ஊழலுக்கு எதிராக மீண்டும் ஒரு மாபெரும் போராட்டம்: அன்னா ஹசாரே திட்டம்

புதுடெல்லி, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஊழலற்ற இந்தியாவை உருவாக்கும் வகையில் லோக்பால் அமைப்பை கொண்டுவர வேண்டும் எனவும், விவசாயிகளின் நலன்கள் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தயாரிக்கப்பட்ட சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தார். அவரது போராட்டத்துக்கு பெருத்த ஆதரவு கிடைத்தது. இதையடுத்து, லோக்பால் அமைப்பு விரைவில் கொண்டு வரப்படும் என அப்போதைய மத்திய அரசு உறுதி அளித்ததால் அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை கைவிட்டார். எனினும் லோக்பால் சட்டம் கொண்டு வரப்படவில்லை. பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக லோக்பால் அமைப்பு கொண்டு வரப்படும் என்று உறுதியளித்தது.

ஆனால் பாஜக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் முடிந்த நிலையில் இன்னும் லோக்பால் அமைப்பு கொண்டு வரப்படவில்லை. இந்தநிலையில் இது தொடர்பாக அன்னா ஹசாரே செய்தியார்களிடம் கூறியதாவது:

நாட்டில் இன்னும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை திருப்தி ஏற்படவில்லை. லோக்பால், லோக் அயுக்தா பலமற்றதாகவே உள்ளது. கருப்பு பணம் ஒழிப்பில் மோடி அரசு கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை. விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து நடக்கிறது. பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே மீண்டும் ஒரு சத்தியாகிரக போராட்டத்தை காந்தி சமாதியில் இருந்து துவக்க வேண்டியுள்ளது.

மாபெரும்  போராட்டம் நடத்துவது தொடர்பாக எங்கள் குழு ஆலோசனை நடத்தி வருகின்றது. இந்த மாபெரும் போராட்டம் இந்த ஆண்டு கடைசிவாரம் அல்லது அடுத்த ஆண்டு முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் இவ்வாறு கூறினார்.

-dailythanthi.com

TAGS: