இந்திய சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது: உயிருக்குப் போராடும் ஊழியர்கள்

ship-sinkingஇந்திய சரக்கு கப்பல் ஒன்று அந்தமான் கடலில் மூழ்கிக்கொண்டிருப்பதாகவும், அதில் பயணித்த ஊழியர்கள் அனைவரும் உயிருக்குப் போராடி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஐடிடி பாந்தர் என்ற இந்திய சரக்கு கப்பல் இன்று அந்தமான் கடற்பகுதியில் சென்றபோது மோசமான வானிலை காரணமாக விபத்தில் சிக்கி கடலில் மூழ்கியுள்ளது.

திக்லிபூரில் இருந்து 120 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்த கப்பல் விபத்து ஏற்பட்டுள்ளது. கப்பல் விபத்துக்குள்ளானதால் அதில் இருந்த கண்டெய்னர்கள் கடலில் மிதந்துகொண்டிருப்பதாகவும், கப்பல் ஊழியர்கள் 11 பேரும் கண்டெய்னர்களை பிடித்துக்கொண்டு உயிருக்குப் போராடி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

விபத்து பற்றி தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் ஹெலிகொப்டர்களில் புறப்பட்டுச் சென்று ஊழியர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

63 மீற்றர் நீளம் கொண்ட இந்த சரக்கு கப்பலில் 29 கண்டெய்னர்களில் 500 மெட்ரிக் டன் மணல், 200 மெட்ரிக் டன் இரும்பு மற்றும் ஒரு கார் ஆகியவை கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

தற்போது கடல் மிகவும் சீற்றமாக காணப்படுவதால் உடனடியாக கப்பல் ஊழியர்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், கடலோர காவல் படையின் இரண்டு கப்பல்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

-lankasri.com

TAGS: