ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத இயக்கத் தலைவர் கிலானியின் மருமகன் உள்ளிட்ட 7 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத இயக்கங்களிடம் இருந்து பணம் வருவதாகத் தகவல்கள் வெளியாகின.
காஷ்மீரில் அமைதியின்மை ஏற்பட்டபோது பிரிவினைவாதிகள் தீவிரவாதிகளிடம் பெற்ற பணத்தை கல்வீச்சாளர்களுக்கு வழங்கியதாகவும், இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதுதொடர்பான விசாரணையைத் தொடங்கிய தேசிய புலனாய்வு அமைப்பு, கடந்த மாதம் பிரிவினைவாத இயக்கத் தலைவர்களின் வீடுகளில் சோதனை செய்தது. இந்தச் சோதனையில், ரூ.2 கோடி பணம், லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களின் கடித நகல்கள் மற்றும் பல முக்கிய தகவல்கள் சிக்கின.
அத்துடன் பிரிவினைவாத இயக்கத் தலைவர் கிலானியின் மருமகன் அல்டாப் அகமது ஷா உள்ளிட்ட தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்துத் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், வீட்டுக் காவலில் வைத்து விசாரிக்க இயலாததால், கிலானியின் மருமகன் அல்டாப் அகமது ஷா, தெஹ்ரீக்-இ-ஹரியத் செய்தித் தொடர்பாளர் அயாஸ் அக்பர், பீர் சபியுல்லா, மிர்வாய்ஸ் உமர் பாரூக் தலைமையிலான ஹரியத் மாநாட்டுக் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷாகித் அல் இஸ்லாம், மெஹ்ரஜுதின் கல்வாபல், நயீம் கான் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.