நாடு முழுவதும் ஒரே சீராக வரி வசூலிக்கும் வகையில், ஜி.எஸ்.டி. வரியை (சரக்கு மற்றும் சேவை வரி) மத்திய அரசு கடந்த 1-ந் தேதி முதல் அமல்படுத்தியது. ஜி.எஸ்.டி. வரி தொடர்பாக முழுமையான புரிதல் பெரும்பாலான வணிகர்களுக்கு இல்லை. இதையடுத்து, மாநிலங்கள் வாரியாக சென்று ஜி.எஸ்.டி. வரி குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய மந்திரிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, முன்னாள் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு, வர்த்தக துறை மந்திரி நிர்மலா சீதாராமன், ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு, கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழகத்தில் ஜி.எஸ்.டி. வரி குறித்து பல்வேறு தரப்பினரிடம் விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில், ஜி.எஸ்.டி. வரி தொடர்பான விளக்கக்கூட்டம் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நேற்று நடந்தது. இதில், பல்வேறு தொழில் வர்த்தக சங்கங்களின் நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஜி.எஸ்.டி. வரி கொண்டுவரப்பட்டு இருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்காக பல கடினமான முடிவுகளை எடுக்கும்போது பல்வேறு எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியது உள்ளது. ஜி.எஸ்.டி. வரியை நிறைவேற்றுவதற்கு எங்களது அனுபவமே கைகொடுத்தது.
ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு விதமான வரி வசூலிக்கப்பட்டு வந்தது. அதாவது நாடு முழுவதும் 17 விதமான வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தும்போது மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்ற கருத்து இருந்தது. அதை முறியடித்து ஒரே நாடு, ஒரே வரி என்பதை நிறைவேற்றி உள்ளோம்.
ஜி.எஸ்.டி. வரியின் மூலம் அந்தந்த மாநிலங்களில் ஏற்கனவே இருந்து வந்த வரியை வசூலிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன. இதன்மூலம் பொருட்கள் வேகமாக ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு எடுத்து செல்லப்படுகிறது. மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் மிக விரைவாக மக்களுக்கு கிடைத்து வருகின்றன.
தொழிற்சாலைகளுக்கு தேவையான பொருட்கள் வேகமாக எடுத்து வரும்போது தொழில் உற்பத்தியும் பெருகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்த முயற்சி மேற்கொண்ட போது பல மாநிலங்கள் ஒத்துழைக்காத காரணத்தினால் அமல்படுத்த இயலவில்லை.
தமிழ்நாடு, மராட்டியம் போன்ற சில மாநிலங்கள் உற்பத்தியில் சிறந்து விளங்கி வருவதால் அந்த மாநிலத்தின் வருமானம் பாதிக்கப்படும் என்று ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு மாநிலத்தின் வருமானம் பாதிக்கப்படும் பட்சத்தில் அதை ஈடுகட்ட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து ஜி.எஸ்.டி. வரி தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரி என்பது மத்திய அரசு விதித்துள்ள வரி என்பது தவறான கருத்தாகும்.
மூன்றில் இரண்டு பங்கு மாநில அரசுகளின் பிரதிநிதிகள், மூன்றில் ஒரு பங்கு மத்திய அரசின் பிரதிநிதிகள் போன்றவர்கள் இணைந்து பலமுறை நடத்திய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுதான் ஜி.எஸ்.டி. வரி ஆகும். ஜி.எஸ்.டி. வரியால் ஏதேனும் பாதிப்பு என்றால் மாநில அரசுகள் தாராளமாக தெரிவிக்கலாம். அதுபோன்று தெரிவிக்கப்படும் கருத்துகள் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வைக்கப்பட்டு உரிய தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், தமிழக நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ‘தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும். தீப்பெட்டி, பட்டாசு உற்பத்தி, மீன் வலை, கைத்தறி, விசைத்தறி ஆகியவற்றுக்கான ஜி.எஸ்.டி. வரி, உணவகங்களில் வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரி ஆகியவற்றை குறைக்க வேண்டும் என்று மத்திய நிதித்துறை மந்திரியிடம் தமிழக அரசின் சார்பில் மனு அளித்துள்ளேன். மத்திய அரசு இதை பரிசீலிக்க வேண்டும். 2-வது மெட்ரோ ரெயில் திட்டம், கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான தொழில் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய 17 ஆயிரத்து 74 கோடி ரூபாயை மத்திய அரசு விரைவில் வழங்க வேண்டும்’ என்றார்.
முன்னதாக கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொழில் அதிபர்கள், வர்த்தக-வணிகர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ஜி.எஸ்.டி. வரி குறித்து மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, வர்த்தக துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
மேலும், அவர்களை தனித்தனியாகவும் சந்தித்து கோரிக்கைகள், பரிசீலனைகள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது, தமிழகத்துக்கான ஜி.எஸ்.டி. முதன்மை கமிஷனர் சி.பி.ராவ் உடன் இருந்தார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் ஜலானி நிருபர்களிடம் கூறும்போது, ‘தங்கத்துக்கான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து, 4 சதவீதம் ஆக குறைக்கவேண்டும். இறக்குமதி வரியை குறைக்கவில்லை என்றால் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி கொண்டுவரப்படுவது அதிகரித்துவிடும். இறக்குமதி வரியை குறைத்தால் தங்கத்தின் விலை குறையும். நேர்மையாக வியாபாரம் செய்பவர்களுக்கும் உதவிகரமாக இருக்கும் என்று வலியுறுத்தினோம்’ என்றார்.
-dailythanthi.com