இன்னும் எத்தனை திவ்யபாரதிகளும், வளர்மதிகளும் குபேரன்களும் தேவை இந்த அரசுக்கு?

சென்னை: மாணவர்கள் உள்ளிட்ட இளம்தலைமுறையினர் மக்கள் நலன் போராட்டங்களில் பங்கேற்கூடாது என மிரட்டும் வகையில் கைது நடவடிக்கைகள் தொடர் நிகழ்வாகிவிட்டது. தற்போது மதுரையில் மாணவராக இருந்த போது போராட்டம் நடத்தியதற்காக ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி கைது செய்யப்பட்டுள்ளதற்கு எதிராக சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பு வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.

மெரினா புரட்சிக்குப் பின்னர் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டங்களைக் கண்டு குலைநடுங்கிப் போயுள்ளன அரசுகள். இதனால்தான் ஈவிரக்கமே இல்லாமல் மெரினாவில் மாணவர்களையும் அவர்களை பாதுகாத்த மீனவர்களையும் வேட்டையாடியது போலீஸ்.

valarmathi0

திருமுருகன், வளர்மதி

இதனைத் தொடர்ந்து சென்னை மெரினாவில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த ஈழத் தமிழர்களுக்காக நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்திய திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது தமிழக மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. இதேபோல் நெடுவாசல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து துண்டறிக்கை கொடுத்ததற்காக வளர்மதி என்ற மாணவி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

kuberan

குபேரன்

இதன் உச்சகட்டமாக பெரியார் பல்கலைக் கழகத்தில் இருந்தே மாணவி வளர்மதி நீக்கப்பட்டிருக்கிறார். இதேபோல் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் பதிவு போட்ட ‘குற்றத்துக்காக’ தமிழ் தேசியப் பேரியக்கத்தின் குபேரனை கைது செய்து சிறையிலடைத்தது போலீஸ்.

divya-bharathi

திவ்யபாரதி

தற்போது ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி கைது செய்யப்பட்டிருக்கிறார். சிறந்த சமூக செயற்பாட்டாளர் என்பதற்காக பெரியார் சாக்ரடீஸ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் திவ்யபாரதியை பழைய வழக்கு ஒன்றில் போலீஸ் கைது செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கக்கூஸ் ஆவணப்படம்

அதுவும் மாணவராக இருந்த காலத்தில் போராட்டம் நடத்திய மாபெரும் குற்றத்துக்காக இத்தனை ஆண்டுகாலம் கழித்து போலீஸ் கைது செய்துள்ளது என்பது திட்டமிட்ட அரசு ஒடுக்குமுறை என்கின்றனர் பொதுமக்கள். கக்கூஸ் எனும் ஆவணப் படத்தின் மூலம் ஒடுக்கப்பட்டோரின் வலியை உரத்துச் சொன்ன செயற்பாட்டாளர் திவ்யபாரதி.

இன்னும் எத்தனை பேரோ?

திவ்யபாரதிக்கு ஜாமீன் கிடைத்திருந்தாலும் இன்னும் எத்தனை திருமுருகன் காந்திகளையும் வளர்மதிகளையும் குப்ரேன்களையும் வேட்டையாடக் காத்திருக்கிறதோ? அரசு என்பதுதான் பொதுமக்களின் கேள்வி. போராடும் மக்கள் ஒருபுறம்… உரத்து குரல் கொடுத்தால் கைது மறுபுறம்.. இதற்கு நடுவே மெல்ல மெல்ல கபளீகரம் செய்யப்படும் தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகள்… இன்னும் எத்தனை காலத்துக்கு தமிழகம் இத்தகைய கொந்தளிப்பான நிலையில்தான் இருக்குமோ? என்பதுதான் பொதுமக்களின் கேள்வி.

tamil.oneindia.com

TAGS: