மீண்டும் சென்னையை வெளுத்துவாங்கிக் கொண்டிருக்கிறது வடகிழக்குப் பருவமழை. அக்டோபர் 25ஆம் தேதியில் தொடங்கி நவம்பர் 3ஆம் தேதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னமும் அது முடிந்தபாடில்லை. 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழையில் ஏற்பட்ட பாதிப்புகளை விடவும் தற்போதைய பாதிப்பு குறைவுதான் என்றாலும், மக்களின் இயல்பு வாழ்க்கையானது எப்போதும்போல ஸ்தம்பித்துப் போய்தான் கிடக்கிறது.
மழை தொடங்கும் முன்பே முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பல்வேறு தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலும், மழை பெய்து வீடுகளுக்குள் நீர் புகுந்த பிறகுதான் பம்புகளோடு சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு விரைகிறது மீட்புக்குழு. வடகிழக்கு பருவமழை என்றாலே இரவு வேளைகளில்தான் மழைப்பொழிவைத் தரும் என்பதால், விடிந்து எழுவதற்குள் வீடுகளுக்குள் நீர் புகுந்து விடுகிறது.
2015ஆம் ஆண்டு பெருவெள்ளம், 2016 வர்தா புயல் என தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு சென்னையைப் புரட்டிப் போட்டது இதே வடகிழக்கு பருவமழைதான். இரண்டு முறை மோசமாக அடிவிழுந்தும் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க இந்த அரசு தவறிவிட்டது என்பதை மறுக்கமுடியாது. ஒவ்வொரு முறையும் அடிவிழுந்த பின்பே அவசரம் காட்டும் அரசின் அலட்சியத்தைப் பேசக்கூட நேரமில்லாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில், எந்த பாதிப்பும் இல்லையென சொல்லும் அமைச்சர்களை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பதென்பதே புரியவில்லை யாருக்கும்.
இந்நிலையில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் நம்மிடம், ‘இந்த அரசு எப்பொழுதும் அலட்சியமாகவே இருந்துள்ளது. 2015ஆம் ஆண்டு வெள்ளத்தை அடுத்து பூவுலகின் நண்பர்கள் சார்பில் ‘மக்கள் வரைவு சாசணம்’ என்ற ஒன்றை உருவாக்கி அதை அரசிடம் கொடுத்தோம். அரசு அதுகுறித்து எந்தவித நடவடிக்கையுமே எடுக்கவில்லையே.
அரசு நினைத்தால் மழை சமயங்களில் நீர் தேங்கவிடாமல் எப்போதோ தடுத்திருக்க முடியும். ஆனால், நாம் முன்வைக்கும் கோரிக்கைகளை அரசு எப்போதுமே கவனிப்பது இல்லையே. மூன்றாவது முறையாக பாதிப்பைச் சந்தித்திருக்கும் சென்னை இயற்கையாகவே அதிகமான வடிகால்களைக் கொண்ட நகரம். மூன்று பெரிய நதிகள், 18 பெரிய ஓடைகள் மற்றும் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய ஓடைகள் இங்கு உள்ளன. இந்த சிறிய ஓடைகளில் இருந்து பெரிய ஓடைகளுக்கு செல்லும் நீர், பெரிய ஓடைகளில் இருந்து பெரிய நதிகளில் கலக்கிறது. இந்த படிநிலைக்கு வழிவிடாத ஆக்கிரமுப்புகளில் வடிகால்களை ஏற்படுத்தி, கழிமுகப் பகுதிகளை தூர்வாரினாலே பிரச்சனைகளை நிச்சயமாக தடுக்கமுடியும்.
இதற்கான கோரிக்கைகளை முன்வைத்து, பலமுறை வலியுறுத்திய பின்பு அக்டோபர் 30ஆம் தேதிதான் அரசாணை ஒன்றை அரசு வெளியிடுகிறது. பருவமழை பொழியும் சமயத்தில் அரசாணை வெளியிடுவது எப்படி பயனுள்ளதாக இருக்கும்? தற்போது தேங்கியிருக்கும் நீரை ஓடைகளை வெட்டியோ, பம்புகளைக் கொண்டோ வெளியேற்றிவிடலாம். ஆனால், இதுவே எப்போதுக்குமான தீர்வாக இருக்காதல்லவா?’ என்கிறார் ஆதங்கமாக.
மழையென்றால் வெறும் நீரால் மட்டும் ஏற்படும் பாதிப்பல்ல. மின்சாரம் தாக்கி 2 சிறுமிகளின் உயிர் பறிபோயிருக்கிறது. வரிசையாக இறப்பு குறித்த செய்திகள் வருகின்றன. விஷப்பாம்புகள் உள்ளிட்ட பலவற்றால் பாதிப்புகள் ஏற்படலாம். இதுபோன்ற பாதிப்புகளை மக்கள் அனுபவிப்பது இதுவே கடைசி முறையாக இருக்கவேண்டும். ஒவ்வொரு பருவமழையிலும் உடைமைகளையும், உயிர்களையும் இழந்து உணர்வற்றவர்களாய் நிற்பதற்கு மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.
- ச.ப.மதிவாணன்ப
டங்கள் – ஸ்டாலின்
-nakkheeran.in