அன்புசெழியன் போன்றவர்கள் இல்லையென்றால் சினிமாவே எடுக்க முடியாது என்று இயக்குநரும், நடிகருமான சீமான் கூறியிருக்கிறார்.
பைனான்சியர் அன்புசெழியன் போன்றவர்கள் இல்லையென்றால் சினிமா எடுக்க முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சென்னை மதுரவாயலில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் 63-வது பிறந்தநாள் விழா மற்றும் நாம் தமிழர் கட்சியின் மதுரவாயல் சட்டமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
விழாவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். அதனைத்தொடர்ந்து ரத்ததான முகாம் நடைபெற்றது.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த சீமான் கூறியதாவது:-
சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை தவிர்த்து இருக்க வேண்டிய மரணம். அதனை தடுத்திருக்க வேண்டும் இனி வரும் காலங்களில் இதுபோன்ற துயரம் தொடரக்கூடாது. யாரையும் குறை சொல்ல முடியாது. பைனான்சியர் அன்புசெழியன் போன்றவர்கள் இல்லையென்றால் யாரும் சினிமா எடுக்க முடியாது.
தன்னிடம் வந்து பணம் வாங்குங்கள் என்று அவர் கூறுவதில்லை. நாம் தான் விரும்பி பணம் வாங்குகிறோம், சாதாரண சாமானியர்களை நம்பி பல கோடி ரூபாய் கொடுக்கிறார். அரசு வங்கிகளே கடன் கொடுத்து விட்டு திருப்பி செலுத்தாதவர்களை கட்டி வைத்து அடிக்கவில்லையா?, போலீசார் அடித்தது இல்லையா?. இதுபோல் தான் கடனை கொடுத்து விட்டு அதனை கேட்கும் முறையில் கடுமை காட்டும்போது அது தன்மான இழப்பாகிறது. உயிரிழப்பு ஏற்படுகிறது.
பணம் கொடுப்பவர்கள் சிலர் தான் உள்ளனர். இவர்கள் எல்லாம் பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டால் படமே எடுக்க முடியாது. இதற்கு அரசு என்ன மாற்று வழி வைத்து இருக்கிறது?. அதனை அரசு முறைபடுத்த வேண்டும்.
-athirvu.com