ஜனாதிபதி ஆட்சியை நோக்கி மெல்ல மெல்ல நகரும் தமிழகம்!

சென்னை: தமிழகம், ஜனாதிபதி ஆட்சியை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து வருவதாகவே தெரிகிறது நடக்கிற நிகழ்வுகளைப் பார்த்தால். தமிழக அரசு நிர்வாகத்தின் தலைமையிடமான, சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆளுநருக்கு என்று ஒரு தனி அறை இருக்கிறது. இந்த அறையானது முதலமைச்சரின் அறைக்கு பக்கத்திலேயே இருக்கிறது.

இது வெளியுலகில் உள்ள பலருக்கும், ஏன் அரசியல் வாதிகளிலேயே பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். இதற்கு முக்கிய காரணம் அந்த அறைக்கு தமிழகத்தின் ஆளுநர்களாக இருப்பவர்கள் வருவது என்பது அரிதினும் அரிதானதாகவே இருந்திருக்கிறது.

இந்த கட்டுரையாளரின் நினைவுகள் சரியாக இருக்குமானால், கடைசியாக அந்த ஆளுநர் அறைக்கு வந்தவர் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா. எப்போது என்றால் 31.01. 1991. அதாவது அதற்கு முந்தய நாள், 30.01.1991 ல் தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த, முதலமைச்சர் மு.கருணாநிதியின் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டபோதுதான்.

அப்போது மத்தியில் சந்திரசேகர் பிரதமராக இருந்தார். காங்கிரசின் 195 மக்களவை எம் பி க்கள் மற்றும் ஜெயலலிதா தலைமயிலான 10 க்கும் மேற்பட்ட எம் பி க்களின் ஆதரவுடன், சந்திரசேகரின் சமாஜ் வாதி ஜனதா கட்சி (ராஷ்டிரிய) நாட்டு ஆண்டு கொண்டிருந்தது. சந்திரசேகரின் கட்சிக்கு பலம் வெறும் 60 எம் பிக்கள் தான். அப்போதுதான் ஜெயல லிதா கொடுத்த அழுத்தத்தின் காரணமாக திமுக அரசாங்கத்தை கலைத்தார் சந்திரசேகர்.

1990 ம் ஆண்டு நவம்பர் முதல் மார்ச் 7, 1991 வரையில் சந்திரசேகருக்கு ஆதரவு கொடுத்த காங்கிரஸ் கட்சி அன்றைய தினம் தனது ஆதரவை வாபஸ் பெற்றது. அதற்கு காங்கிரஸ் கட்சி சொன்ன காரணம், டில்லி போலீசின் இரண்டு கான்ஸ்பிள்கள் ராஜீவ் காந்தியின் வீட்டை வேவு பார்த்தார்கள் என்பது. சாதாரணமான, சமூகத்தின் படிம நிலையில் கீழே இருக்கக் கூடிய 2 போலீஸ் கான்ஸ்டபிள்கள் ஒரு அரசாங்கத்தையே, அதுவும் இந்தியா போன்ற மாபெரும் ஜனநாயாக நாட்டின் ஆட்சியை கலைக்க முடியும் என்பதற்கு அந்த சம்பவம் முதல் சாட்சி. 31.01.1991 மாலை 3 மணியளவில் அந்த அறையில் தான் செய்தியாளர்களை பர்னாலா சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட முக்கியமான கேள்வியும், பதிலும் இதுதான்; ”திமுக அரசை கலைக்க நீங்கள் சிபாரிசு செய்தீர்களா? ஏனெனில் வழக்கமாக எந்தவோர் மாநில அரசு கலைக்கப் பட்டாலும், அந்த மாநிலத்தின் ஆளுநர் கொடுத்த அறிக்கைதான் முக்கியமானதாக இருக்கும். இதற்கு பர்னாலா சொன்ன பதில் ,”தேவையில்லை. நான் அறிக்கை கொடுக்க வேண்டிய தேவையில்லை.

ஏனெனில் அரசியல் சாசனத்தின் சம்மந்தப்பட்ட ஷரத்துகளின் படி, ஒரு மாநில அரசை கலைக்க வேண்டும் என்றால், ஆளுநரின் அறிக்கையின் படியும் கலைக்கலாம், ஆளுநரின் அறிக்கை இல்லாமலும் கலைக்கலாம், ஆங்கிலத்தில் சொன்னால், Or Otherwise, என்றுதான் இருக்கிறது” என்றார். அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த கட்டுரையாளரும் இருந்தார் என்ற நேரடி அனுபவத்தில் இதனை அவர் எழுதுகிறார். இன்றைக்கு தமிழகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, ஒரு அரசாங்கத்தை, அஇஅதிமுக அரசாங்கத்திற்கு எந்தளவுக்கு தொல்லை கொடுக்க முடியுமோ அந்தளவுக்கு, நாளோர் மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் மோடி அரசு தொல்லைகளையும், இம்சைகளையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நாடகத்தின் லேட்டஸ்ட் கதாபாத்திரம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். அவர் நேரடியாகவே களத்தில் இறங்கி விட்டார்.

கோவையில் சமீபத்தில் அரசு அலுவலகங்களுக்கு சென்றார். நேரடியாகவே கள ஆய்வில், அதாவது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு எப்படி செயற்படுகிறது என்பதை பற்றி நீண்ட ஆலோசனைகளை மாநில அரசு அதிகளுடன் அவர் நடத்தினார். இதற்கு கடும் கண்டனங்கள் அநேகமாக அனைத்து அரசியல் கட்சிகளிடம் இருந்தும் எழுந்தன. ஆனால் மாநிலத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசாங்கத்தின் பதில் வேறுவிதமாக வந்தது. இதில் என்ன தவறு இருக்கிறது’? சட்டத்திற்கு உட்பட்டுத் தானே ஆளுநர் செயற்படுகிறார்” என்று மாநில அமைச்சர்களும், முதலமைச்சரும் கூறுகிறார்கள்.

இதை விட ஒரு குண்டு மணியளவு சுயமரியாதை கூட இல்லாமல் ஒரு மாநில அரசு இந்தியாவில் ஏதாவது ஒரு மாநிலத்தில் இருக்கிறதா என்று கேட்டால், அதற்கான பதில், இல்லை இல்லை. சத்தியமாக இல்லை என்பதுதான். தொலைக் காட்சி விவாதங்தளில் பங்கு பெறும் பாஜக பிரதிநிதிகள் ஆளுநரின் இந்த நடவடிக்கையை வலுவாக ஆதரித்து பேசுகிறார்கள்.

இந்த விவகாரம் சம்மந்தமாக நடைபெற்ற இரண்டு வெவ்வேறு தொலைக் காட்சி விவாதங்களில் பங்குபெற்ற இந்த கட்டுரையாளர் இரண்டு கேள்விகளை பாஜக பிரதிநிதிகளிடம் வைத்தார்.

  1. குடியரசு தலைவர் இதே போன்று மோடி அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சகங்கள் சம்மந்தமாக தனியாக சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சசர்கள் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினால் அதனை மோடியும், பாஜக வும் ஆதரிப்பார்களா?

  2. பாஜக ஆளும் நாட்டின் 15 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஏதாவது ஒரு மாநிலத்தில், ஒரே ஒரு மாநிலத்தில் இதே போன்ற ஆலோசனை கூட்டங்களை ஆளுநர் நடத்தியிருக்கிறாரா? நமக்குத் தெரிந்தவரையில் இல்லை. ஒருவேளை, ஒரு கற்பனையாக வைத்துக் கொள்ளுவோம். தமிழக ஆளுநரை போன்று நேரடியாக பாஜக ஆளும் ஒரு மாநிலத்தில் அந்த மாநில ஆளுநர் மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிட்டால் அதனை சம்மந்தப் பட்ட பாஜக மாநில அரசும், அதனது பாஜக முதலமைச்சரும் ஆதரிப்பார்களா? திரும்ப, திரும்ப இந்த கேள்வி கேட்கப் பட்டும் பாஜக பிரதிதிகளால் பதில் சொல்ல முடியவில்லை.

ஆனால் ஒரு கட்டத்தில் பதில் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். கடந்த சில நாட்களாக தொலைகாட்சி விவாதங்களில் பாஜக பிரதிநிதிகள் பதில் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ”இதில் என்ன சந்தேகம் வேண்டிக் கிடக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் என்பது அறவே இல்லை. ஆகவே ஆளுநர் களத்திற்கு போக வேண்டிய அவசியமில்லை.

ஆனால் தமிழ் நாட்டில் ஊழல் புரையோடியிருக்கிறது. மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம். ஆகவே ஆளுநர் நேரடியாக களத்தில் இறங்குவதில் எந்த தவறும் இல்லை”. இது எந்தளவுக்கு ஜனநாயக விரோத போக்கு, இது எந்தளவுக்கு இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமான போக்கு என்பதை குறைந்த பட்ச அறிவுள்ளவர்கள் கூட புரிந்து கொள்ளலாம்.

இந்த ஆய்வு பற்றி ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் ”ஆளுநர் எந்த தவறும் செய்யவில்லை. அவர் எந்த உத்திரவுகளையும் யாருக்கும் பிறப்பிக்கவில்லை. ஆகவே ஆளுநரின் நடவடிக்கைகளில் அரசியல் சாசனப்படி எதுவும் மீறப்படவில்லை” என்று கூறப்பட்டு விட்டது.

ஆளுநரின் நடவடிக்கை கோவை யுடன் நிற்கவில்லை. அடுத்து ஆளுநர் தமிழ் நாட்டின் அநேகமாக அனைத்து மாவட்டங்களுக்கும் போக இருக்கிறார் என்பதும் ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் மூலம் தெளிவு படுத்தப் பட்டு விட்டது. ”ஆளும் அஇஅதிமுக வே இதனை எதிர்க்காத போது, பத்திரிகைகளும், எதிர்கட்சிகளும் ஏன் இதனை ஆட்சேபிக்கிறார்கள்?” என்று கேட்கிறார்கள் பாஜக பிரதிநிதிகள்.

இது அபத்தமான வாதம். ஏனெனில் ஆளுநரின் இந்த நடவடிக்கை என்பது, மாநில அரசாங்கத்துக்கும், ஆளுநருக்குமான பிரச்சனை கிடையாது. இது 7 கோடி தமிழர்களின் சுய மரியாதைக்கும், எல்லா ஜனநாயக பண்புகளையும் காலின் கீழ் போட்டு மிதித்து துவம்சம் செய்து கொண்டிருக்கும் மோடி அரசுக்குமான பிரச்சனை. இந்த நாடகத்தின் லேட்டஸ்ட் ட்விஸ்டுக்கு வருவோம்.

தலைமை செயலகத்தில் உள்ள ஆளுநர் அறை நன்றாக தூசி தட்டப்பட்டு, நன்றாக சுத்தம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. காரணம் விரைவில் ஆளுநர் அந்த அறைக்கு வந்து, அங்கு அமர்ந்து கொண்டே எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் சம்மந்தமான அனைத்து விஷயங்களையும் பற்றி, அதிகாரிகளுடன் விவாதிக்கப் போகிறார்.

சமீபத்தில் கோவையில் விவாதித்தாரே அதனை போன்று விசாரணகள் நடக்கப் போகின்றன.இதனையும் தமிழக அரசு ஆதரிக்கும். ”அவர்களுக்கு வேறு வழி கிடையாது, காரணம் மலை போல் குவிந்த கிடக்கும் ஊழல் புகார்கள் ….. ஆனால் ஏதோ தமிழ் நாட்டில் மட்டுமே ஊழல் நடப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவது தான் மரபு மீறிய செயல்.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரி துறையினரின் சோதனை மூலம் தமிழகத்தின் அனைத்து அமைச்சர்களுக்கும், முதலமைச்சருக்கும், மோடி அரசு உணர்த்திய செய்தி இதுதான்” என்கிறார் எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான ஆழி செந்தில் நாதன். மூத்த பத்திரிகையாளரும், பொதுவாக அஇஅதிமுக ஆதரவாளருமான ‘தராசு ஷ்யாம்’ இது ஆரோக்கியமற்ற போக்கு என்று கூறுகிறார்; ”நிச்சயமாக இது ஓர் ஆரோக்கியமற்ற போக்குதான்.

1995 காலகட்டத்தில் அன்றைய ஆளுநர் டாக்டர் சென்னா ரெட்டிக்கு எதிராக அனைறைய ஆளும் கட்சியான அஇஅதிமுக வினரின் போராட்டங்களை நடத்தினர். சிதம்பரத்தில் அத்தகையதோர் பெரிய ஆர்பாட்டம் நடந்த போது ஆளுநரின் காரை சுற்றி 500 க்கும் மேற்பட்ட போலீசாரை நிற்க வைத்துத் தான் ஆளுநரை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல முடிந்தது.

1952 ம் ஆண்டில் நேரு அமைச்சரவையின் சில செயற்பாடுகளில் அப்போதய குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் தலையிட்ட போது, இந்த விவகாரத்தை உடனடியாக பிரதமர் நேரு உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றார்.

அதாவது இந்திய அரசியல் சாசனத்தின் படி குடியரசு தலைவருக்கு இதுபோன்று செயற்பட இருக்கிறதா என்ற விளக்கத்தை கேட்டு கொண்டு சென்றார். அப்போது உச்ச நீதிமன்றம், குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர்களின் பதவி என்பது வெறும் ஒரு விதமான கெளரவ பொறுப்புகளை கொண்ட பதவிதான், அதாவது “President and Governors are just ceremonial heads”” என்றே விளக்கம் கொடுத்தது.

இதுதான் சட்டம், இதுதான் மரபு”. தமிழகத்தை பொறுத்த வரையில் ஆளுநரின் நடவடிக்கைகளை நாம் மோடி அரசின் கடந்த மூன்றரை ஆண்டு கால செயற்பாடுகளின் பின்புலத்தில் பார்க்கும் பொழுது இது எங்கே போய் முடியப் போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

மெள்ள, மெள்ள, ஆனால் அதே சமயத்தில் உறுதியாக குடியரசு தலைவர் ஆட்சியை நோக்கித்தான் தமிழகம் நகர்ந்து கொண்டிருக்கிறது

tamil.oneindia.com

TAGS: