புதுடில்லி, அண்டை நாடான சீனாவின் ஆயுத பலம் அதிகரித்து வருவதை அடுத்து, நம் நாடும், ஆயுத பலத்தை கணிசமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. எவ்வித போர் சூழலையும் எதிர் கொள்ளும் வகையில், புதிதாக ஆறு நீர்மூழ்கி கப்பல்களை வாங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், பிரான்சிட மிருந்து, ஐ.என்.எஸ்., கலாவரி என்ற நீர்மூழ்கி கப்பல், 23 ஆயிரத்து, 6௦௦ கோடி ரூபாய்க்கு வாங்கப்பட உள்ளது.
இந்திய பெருங்கடலில், ஊடுருவ, சீனா முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி யுள்ளது. இதையடுத்து, இந்தியாவின் நீர்மூழ்கி கப்பல் பலத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என கப்பற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியா – சீனா இடையே, பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. சமீப கால மாக, சிக்கிமை ஒட்டியுள்ள எல்லைப் பகுதி யில், இரு நாடுகளும் ராணுவத்தை குவித்து வைத்துள்ளன. இதனால், பதற்றம் நீடிக்கிறது.இந்நிலையில், இந்திய பெருங்கடல் பகுதியிலும் ஆக்கிரமிக்க, சீனா முயற்சித்து வரும் தகவல் கிடைத்துள்ளது.
இது பற்றி இந்திய கப்பற்படை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சீனாவை சேர்ந்த டீசலால் இயக்கப்படும், நீர் மூழ்கி கப்பல், கடந்த மே மாதம், இந்திய பெருங்கடல் பகுதியில் நிற்பதை, இந்திய கடற்படை கண்காணிப்பு விமானங்கள் பார்த்தன. எல்லையில், இந்திய – சீன ராணுவம் குவிக்கப்பட்டுள்ள நிலையில், தன் கடற்படை பலத்தையும் அதிகரிக்க சீனா முயற்சித்து வருகிறது.
இந்திய பெருங்கடலின் மேற்கு பகுதியில் உள்ள, டிஜிபூட்டியில், தன் கடற்படை தளத்தை, சீனா, கடந்த மாதம் திறந்தது. மேலும், பாகிஸ்தான், வங்கதேசத்துக்கு சமீபத்தில், நீர்மூழ்கி கப்பல்களை, சீனா விற்றுள்ளது.
கராச்சி துறைமுகத்துக்கு, சீனாவின், நீர்மூழ்கி கப்பல், கடந்த ஆண்டு சென்றதும், கடற்படையை வலுப்படுத்தும், சீனாவின் எண்ணத்தை வெளிப் படுத்துகிறது.இவ்வாறு அவர் கூறினார்.சீனாவின் இத்தகைய சவாலை எதிர் கொள்ள, இந்தியா இன்னும் தயாராகவில்லை.
இது பற்றி டில்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு திட்ட ஆராய்ச்சி மாணவர் ஒருவர் கூறியதாவது:
சீனாவின் சவாலை எதிர்கொள்ளும் அளவில், இந்தியாவின் நீர்மூழ்கி கப்பல்கள், பலம் வாய்ந்த தாக இல்லை. இதில், தொடர்ந்து அலட்சியம் காட்டப்படுகிறது. இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியை,ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். இதற்கு, நீர் மூழ்கி கப்பல் பலத்தை அதிகரிக்க வேண்டியது அவசியம்.
இந்தியாவின் நீர்மூழ்கி கப்பல் பலம் குறைந்து வருகிறது. டீசல் மூலம் இயக்கப்படும் நீர்மூழ்கி கப்பல்கள் 21 இருந்தன. இது, 13 ஆக குறைந்து விட்டது. ஏனெனில், பழைய கப்பல்களை மாற்ற, கடற்படை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போதுள்ள நீர்மூழ்கி கப்பல்களும் பழையதாகி விட்டன.
இதற்கு நேர்மாறாக, சீனாவிடம், ஐந்து அணு தாங்கி நீர்மூழ்கி கப்பல், 54 டீசல் நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. 2020ம் ஆண்டுக்குள், இந்த எண்ணிக்கை, மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. அதனால், எல்லையில் மட்டுமின்றி, இந்திய பெருங்கடல் பகுதியிலும், சீனாவால் பெரும் சவால்களை இந்தியா, விரைவில் எதிர்கொள்ள வேண்டியிருக் கும்.இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், நீர்மூழ்கி கப்பல் பலத்தை, இந்தியா அதிகரிக்க துவங்கியுள்ளது. இது பற்றி ராணுவ அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்தியா, புதிதாக ஆறு நீர்மூழ்கி கப்பல்களை வாங்க முடிவு செய்துள்ளது. பிரான்சிடமிருந்து, ஐ.என்.எஸ்., கலாவரி என்ற நீர்மூழ்கி கப்பல், 23,600 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட உள்ளது.
கடந்த, 2015, பிப்ரவரியில், அணு ஆயதம் தாங்கிய, ஆறு நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க, மத்திய அரசு அனுமதியளித்தள்ளது. 60ஆயிரம் கோடி ரூபாயில் இவை தயாரிக்கப்பட உள்ளன. மேலும், ஆறு டீசல் நீர்மூழ்கி கப்பலையும். தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பல நாடுகளில் உள்ள நிறுவனங்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
எண்ணம் பலிக்காது!
சீனாவின் திட்டம் பற்றி, ஓய்வு பெற்ற கடல்படை அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்திய பெருங்கடல்ப குதியை, சீனா ஆக்கிரமிப்பது என்பது, நடக்காத காரியம். எல்லையில், ‘பூச்சாண்டி’ காட்டுவது போலவே, கடல் பகுதியிலும் காட்ட முயற்சிக்கிறது.ஏனெனில், இந்திய பெருங் கடலுக்குள், மலாகா ஜலசந்தி வழியாகத்தான், சீனாவால் நுழைய முடியும். இது அவ்வளவு எளிதல்ல. அந்தமான் நிகோபார் தீவு பகுதியில், கடற்படை விமானங் கள், கண்காணிப்பு பணி யில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.அதுதான், இந்திய பெருங்கடலில், சீன நீர்மூழ்கி கப்பலை, கடந்த, மே மாதம் பார்த்து தெரிவித்துள்ளது.
அண்டை நாடுகளில் எல்லைப்பகுதிகள், கடல் பகுதிகளை ஆக்கிரமிக்க முயற்சிப்பது, சீனாவின் வழக்கமாக உள்ளது. அதனால், பல நாடுகளுடன், சீனாவுக்கு எல்லைப் பிரச்னை உள்ளது. அருணாச்சலுக்கு, சீனா சொந்தம் கொண்டாடினாலும், அது ஒருநாளும் சீனா வுக்கு சொந்தமாகாது.இவ்வாறு கூறினார்.
பதற்றம் குறையும்
சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் குறித்து, ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த, 1962ல், சீனா சண்டைக்கு வரும் என, யாருமே எதிர்பார்க்கவில்லை. மேலும், சுதந்திரம் பெற்று, 15 ஆண்டுகளே ஆகியிருந் தன. இதனால், நம் ராணுவம், பலம் பெற்றதாக இல்லை. அதனால், அருணாச்சலில் சில பகுதிகளை, சீன ஆக்கிரமித்தது. ஆனால், இப்போது அப்படியில்லை.
சீனாவின் முப்படைகளுக்கு, இந்தியாவின் முப்படைகளும் எந்த விதத்திலும் குறைந்தது இல்லை. அதனால், இந்திய பகுதிகளை ஆக்கிர மிக்கும் சீனாவின் கனவு, நனவாகாது. இது சீனாவுக்கும் தெரியும். ஆசியாவில், தன்னை பெரிய நாடு என காட்டிக் கொள்ளவே, சீனா இப்படி செய்கிறது. எல்லையில், விரைவில் பதற்றம் குறையும். இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
-dinamalar.com