தமிழர் தொன்மையை பறைசாற்றும் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள பொருட்களின் சிறப்புகள் இதுதான்!

keezhadi-sivagangai3சிவகங்கை: கீழடியில் நடைபெற்று வரும் 6-ஆம் கட்ட அகழாய்வு பிரிவில் கண்டெடுக்கப்பட்டவை குறித்தும், என்னென்ன பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறித்தும் இந்த பருவத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளவை எப்படி ஆவணப்படுத்தப்பட உள்ளது என்பது குறித்து ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பெங்களூரில் உள்ள இந்திய தொல்லியல் துறையின் (அகழாய்வு பிரிவு-6) தொல்லியல் தண்காணிப்பாளர் பு.சு. ஸ்ரீராமன் அளித்த அறிக்கை:

சிவகங்கை மாவட்டம், திருபுவனம் வட்டம், கீழடி அருகே அமைந்துள்ள பள்ளிச் சந்தை திடலில் இந்தியத் தொல்லியல் துறையினரால் கடந்த 2 ஆண்டுகளாக (2014-15, 2015-16) அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டுமானங்கள் மற்றும் பலவகையான தொல்பொருள்கள் வெளிக் கொணரப்பட்டன.

மத்திய அரசின் பண்பாட்டுத் துறையின் அமைச்சர் மகேஷ் வர்மா கடந்த 2017 ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி கீழடி அகழாய்விடத்திற்கு வருகை புரிந்தார். அப்போது பத்திரிகையாளர்களுடன் நடந்த சந்திப்பில் அவர் கீழடியில் அகழாய்வு தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்தார்.

அதனடிப்படையில் 2017 மே மாதம் 27-ஆம் தேதி கீழடியில் இந்தியத் தொல்லியல் துறையின் 6-ஆம் அகழாய்வுப் பிரிவு அகழாய்வை தொடங்கியது. 2015-2016-இல் அறியப்பட்ட கட்டட எச்சங்களின் தொடர்ச்சியைக் கண்டறியும் பொருட்டு, கடந்த ஆண்டு கட்டட எச்சங்கள் கிடைத்த குழிகளின் தொடர்ந்தாற்போல் வடபுறத்தில் 400 சதுர மீட்டர் பரப்பளவில் குழிகள் இடப்பட்டு அகழாய்வு நடைபெற்று வருகிறது. கடந்த இரு பருவங்களில்- ஜனவரி 2015 முதல் செப்டம்பர் 2016 வரை- தோண்டப்பட்ட மொத்த குழிகளின் பரப்பளவு சுமார் 2500 சதுர மீட்டர் ஆகும்.

கட்டட எச்சங்கள்

முந்தைய அகழாய்வில் கண்டறியப்பட்ட கட்டுமானங்கள் கிடைத்த குழிகளின் அருகாமைக் குழிகளில் அகழாய்வு தொடர்ந்தது. முன்பு கண்டறியப்பட்ட கட்டுமானங்களின் ஆழத்தை அல்லது நிலையை இக்குழிகளில் அடைந்த போதிலும் மேற்கண்ட கட்டுமானங்களின் தொடர்ச்சியோ அல்லது அதனோடு தொடர்புடைய எவ்விதக் கூறுகளும் இக்குழிகளில் கிடைக்கவில்லை.

உறை கிணறுகள்

ஆயினும் மிகவும் சிதலமடைந்த வளைந்த நிலையில் ஒரு செங்கல் கட்டடம் மற்றும் 3 உறை கிணறுகள் மாத்திரமே தற்போது வெளிப்பட்டுள்ளது. இது தவிர்த்து சுமார் 3 மீட்டர் ஆழத்தில் தொடர்ச்சியற்ற நிலையில் பெரிய அளவிலான செங்கற்களைக் கொண்டு (38 செ.மீ.நீளம்) கட்டப்பட்ட துண்டுச் சுவரொன்றும் கிடைத்துள்ளது. இவ்விரு கட்டட எச்சங்களைத் தவிர வேறு எந்த கட்டட அமைப்புகளும் இப்பருவத்தில் கிடைக்கப் பெறவில்லை. இதன் மூலம் இவ்விடத்தில் கட்டடங்கள் தொடர்ச்சியாகவோ அல்லது பரவலாகவோ கட்டப் பெறவில்லை என்று தெரியவருகிறது.

காலத்தால் முந்தையது

இப்பருவத்தில் சுமார் 3 மீட்டர் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட துண்டுச் சுவற்றின் மூலம் இவ்விடத்தில் இரு கால கட்டங்களில் கட்டுமானங்கள் கட்டப்பெற்றுள்ளன என்று தெரிய வருகிறது. இத்துண்டுச் சுவரே காலத்தால் முந்தைய கட்டுமானமாகும். இச்சுவற்றின் சமநிலையில் சேகரிக்கப்பட்ட கரித்துகள்கள் கரிமப்பகுப்பாய்விற்கு உள்படுத்தப்படும்போது இதன் காலம் தெரிய வரலாம்.

அகழாய்வு திட்டம்

இப்பருவத்திற்கான அனுமதிக் காலம் குறைவாகவே இருந்ததால் அகழ்வாராய்ச்சி 400 சதுர மீட்டர் பரப்பளவில் மட்டும் மேற்கொள்ளப்பட்டது. அதிக கட்டுமானங்கள் அனைத்துக் குழிகளில் கிடைக்கப் பெறாததால் இந்நிலைக்கு கீழேயுள்ள மண்ணடுக்குகள் தீவிர அகழ்வாராய்ச்சிக்கு உள்படுத்த திட்டமிடப்பட்டது. ஆயினும், தொடர் மழையின் காரணமாக ஒரு சில குழிகளில் மட்டும் கன்னிமண் வரை அடைய அகழ்வாராய்ச்சி தொடர்கிறது.

தொல் பொருள்கள்

இப்பருவத்தில் இதுவரை சுமார் 1800-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 1500-க்கும் மேற்பட்டவையாக மணிகளே உள்ளன. மொத்த மணிகளில் 90 விழுக்காடு கண்ணாடியில் செய்யப்பட்டவை. மீதமுள்ள மணிகள் பளிங்கு, சூதுபவளம், பச்சைக்கல் மற்றும் சுடுமண்ணில் செய்யப்பட்டவையாகும். இதுதவிர தந்தத்தில் செய்த சீப்பின் உடைந்த பகுதி, விளையாட்டுக் காய்கள், காதணிகள், செப்பு, எலும்பு முனைகள், இரும்பு உளிகள் போன்ற பொருள்கள் கிடைத்துள்ளன.

தமிழ் பிராமி பானையோடு

இன்று வரை 14 தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய பானையோடுகள் கிடைத்துள்ளன. அவற்றுள் ஒளிய (ன்) என்ற முழுப்பெயரும் மற்றவை தனிநபர்களின் பெயர்களில் ஓரிரு எழுத்துக்களே காணப்படுகின்றன. இதில் 12 எழுத்துக்களைக் கொண்ட பானையோட்டொன்று குறிப்பிடத்தக்கது. இதன் மீது ….ணிஇய் கிதுவரன் வேய்இய் என்று பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் சதுர மற்றும் வட்ட வடிவிலான தேய்ந்த செப்புக் காசுகள், 5 தங்கப் பொருள்கள், ஒரு சில மண்ணுருவங்களும் அகழாய்வில் இதுவரை கிடைத்துள்ளன.

மற்ற செய்திகள்

இப்பருவத்தில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்கள் அனைத்தும் குழி, மண்ணடுக்கு வாரியாக பிரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும். ஆய்விற்கு பிறகு எழுதும் தரவுகள் ஒழுங்கு செய்யப்பட்டு அகழாய்வு அறிக்கையாக விரைவில் தயாரிக்கப்படும். இது தவிர்த்து இடைக்கால அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டு இந்தியத் தொல்லியல் துறையின் தலைமையிடத்துக்கு இரு மாதங்களில் அளிக்கப்படும்.

இணையத்தில்

மேலும் இப்பருவத்தில் கிடைத்து ஆவணப்படுத்தப்பட்டுள்ள அனைத்து தொல்பொருள்களின் விவரங்கள் http://nmma.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அனுப்பப்படும். இது National Mission on Monuments and Antiquities என்ற அமைப்பின் அதிகாரப்பூர்வமான இணையதளமாகும். இப்பருவத்தில் சேகரிக்கப்பட்ட கரித்துகள் மாதிரிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கரிம பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டு கால நிர்ணயம் செய்யப்படும். தொடர்ச்சியாக பெய்த மழையின் காரணமாக அகழாய்வு பணி தொடர்ந்து நடைபெற்றதாலும் கூட திட்டமிட்ட வேகத்தில் மேற்கொள்ள முடியவில்லை.

கடைசி நாள் எப்போது

இப்பருவத்தின் அகழாய்விற்கான அனுமதி செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைவதால் அகழாய்வுப் பணிகள் விரைவில் நிறைவு பெறும். அருங்காட்சியகம் அமைத்தல் மற்றும் கட்டுமானங்களை பொதுமக்களின் பார்வைக்கு வெளிக் கொணர்தலுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவின்படியும், அறிவுறுத்தலின்படியும் நடவடிக்கை எடுக்கப்படும். 4-ஆம் பருவத்தில் அகழாய்வு மேற்கொள்ள இந்தியத் தொல்லியல் துறையின் அகழாய்வு பிரிவு- 6 மற்றும் தமிழகத் தொல்லியல் துறையின் மூலமாகவும் வரைவுத் திட்டம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வரைவுத் திட்டங்களை பரீசலித்து தக்க முடிவினை இந்தியத் தொல்லியல் துறையின் தலைமையிடம் அறிவிக்கும் என்று அந்த ஆய்வறிக்கை விளக்குகிறது.

tamil.oneindia.com

TAGS: