கந்துவட்டி பிரச்சனை: திருநெல்வேலியில் 2 குழந்தைகளுடன் இளம் தம்பதி தீக்குளிப்பு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு நாள் கூட்டத்தின்போது, முறையற்ற வட்டி கேட்டு துன்புறுத்தியதால், இளம் தம்பதியினர், இரண்டு குழந்தைளுடன் தீக்குளித்ததாக பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

எசக்கிமுத்து(28) அவரது மனைவி சுப்புலட்சுமி (25) மற்றும் அவரது இரண்டு பெண் குழந்தைகள் (2 வயது சரண்யா, 4 வயது அட்சயபரணிக்கா) ஆகியோர் கந்துவட்டி கொடுமையில் இருந்து தங்களை மீட்கக்கூறி நான்காவது முறையாக மனு அளிக்கவந்ததாக, தீக்குளிப்பு சம்பவம் நடந்தபிறகு செய்தியாளர்களிடம் பேசிய எசக்கிமுத்துவின் உறவினர் கோபி தெரிவித்தார்.

”ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்தால், காவல் நிலையத்திற்கு அனுப்புகிறார்கள். காவல் நிலையத்தில் சமரசம் செய்ய பணம் கேட்கிறார்கள். எசக்கிமுத்துவின் குடும்பத்தினரின் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் அதற்கு காரணம் கந்துவட்டிக்கார்களும், அரசு அதிகாரிகளும்தான் நேரடி பொறுப்பு ஏற்கவேண்டும்,” என்றார் கோபி.

எசக்கிமுத்து 1.40 லட்சம் கடன் வாங்கியிருந்ததாகவும், இதுவரை இரண்டுலட்சம் செலுத்தியபிறகும் வட்டி செலுத்த கட்டாயப்படுத்தப்பட்டதால் எசக்கிமுத்து புகார் அளித்ததாக கோபி கூறினார்.

எசக்கிமுத்து குடும்பத்தினர் தீக்குளித்த சமயத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலுதவி அளிக்காமல் போனது மற்றும் அவசர ஆம்புலன்ஸ் இல்லாமல் போனது பெரிய அவலம் என வழக்கறிஞர் அப்துல் ஜாபர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

”திருநெல்வேலி மாவட்டம் கந்துவட்டியின் தலைநகரமாக மாறியுள்ளது. எசக்கிமுத்து குடும்பத்தினர் தீக்குளித்த நேரத்தில் அவர்களை காப்பாற்ற எந்த வசதியும் அங்கு இல்லை. காவல்துறையினரின் வாகனத்தில்தான் பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துச்செல்லப்பட்டனர். சிலர் மண்ணை அள்ளி தீக்குளித்தவர்கள் மீது வீசினர். யாராவது கெட்டியான துணியைக் கொண்டு குழந்தைகளையாவது காப்பாற்ற முயற்சி செய்திருக்கலாம்,” என அப்துல் ஜாபர் கூறினார்.

சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து குழந்தைகளுடன் ஒரு தம்பதியும், ஒரே குடும்பத்தில் ஏழு நபர்களும் கந்துவட்டி கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் நடந்தன என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் பல அரசுஅதிகாரிகளும் கந்துவட்டிக்காரர்களின் பிடியில் சிக்கியுள்ளதாக கூறினார்.

கந்துவட்டி கொடுமையை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது என்றும், கந்துவட்டி கொடுமையைத் தடுக்க உதவி எண் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

எசக்கிமுத்து குடும்பத்திற்கு முதலுதவி அளிக்கப்படாமல் போனது பற்றிக் கேட்டபோது, ”இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திறந்தவெளியில் நடந்தது. எங்களிடம் தீயணைப்பு கருவிகள் இருந்தன. ஆனால் சிலர் மணல்தூவி தீயைத் தடுக்க முயன்றனர். ஆட்சியர் அலுவலகத்தில் ஆம்புலன்ஸ் நிறுத்திவைக்கும் நடைமுறை இதுவரை இல்லை. வருங்காலத்தில் அந்தவசதியை செய்ய முயற்சி எடுப்போம்,” என சந்தீப் நந்தூரி பிபிசி தமிழிடம் தெரிவித்தார். -BBC_Tamil

TAGS: