டோக்லாம் சம்பவத்திலிருந்து இந்தியா பாடம் கற்க வேண்டும் சீனா சொல்கிறது

dhok lam

பெய்ஜிங், இந்தியா, சீனா, பூடான் நாட்டு எல்லைகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் சாலை அமைத்து வந்ததால், இந்திய ராணுவம் தலையிட்டு அப்பணியை நிறுத்தச் செய்தது. இதையடுத்து, இரு நாட்டு ராணுவத்தினரும் கடந்த 2 மாதங்களாக போர் முஸ்தீபுகளில் ஈடுபட்டு வந்தனர். டோக்லாமில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் கடந்த 73 நாட்களாக போர் பதற்றம் நிலவி வந்தது. அதை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சீனாவுடன் இந்தியா ராஜ்யரீதியில் பேச்சு நடத்தியது. அதன் பயனாக இரு தரப்பு போர் பதற்றம் முடிவுக்கு வந்துள்ளது.

திடீர் திருப்பமாக, இரு நாட்டு படைகளும் வாபஸ் பெறப்படுவதாக இரு நாடுகளும் நேற்று முன்தினம் அறிவித்தன. இருப்பினும் சீனா ‘வானிலை, கள நிலவரம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து சாலை பணியை நிறைவு செய்வோம்’ என கூறிஉள்ளது.

சீனாவில், பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் அங்கம் வகிக்கிற ‘பிரிக்ஸ்’ அமைப்பின்9-வது ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு நடக்க உள்ளது. செப்டம்பர் 3-ந் தேதி தொடங்குகிற ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மாநாட்டின் இடையே ஜின்பிங்கை பிரதமர் மோடி தனியாக சந்தித்து பேசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் டோக்லாம் சம்பவத்திலிருந்து இந்தியா பாடம் கற்க வேண்டும் என சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி கூறிஉள்ளார்.

சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி செய்தியாளர்களிடம் பேசுகையில், “டோக்லாம் மோதல் சம்பவத்தில் இருந்து இந்தியா பாடம் கற்றுக் கொள்ளும், இதுபோன்ற சம்பவங்கள் வருங்காலங்களில் நடைபெற அனுமதிக்காது என நம்புகிறோம்,” என கூறிஉள்ளார். டோக்லாமில் இந்திய ராணுவம் எங்களுடைய எல்லைக்குள் வந்ததால் மோதல் ஏற்பட்டது, இப்போது அது தீர்க்கப்பட்டது என கூறிய வாங் யி,  மீடியாக்களிடம் அவர்களுடைய சொந்த யூகங்கள் இருக்கலாம். அரசிடம் இருந்து வெளியாகும் அதிகாரப்பூர்வமான தகவல்களே முக்கியமானவை. சீன ராணுவம் மற்றும் வெளியுறவுத்துறை வெளியிடும் தகவல்களே உண்மையை பிரதிபலிக்கும் என குறிப்பிட்டு உள்ளார்.

-dailythanthi.com

TAGS: