டாக்கா, மியான்மரில் போலீஸ் படையினர் மீது கடந்த மாதம் 25-ந் தேதி ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் (அர்சா) தாக்குதல் நடத்தி, 12 பேரை கொன்றனர்.
அதைத் தொடர்ந்து, ராக்கின் மாகாணத்தில் இருந்து வந்த அந்த இன மக்கள் மீது ராணுவமும், புத்த மதத்தினரும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். அதைத் தொடர்ந்து உயிர் பிழைப்பதற்காக சுமார் 4 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் வங்காளதேசத்துக்கு சென்று தஞ்சம் அடைந்தனர். அங்கு சென்றுள்ள ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள தங்கும் இல்லங்கள் தவிர்த்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வங்காளதேச போலீசார் அறிவித்துள்ளனர்.
ரோஹிங்யா முஸ்லிம் மக்களை வாகனங்களில் வெளியிடங்களுக்கு ஏற்றிச்செல்லக்கூடாது என வாகன உரிமையாளர்களுக்கும், டிரைவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு வாடகைக்கு கட்டிடங்களை விடக்கூடாது எனவும் வீடுகளின் உரிமையாளர்களுக்கு தடை போடப்பட்டுள்ளது. மியான்மரில் ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளார்கள் இடையிலான மோதலின் பிடியில் சிக்கிய 500க்கும் மேற்பட்ட இந்துக்களும் அகதிகளாக வங்காளதேசம் வந்து உள்ளனர். அவர்கள் இந்திய அரசு அடைக்கலம் கொடுக்கும் என நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். இந்து அகதிகள் மீண்டும் மியான்மருக்கு செல்வதற்கு அச்சம் தெரிவித்து உள்ளனர். வங்காளதேசத்தில் அகதிகள் முகாமில் தங்கி உள்ள நிரஞ்சன் ருத்ரா பேசுகையில், “இந்தியா, இந்துஸ்தான் எனவும் அறியப்படுகிறது, இந்துக்களின் நாடாகும்,” என குறிப்பிட்டு உள்ளார்.
இந்தியாவில் நாங்கள் அமைதியான வாழ்வையே விரும்புகிறோம், வேறு எதையும் நாங்கள் நாடவில்லை, எங்களால் மீண்டும் மியான்மருக்கு திரும்ப முடியாது, இங்கேயும் தொடர்ச்சியாக இருக்கமுடியாது,” எனவும் குறிப்பிட்டு உள்ளார். மீடியாக்கள் வாயிலாக எங்களுடைய கோரிக்கையானது இந்திய அரசை எட்டவேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக இந்திய அரசிடம் இருந்து எந்தஒரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் பாரதீய ஜனதா கட்சியுடன் கொள்கை ரீதியில் நெருங்கிய தொடர்புடைய விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மூத்த உறுப்பினர் அஷின்தியா பிஸ்வாஸ் பேசுகையில்,
இந்து குடும்பங்கள் இந்தியாவிற்குள் நுழைய அரசு அனுமதிக்க வேண்டும் என கூறிஉள்ளார் என ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. தொலை பேசியில் பேசிய அவர், “அவர்கள் வேறு எங்கு செல்வார்கள்? இது அவர்களுடைய சொந்த பகுதியாகும் என கூறிஉள்ளார் என செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மியான்மர் மற்றும் வங்காளதேசத்தில் இருந்து வரும் இந்துக்களுக்கு இந்தியாவில் புகழிடம் கொடுக்கும் வகையில் புதிய கொள்கையை வகுக்குமாறு உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.
மியான்மர் மற்றும் வங்காளதேசத்தில் சிறுபான்மையினராக இருந்துவரும் இந்துக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்க்கொண்டு வருகிறார்கள்.
முகாமில் இரு குழந்தைகளுடன் இருக்கும் வீனா (கணவர் மலேசியாவில் பணியாற்றுகிறார்) பேசுகையில், ஆகஸ்ட் 25-ம் தேதி எங்களுடைய கிராமத்தினை கருப்பு முகமுடி அணிந்திருந்த 100-க்கும் மேற்பட்டோர் சுற்றி வளைத்தனர். அவர்கள் சிலரை கிராமத்தை விட்டு வெளியேறுமாறு அழைப்பு விடுத்தனர். ராணுவத்திற்கு எதிராக போரிட அழைப்பு விடுத்தனர். அதனை தொடர்ந்து நாங்கள் துப்பாக்கி சூடு சத்தத்தை கேட்டோம். நிலை மோசம் அடைவதை அறிந்து நான் பிற குடும்ப உறுப்பினர்களுடன் அங்கிருந்து புறப்பட்டுவிட்டோம். இரண்டு நாட்கள் நடந்து வங்காளதேசம் வந்துவிட்டோம். இங்கு எங்களை சுற்றிலும் அதிகமான மக்கள் உள்ளனர், எங்களால் மியான்மருக்கும் செல்ல முடியாது. எங்களுடைய பூமியான இந்துஸ்தானுக்கு நாங்கள் செல்ல வேண்டும், நாங்கள் எங்கிருந்தாலும் பாதுகாப்பை உணரவேண்டும்,” என கூறிஉள்ளார்.
-dailythanthi.com