திரவியம் தேட திரைகடலோடும் தமிழர்கள் – எங்கு, ஏன் செல்கிறார்கள்?

camel

தமிழர்கள் வெளிநாட்டு வேலையை விரும்புவதற்கு காரணம் என்ன? எந்த நாடுகளுக்கு அதிகம் விரும்பிச் செல்கிறார்கள்?அவர்களின் வருமானம் எந்த விதத்தில் செலவு செய்யப்படுகிறது?

இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில், தமிழக அரசின் நிதியில், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரானர் பல்கலைக்கழகத்தில் உள்ள ‘புலம்பெயர்ந்தோர் பற்றிய ஆய்வு மையம்’ (center for diaspora studies), லயோலா கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இணைந்து முதல்முறையாக விரிவாக ஒரு ஆய்வை நடத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளனர்.

ஆய்வாளர்கள் சாமுவேல் ஆசிர் ராஜ், இருதயராஜ் மற்றும் பெர்னார்ட் டி சாமி ஆகியோர் நடத்திய ஆய்வின் படி, வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வோர் பெரும்பாலானோர் சிங்கப்பூர், வளைகுடா நாடுகளுக்கு செல்வதாகவும், தங்களது வருமானத்தில் 51 சதவீதம் மருத்துவ செலவுகளுக்காகவும், 43 சதவீதம் கடனை அடைப்பதற்காக செலவு செய்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளில் வேலை செய்து தமிழர்கள், தங்களது குடும்பங்களுக்கு அனுப்பும் பணத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.68,616 கோடி என்று தெரியவந்துள்ளது .

prabu

இந்த ஆய்வில் கலந்துகொண்ட திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபு சண்முகவேலுக்கு தனது சகோதரியின் மருத்துவச் செலவிற்கு குறைந்தது ரூ.20,000 ஒவ்வொரு மாதமும் செலுத்தவேண்டும் என்ற நிலையில், குவைத்தில் வேலை செய்ததாக தெரிவித்தார்.

”வறுமைக்கோட்டிற்கு சிறிது மேலே இருந்தாலும், உள்ளூரில் ஈட்டும் வருவாய் போதுமானதாக இல்லை. கட்டுமான தொழிலாளியாக வளைகுடா நாடுகளில் வேலை செய்வதில் அதிக சிரமம் உள்ளது. இருந்தாலும், மூளையில் கட்டி இருந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்ட என் சகோதரி இன்று ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு அந்த வருமானம் உதவியது,” என்கிறார் பிரபு.

துபாய், குவைத், மலேசியா, ஒமான் என பல நாடுகளில் வேலைசெய்த பிரபு ஒவ்வொரு நாட்டிலும் குறைந்தபட்சம் ஒப்பந்த தொழிலாளராக இரண்டு ஆண்டுகள் வேலை செய்யவேண்டிருந்தது என்றார்.

பெண் தொழிலாளர்கள் வெளிநாடு செல்வது ஏன்?

பெண் தொழிலாளர்களின் நிலையை ஆராய்ந்தபோது, கோவை, திருப்பூர், நாமக்கல் ஆகிய மேற்கு மாவட்டங்களை சேர்ந்த பெண்கள், முன்பே சுமங்கலி திட்டத்தில் வேலை செய்த அனுபவம் இருப்பதால், அவர்கள் வெளிநாடு சென்று வேலைசெய்ய தயாராக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக திருமணம் ஆகாத பெண்கள் தங்களது திருமணத்திற்கு நகை சேர்க்கவேண்டும் என்ற கட்டாயத்திற்காக வெளிநாட்டு வேலைக்கு செல்ல ஒப்புக்கொள்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழக தொழிலாளர்கள் தேர்வு செய்யும் நாடுகள்

1830களில் தொடங்கி தமிழர்கள் பல்வேறு நாடுகளுக்கு வேலைக்கு செல்வதாக குறிப்பிடும் ஆய்வாளர்கள், தற்போதைய சூழலில் அத்தியாவசிய தேவைகளுக்காக பணம் சேர்ப்பதற்காக தமிழர்கள் அதிக வேலை நேரம், குறைந்த ஒய்வு என பல விதிகளையும் ஒப்புக்கொள்கின்றனர் என்கிறார் பெர்னார்ட்.

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் உள்ள 20,000 குடும்பங்களிடம் நடத்திய இந்த ஆய்வில் 50 சதவீதிற்கும் மேலானவர்கள் சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள், சௌதி அரேபியா ஆகிய நாடுகளுக்குச் சென்றதாக தெரியவந்துள்ளது என்றார் அவர்.

அடுத்த தேர்வாக கத்தார், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கனடா, பஹரைன் ஆகிய நாடுகள் உள்ளன என்று தெரியவந்துள்ளது என்றார் அவர்.

”வளைகுடா நாடுகளுக்கு செல்பவர்கள் மனித உழைப்பை அதிகம் எதிர்பார்க்கும் வேலைகளுக்கு செல்கிறார்கள். ஒரு முறை வெளிநாடு சென்று திரும்பியவர்கள், மீண்டும் அதே போன்ற வேலைகளுக்கு செல்லவே விரும்புகின்றார் என்றார் ஆய்வாளர் சாமுவேல்.

bala

குடும்ப சுமையை குறைக்க இளமை காலத்தில் கடும் உழைப்பு

மற்றொரு தொழிலாளியான பாலா சுப்பையா(34) தனது வருமானத்தில் கல்பாக்கத்தில் ஒரு வீடு கட்டியுள்ளதாக கூறுகிறார்.

அவரது தந்தை சுப்பையாவும் பல நாடுகளுக்கு சென்று சேர்த்த பணத்தில் நிலம் வாங்கியதாவும், தற்போது தன்னுடைய மகள் யுவதி சொந்த வீட்டில் வளருவதில் தனக்கு பெருமை என்கிறார்.

”இளமைக் காலத்தில் வெளிநாட்டில் வேலைசெய்து வருமானம் ஈட்டினால் மட்டுமே, அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றமுடிகிறது,” என்றார் பாலா.

இராக், துபாய், சௌதி அரேபியா ஆகிய நாடுகளில் வெல்டராக வேலை செய்த பாலா, தற்போது லிபியா செல்வதற்காக ஆவணங்களை தயார் செய்துவருவதாக கூறுகிறார்.

”வெளிநாட்டில் வேலை செய்யும்போது குறைந்தபட்சம் ஒரு மாதத்தில் சுமார் ரூ.40,000 வரை ஈட்டமுடிகிறது. கடனை அடைக்கவும் இது எனக்கு மிகவும் தேவையானதாக இருக்கிறது. எங்களை போன்ற சாதாரண மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள குடும்பத்தில் ஒருவராவது வெளிநாட்டில் சில ஆண்டுகள் சிரமப்படுவதை எங்கள் ஊர்களில் இயல்பான ஒன்றாகத்தான் பார்க்கிறோம்,” என்றார் பாலா.

-BBC_Tamil

TAGS: