காவிரி நதிநீர் தீர்ப்புகளை கர்நாடகா மதிப்பதில்லை.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் அதிரடி வாதம்

cauvery-caseடெல்லி: காவிரி நதிநீர் தீர்ப்புகளை கர்நாடகா மதிப்பதில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் சார்பில் வாதிடப்பட்டுள்ளது.

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007ல் காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பபை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய 3 மாநிலங்கள் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இவற்றின் மீது உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் கர்நாடக அரசின் வாதம் இடம் பெற்றது. இதைத் தொடர்ந்து, கேரள அரசு வாதம் முன் வைத்தது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கேரள அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தா ஆஜராகி வாதம் முன் வைத்தார்.

கேரளாவின் வாதம் நிறைவுற்ற நிலையில், தமிழகம் இன்று வாதத்தை தொடங்கியுள்ளது. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே வாதங்களை முன்வைத்து வருகிறார்.

அவர் வாதிடுகையில், காவிரி நதிநீர் உத்தரவுகளை மீறுவதாக கர்நாடகா மீது குற்றச்சாட்டை முன்வைத்தார். தான் செய்வதே சரி என்ற போக்கில் கர்நாடகா செயல்படுகிறது என்று கடுமையான வாதத்தை தமிழகம் முன் வைத்தது.

கர்நாடகா மட்டுமின்றி, மத்திய அரசும் காவிரி பங்கீடு விவகாரத்தில் முறையாக செயல்படவில்லை என்றும், காவிரி நதிநீர் தீர்ப்புகளை கர்நாடகா மதிப்பதில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

மேலும், கர்நாடகா ஒழுங்காக தண்ணீர் தராததால் தமிழகத்தில் விவசாய நிலம் குறைந்துவிட்டது என்றும், தமிழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

காவிரி கர்நாடகாவில் உற்பத்தியாகிறது என்பதற்காக அந்த மாநிலம் உரிமை கொண்டாட முடியாது என்றும் தமிழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கர்நாடகா எதிர்க்க முடியுமா என கேள்வி எழுப்பினர்.

tamil.oneindia.com

TAGS: