திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் காணாமல் போன வைரகற்கள் மீட்பு

Padmanabhaswamyதிருவனந்தபுரம்,

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரகற்கள் மீட்கப்பட்டன.

வைரகற்கள் மாயம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பிரசித்த பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சயன கோலத்தில் காட்சி தரும் மூலவரான பத்மநாபசுவாமி விலை மதிப்பு மிக்க தங்கம் மற்றும் வைர ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு மூலவருக்கு அணிவிக்கப்பட்டு இருந்த ஆபரணங்களை மதிப்பீடு செய்தனர். அப்போது வைர ஆபரணம் ஒன்றில் இருந்த 12 வைர கற்கள் மாயமாகிவிட்டிருந்தது.

இந்த வைர கற்கள் பல கோடி ரூபாய் மதிப்புமிக்கவை என்பதால் இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அந்த வைரகற்கள் திருட்டு போய் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. இதேபோல் இன்னும் பல ரத்தினக் கற்களும் மாயமானது.

வளாகத்தில் மீட்பு 

இதுபற்றி விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் மூலவர் பத்மநாபசுவாமியின் ஆபரணங்கள் அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மூலவரின் ஆபரணங்களை முதல்கட்ட மதிப்பீடு செய்தனர். இந்த நிலையில் திருட்டு போனதாக கருதப்பட்ட 12 வைர கற்களும் கோவில் வளாகத்துக்கு உள்ளேயே கிடப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்த வைர கற்கள் மீட்கப்பட்டன.

இதுபற்றி விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த வைர கற்களை யாரும் திருடிச் செல்லவில்லை. பத்மநாபசுவாமியின் வைர நகைகளை பூஜைக்காக கையாண்டபோது அவை தற்செயலாக கோவில் வளாகத்துக்குள் விழுந்திருக்கலாம். அவற்றை மீட்டு விட்டோம். இந்த 12 வைரகற்களும் வைர ஆபரணத்தில் இருந்த 26 வைர கற்களின் ஒரு பகுதிதான். மூலவரின் ஆபரணங்களில் இதேபோல் காணாமல் போன இன்னும் பல ரத்தினக் கற்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.

கணக்கிடவில்லை 

மேலும் அவர், “மீட்கப்பட்ட 12 வைர கற்களும் பல கோடி ரூபாய் மதிப்பு கொண்டவையாக இருக்கலாம். அவற்றின் மதிப்பு குறித்து இதுவரை கணக்கிடவில்லை. மற்ற ரத்தினக் கற்களையும் விரைவில் மீட்போம்” என்றும் தெரிவித்தார்.

-dailythanthi.com

TAGS: