நெல்லை, நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்திருந்த உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கூடங்குளத்தில் முதலாவது மற்றும் 2–வது அணு உலைகளுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு கடுமையாக போராடினார்கள். 5 ஆண்டுகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட போதும் மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. எனவே ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். இதனால் அணுஉலைகளை ஏற்றுக் கொண்டதாக கருதக்கூடாது.
தற்போது 3, 4–வது அணு உலைகள் அமைப்பதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். போராட்டம் சில நேரங்களில் மிதமாகவும், சில நேரங்களில் வலிமையாகவும் இருக்கும். எனவே மீண்டும் பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் அரசியலுக்கு வர உரிமை உள்ளது. ஆனால் சினிமா துறையில் இருந்து கொண்டே குறுக்கு வழியில் அதிகாரத்தை ஏற்க நினைப்பதை ஏற்க முடியாது. இவர்கள் நடிப்பதை கைவிட்டு, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பேசி, அதன்பிறகு அரசியலுக்கு வரவேண்டும்.
இந்தியாவில் ஊழலை மட்டுமே எதிர்த்து அரசியல் செய்ய முடியாது. ஆம் ஆத்மி கட்சி கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பரந்துபட்ட புரிதல் இல்லை. அவர், அதேபோன்ற பரந்துபட்ட புரிதல் இல்லாத கமல்ஹாசனை சந்திக்கிறார். இவர்களது சந்திப்பால் ஒன்றும் நடந்துவிடப் போவதில்லை. கமல்ஹாசனை நம்பி மக்கள் ஏமாந்து விடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
-dailythanthi.com