காஷ்மீருக்கு கூடுதல் தன்னாட்சி கேட்பதா? ப.சி.க்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு கூடுதல் தன்னாட்சி வழங்க வலியுறுத்தியுள்ள முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு கூடுதல் தன்னாட்சி வழங்க வேண்டும் என்பது ப. சிதம்பரத்தின் கருத்து. இதற்கு மத்திய அமைச்சர்கள் அருண்ஜேட்லி, ஸ்மிருதி இரானி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில் ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி இக்கருத்தை வரவேற்றுள்ளது. ஜம்மு காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண கூடுதல் தன்னாட்சி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது தேசிய மாநாட்டு கட்சி.

ப.சிக்கு கண்டனம்

ஆனால் ப.சிதம்பரத்தின் கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இது தொடர்பாக பிரதமர் மோடி பேசியதாவது:

காங். பதில் தர வேண்டும்

காஷ்மீர் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்து வரும் கருத்துக்கு அக்கட்சி பதில் கூற வேண்டும். காஷ்மீருக்கு கூடுதல் தன்னாட்சி வழங்க வேண்டும் என்கிற கருத்து ஏற்க முடியாது.

மக்கள் எதிர்பார்க்கவில்லை

காங்கிரஸ் கட்சியிடம் இருந்து இப்படியான ஒரு கருத்தை நாட்டு மக்கள் எதிர்பார்க்கவில்லை. காஷ்மீருக்கு தன்னாட்சி தேவை என காங்கிரஸ் தலைவர்கள் பேசுவது என்பது ராணுவ வீரர்களை அவமதிப்பதாகும்.

மக்களுக்கு எதிரானது

காங். டோக்லாம் விவகாரத்தின் போது காங்கிரஸ் கட்சியினர் பொய்யான தகவல்களை பரப்பிவிட்டனர். நாட்டு மக்களின் உணர்வுக்கு விரோதமானதாக காங்கிரஸ் இருந்து வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

tamil.oneindia.com

TAGS: