்’ என்று சொல்லி, சுமார் 85,000 சதுர கிலோமீட்டர் இந்தியப் பகுதியைத் தன்னுடையது எனச் சொந்தம் கொண்டாடி வருகிறது.
கடந்த 2003-ம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் சீனா சென்றார். அப்போதுதான் சிக்கிமை இந்தியாவின் பகுதியாக சீனா அங்கீகரித்தது.
எல்லை தாண்டிய வர்த்தகத்துக்காகவும், கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை செல்லும் பக்தர்களுக்காகவும் நாது லா கணவாய் வழியாக இந்திய – சீனப் பாதை திறக்கப்பட்டது.
இப்போது பிரச்சினை முற்றியதும், இந்த வழியை மூடிவிட்டது சீனா. இதனால் சுமார் 200 கிலோமீட்டர் மலையில் நடந்து செல்ல வேண்டிய கடினமான வேறு ஒரு பாதையில் செல்கிறார்கள் யாத்ரிகர்கள்.
வாஜ்பாய் பயணத்தால் வேறொரு விஷயமும் நடந்தது. இரு நாடுகளின் எல்லைப் பிரச்னையைப் பேசித் தீர்த்துக்கொள்வது என முடிவு செய்தார்கள்.
இதற்காக, இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டார்.
சீனா ஆக்கிரமித்த அக்சாய் சின் உள்ளிட்ட லடாக்கின் பகுதிகளை சீனாவுக்கே கொடுத்து விடுவது எனவும், அதற்குப் பதிலாக அருணாசலப் பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடக் கூடாது’ எனவும் பேசப்பட்டது.
அன்றிலிருந்து அக்சாய் சின் பற்றி இந்தியா பேசுவதில்லை. ஆனால், அருணாசலப் பிரதேசத்துக்கு உரிமை கொண்டாடுவதை சீனா நிறுத்தவில்லை.
சீனா ஆக்கிரமித்த அக்சாய் சின் பகுதியை ஒட்டி, காஷ்மீரின் இன்னும் சில பகுதிகளைப் பாகிஸ்தான் கடந்த 1947-ம் ஆண்டே ஆக்கிரமித்து வைத்திருந்தது.
கடைத் தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல, இந்தப் பகுதியை சீனாவுக்குப் பரிசாகக் கொடுத்தது பாகிஸ்தான்.
இந்தப் பகுதி வழியாக அட்டகாசமாக சாலை போட்டு, சீனா – பாகிஸ்தான் பொருளாதார மண்டலத்தையே ஏற்படுத்தி விட்டது சீனா.
வேடிக்கை பார்ப்பதைத் தவிர, இந்தியாவால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.
– Vikatan