கும்பகோணம்: கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி குழாய்களை அகற்ற வலியுறுத்தியும் போராட்டம் நடத்தியவர்களை விடுதலை செய்யக் கோரியும் 7-வது நாளாக இன்றும் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி அமைத்த குழாய் உடைந்து கச்சா எண்ணெய் வெளியேறியதால் மக்கள் பதற்றம் அடைந்தனர். இதனால் கச்சா எண்ணெய் குழாய்களை அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
10 பேர் கைது
ஆனால் தமிழக அரசு போராடிய பொதுமக்களை காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தி தாக்கியது. இதில் பலருக்கு மண்டை உடைந்தது. அத்துடன் போராட்டம் நடத்திய பேராசிரியர் ஜெயராமன் உட்பட 10 பேரை ஜாமீனில் வரமுடியாத வழக்குகளில் கைது செய்து சிறையில் அடைத்தது போலீஸ்.
7-வது நாள் கடையடைப்பு
இதைக் கண்டித்து கதிராமங்கலத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று 7-வது நாளாக கடையடைப்புப் போராட்டம் தொடருகிறது.
வெறிச்சோடிய வீதிகள்
அதேபோல் கதிராமங்கலம் கிராமத்தில் ஆட்டோக்கள், வேன்கள் எதுவும் ஓடவில்லை. இதனால் கதிராமங்கலம் வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
குடிநீர் குழாய்களில் கச்சா எண்ணெய்
இதனிடையே கதிராமங்கலம் கிராமத்தில் குடிநீர் குழாய்களிலும் கச்சா எண்ணெய் கலந்து வருவது மக்களை பெரும் பீதியடைய வைத்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.