கடந்த சில நாட்களாகவே நடக்கப் போகிறது என்று அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்த்திருந்த நாடகம், நேற்று, ஜூலை 26 ம் தேதி பிஹாரில் வெற்றிகரமாக நடந்தேறி விட்டது.
ஆம். பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ராஜினாமா செய்து விட்டார். காரணம் பிஹாரின் துணை முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மகனுமான தெஜேஷ்வி யாதவ் பதவி விலக மறுத்தது தான். தெஜேஷ்வி யாதவ் மீது ஏராளமான ஊழல் குற்றச் சாட்டுகள் எழுந்த நிலையில் அவரை உடனடியாக பதவி விலகுமாறு நிதீஷ் குமார் கடுமையாக நிர்ப்பந்தம் செய்திருக்கிறார்.
ஆனால் தெஜேஷ்வி யாதவும், அவரது கட்சியும், லாலுவும் இதற்கு உறுதியாக மறுப்பு தெரிவித்து விட்டனர். ”நீங்கள் பதவி விலகா விட்டால் நான் பதவி விலகுகிறேன் என்று” கூறி நிதிஷ் ராஜினாமா செய்து விட்டார். ஆனால் நிதீஷ் ராஜினாமா செய்த 12 மணி நேரத்திற்குள் மீண்டும் தான் ஆட்சி அமைக்க விரும்புவதாகவும், அதற்கு ஆளுநர் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டு, பிஹார் மாநிலத்தின் பொறுப்பு ஆளுநர் கேஷாரி நாத் திரிபாதியிடம் அனுமதி கேட்டார்.
திரிபாதி அடிப்படையில் மேற்கு வங்கத்தின் ஆளுநர். அவரை பொறுப்பு ஆளுநராக மட்டுமே மத்திய அரசு பிஹாரில் நியமித்து இருந்தது. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால்ல நிதிஷ் குமாரின் கட்சியை விட லாலு பிரசாத் யாதவின் கட்சிக்குத் தான் கூடுதல் எம்எல்ஏ க்கள் இருக்கிறார்கள், அதாவது பிஹாரின் சட்டமன்ற எம்எல்ஏ க்களின் மொத்த எண்ணிக்கை 243. இதில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு 80, நிதிஷின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 71, பாஜக வுக்கு 53, காங்கிரஸூக்கு 27 என்பதுதான். அதாவது கிட்டத்தட்ட கடந்த இரண்டாண்டுகளாக சட்டசபையில் 2 வது பெரிய கட்சியாக இருந்துதான் நிதீஷ் முதலமைச்சராக இருந்திருக்கிறார்.
எதிர்க்கட்சி கனவு தகர்ப்பு
பாஜக வின் 53 எம்எல்ஏ க்களும் மற்றும் சில உதிரிக் கட்சிகளும் நிதிஷிக்கு ஆதரவு கொடுத்ததால் மீண்டும் முதல்வராகிவிட்டார். 2013 செப்டம்பரில் மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவித்த போது அதற்கு கண்டனம் தெரிவித்து தான் நிதிஷ் குமார் பாஜக வுடன் கூட்டணி யில் இருந்து விலகினார். தேர்தலை சந்தித்தார். லாலு மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் பிஹார் முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டார். இந்தக் கூட்டணியில் பாஜகவும் அமைச்சர் பதவிகளை பெற்றுவிட்டது. நிதிஷின் இந்த முடிவு 2019 ல் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிராக மிகப் பெரியதோர் ‘’மஹா கட்பந்தன்” அதாவது கிட்டத் தட்ட எல்லா பெரிய கட்சிகளையும் உள்ளடக்கிய எதிர்கட்சி கூட்டணி அமைவது என்பது வெறுங் கனவாகிப் போனது என்பதுதான்.
லாலு புலம்பல்
‘’நிதிஷின் முடிவு பிஹார் மக்களின் கன்னத்தில் அவர் ஓங்கி அறைந்திருக்கிறார் என்பதுதான். சட்டமன்றத்தில் தனி பெருங் கட்சியாக இருந்தும் நாங்கள் துணை முதலமைச்சர் பதவியை தான் ஏற்றுக் கொண்டோம். எங்களை விட ஒன்பது எம்எல்ஏ க்களை குறைவாக பெற்றிருந்தும் நிதிஷ் முதலமைச்சர். எங்களது பெருந்தன்மைக்கு நிதிஷ் கொடுத்த பரிசுதான் இது” என்று புலம்புகிறார் லாலு பிரசாத் யாதவ்.
கட்சிகளை சிதைக்கும் வியூகம்
பிஹாரில் தற்போது நடந்திருப்பது மிக, மிக முக்கியமான நிகழ்வாக அரசியல் பார்வையாளர்களால் பார்க்கப் படுகிறது. அது என்னவென்றால், 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு இந்தியாவின் எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் பிராந்திய கட்சிகள் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன வோ, அத்தகைய கட்சிகளை எந்தளவுக்கு சிதைத்து சின்னா பின்னமாக்க முடியுமோ அந்தளவுக்கு அவற்றை சிதைத்து சின்னபின்னமாக்குவது.
அரசியல் பார்வையாளர்கள் கருத்து
‘’தான் 2019 ல் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் போது எந்த மாநிலத்திலும் தனி செல்வாக்கு மிக்க பிராந்திய கட்சிகளோ அல்லது அத்தகைய கட்சிகளின் தலைவர்களோ அரசியலில் இருக்க கூடாது. இதில் மோடி தெளிவாக இருக்கிறார். 2014 மக்களவைத் தேர்தலின் போது காணப்பட்ட, கிட்டத்தட்ட அதே மாதிரியான அரசியல் சூழல் 2019 லும் நிலவ வேண்டும் என்பதே மோடியின் விருப்பம்” என்கிறார் டில்லில் பணியாற்றும் மூத்த பத்திரிகையாளர் ராஜேஷ் ரஞ்சன் யாதவ்.
ஜெ. மமதா
‘’2014 தேர்தலில் மோடியா அல்லது இந்த லேடியா என்று அப்போதய தமிழக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தன்னுடைய பிரசாரங்களின் இறுதிக் கட்டத்தில் பேச ஆரம்பித்தார். இன்று ஜெயலலிதா இல்லை. மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜிக்கும் அந்த ஆசை துளிர் விட ஆரம்பித்தது. ஜெயலலிதாவும், மமதா பிரதமர்களாக ஆகா விட்டாலும், ஜெ வின் அஇஅதிமுக தமிழகத்தின் மொத்தமுள்ள 39 எம் பி க்களில் 37 ஐ வென்று இந்திய நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. இதே போல மமதா வின் திரிணாமூல் காங்கிரஸ், மேற்கு வங்கத்தின் மொத்தமுள்ள 42 இடங்களில் 33 ஐ வென்றது.
வெங்கையா நாயுடு
ஜெ மறைந்து விட்டார். மமதா வால் நிச்சயமாக 2014 அளவுக்கு வெற்றி பெற முடியாது. ஆனால் புதிய பிராந்திய கட்சி தலைவர்கள் தலையெடுக்க கூடாது என்பதில் மிக மிக தெளிவாக இருக்கும் மோடியின் அரசியல் காய் நகர்த்தல்கள்தான் நிதிஷின் இந்த நடவடிக்கைகளுக்கு காரணம். இதன் மூலம் நிதிஷ் குமார் 2019 தேர்தலில் மோடிக்கு எதிராக எதிர்கட்சிகளால் பிரதம மந்திரி வேட்பாளராக உருவாக்கப்பட இருந்த வாய்ப்பு தகர்க்கப்பட்டு விட்டது. இனி மேல் பிஹார் மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு அவர் கேட்டது எல்லாம் மோடி அரசால் கொடுக்கப் படும்” என்று மேலும் கூறுகிறார் ராஜேஷ் ரஞ்சன் யாதவ். எதிர்கட்சிகள் ஆளும் அத்தனை மாநிலங்களும் இன்று மோடியால் குறி வைக்கப்படுகின்றன. தமிழ் நாட்டில் ஜெ மறைவுக்குப் பிறகு ஓ பன்னீர்செல்வம் முதலமைச்சராக ஆனதும் மோடியின் விருப்பத்தால் தான். ஜெ மறைந்த டிசம்பர் 5 ம் தேதி அப்பல்லோ மருத்துமனையில் மாலை 5 மணிக்கே வந்து விட்ட பாஜக மத்திய அமைச்சர் எம்.வெங்கையா நாயுடு என்னவெல்லாம் செய்தார் என்பது தமிழகத்தில் விவரம் அறிந்த அனைவருக்கும் தெரியும்.
ஓபிஎஸ்-க்கு முக்கியத்துவம்
இன்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக ஆனாலும், ஓபிஎஸ் ஸுக்கு மோடி கொடுக்கும் முக்கியத்தும் சுவாராஸ்யமாக பார்க்கப்பட வேண்டியது. புதிய குடியரசு தலைவர் வேட்பாளரை பாஜக தேர்ந்தெடுத்த உடனேயே அந்த தகவலை முதலில் ஓபிஎஸ் ஸுக்கு தொலை பேசியில் தெரிவித்து ஆதரவு கேட்டவர் மோடி. அதற்குப் பிறகுதான் முதலமைச்சர் எடப்பாடியுடன் மோடி பேசியிருக்கிறார்.
ஒடிஷா
இன்று என்ன நிலைமை தமிழ் நாட்டில்? தமிழகத்தின் எல்லா உரிமைகளையும் மோடி அரசு காலின் கீழ் போட்டு மிதித்துக் கொண்டிருக்கையில், அஇஅதிமுக வின் இரண்டு அணிகளும் மோடியிடம் சரண் அடைந்து கிடப்பதும், கூச்ச நாச்சம் இல்லாமல் மத்திய அரசின் அனைத்து மக்கள் விரோத திட்டங்களுக்கும் வெண் சாமரம் வீசி ஆதரவு தெரிவித்துக் கொண்டிருப்பதும் தான். ஓரிஸ்ஸா வில் நீண்ட நாட்கள் ஆட்சியில் இருந்து வரும் பிஜூ ஜனதா தள முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் பல விதமான அழுத்தங்களை மோடி அரசு கொடுத்துக் கொண்டிருக்கிறது. தேசிய ஜனதா தள கூட்டணியில் சேருமாறு எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு இன்று நவீன் பட்நாயக் நிர்பந்தம் செய்யப் படுகிறார். இத்தனைக்கும் மோடி அரசின் முக்கியமான எல்லா கொள்கை முடிவுகளுக்கும் நவீன் பட்நாயக் அரசு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான்.
பஞ்சாப்
பஞ்சாபில் அகாலி தளம் மற்றும் பாஜக கூட்டணி அரசு தோற்றுப் போய் தற்போது அங்கு காங்கிரஸ் ஆட்சி வந்து விட்டது. ஆனாலும் அகாலி தள கட்சி மோடி விஷயத்தில் அடக்கியே வாசிக்கிறது. காரணம் பத்தாண்டு கால அகாலி தள ஆட்சியில் தலை விரித்து ஆடிய லஞ்ச, லஞ்ச லாவணிகள்தான்.
மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்தில் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு மமதா பாஜனர்ஜி அரசுக்கு மறைமுகமான தொல்லைகள் தொய்வு இல்லாமல் கொடுக்கப் பட்டு வருகின்றன. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் முக்கிய கட்சிகள் அனைத்தும் இன்று மோடியின் கைப் பாவைகளாக மாறி விட்டன. பல நூறு கோடி ரூபாய் ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணையை எதிர் கொண்டிருக்கும் ஜகன் மோகன் ரெட்டி 30 நிமிடம் மோடியை சந்தித்துப் பேசுகிறார். அவ்வப் போது கூச்சல் போட்டாலும் மஹாராஷ்டிர மாநிலத்தில் சிவ சேனா கட்சி மோடியின் பல முக்கிய முடிவுகளை தொடர்ந்து ஆதரித்தே வருகிறது.
காஷ்மீர்
காஷ்மீரில் மெஹ்பூபா முக்தியின் பிடிபி கட்சி பாஜக வுடன் கூட்டணி ஆட்சி செய்து கொண்டிருகிறது. அவ்வளவு சுலபமாக பாஜகவை மெஹ்பூபா முக்தியால் மீற முடியாது …. காரணம் அந்தளவுக்கு மத்திய விசாரணை அமைப்புகளிடம் பிடிபி செய்திருக்கும் ஊழல் பட்டியல் பத்திரமாக இருக்கிறது ….
நீட் மசோதா
இந்த பின்புலத்தில் பார்த்தால் மட்டுமே தமிழ் நாட்டில் இன்று ஆளுங் கட்சியாக இருக்கும் அஇஅதிமுக வின் அரசியல் மற்றும் நிருவாகம் சம்மந்தப்பட்ட கொள்கை முடிவுகளின் லட்சணம் நமக்கு புரியும். நீட் தேர்வு சம்மந்தமாக தமிழக சட்டமன்றம் ஒரு மனதாக நிறைவேற்றிய தீர்மானம் மத்திய உள்துறை அமைச்சகத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது. ‘’இந்த தீர்மான நகல் எங்கே இருக்கிறது என்று எனக்கு தெரியாது” என்று கூறுகிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மாற்றே இல்லை
ஆகவே தற்போது இருக்கும் நிலைமையை வைத்து பார்த்தால் 2019 மக்களவை தேர்தலில் மோடி தன்னுடையை ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளுவார் என்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகவே தெறிகிறது. 1970 களில் பிரதமர் இந்திரா காந்திக்கு இருந்த அரசியல் செல்வாக்கிற்கு சமமானதாகவும் இது பார்க்கப் படுகிறது. அன்று இந்திரா காந்தி க்கு மாற்றாக வேறு எந்த தலைவரும் நாடு முழுவதும் அறிந்த அளவில் இல்லை. இதற்கு ஆங்கிலத்தில் There is No Alternative அதாவது TINA Factor என்பார்கள்.