‘காஷ்மீர் மக்களை உணர்வுரீதியாக இழந்துவிட்டோம்!’ – பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா

மூத்த பாஜக தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான யஷ்வந்த சின்கா, ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் இந்திய அரசின் நிலைப்பாடுகள் வருத்தம் அளிப்பவையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்திய அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்களால் மக்கள் ஏமாற்றப்பட்டதாகவும், அவை பேரழிவிற்கு வழிவகுத்ததாகவும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா தெரிவித்திருந்தார். அவர் ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை உள்ளிட்டவற்றை விமர்சித்து, அரசியல் சூழலில் பரபரப்பையும் ஏற்படுத்தினார்.

இந்நிலையில், ஆங்கில ஊடகத்தின் பேட்டியில் கலந்துகொண்ட அவர், ‘ஜம்மு காஷ்மீர் பகுதியில் ஒடுக்கப்பட்டு விரக்தியடைந்துள்ள மக்களை நான் பார்க்கிறேன். என் வாழ்வில் என்னை இதுவரை அதிகமாக தயக்கமுறச் செய்த காட்சி அதுதான். நாம் அந்த மக்களை உணர்வுரீதியில் இழந்துவிட்டோம். அந்த மக்கள் நம் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டார்கள் என்பதை உணர நீங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு நேரடியாக சென்று பார்க்கவேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

யஷ்வந்த் சின்ஹா காஷ்மீர் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் அமைப்பு ஒன்றிற்கு தலைமை வகிக்கிறார். இந்த அமைப்பில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.பி.ஷா, மும்பை முன்னாள் காவல் ஆணையர் ரிபேரியா உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர். இந்தக்குழு காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளுக்கு பலமுறை சென்று, அங்குள்ளவர்களிடம் கடந்த 70 ஆண்டுகளாக நிலவிவரும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண விவாதித்து வருகிறது.

– ச.ப.மதிவாணன்

TAGS: