உ.பி. உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா வெற்றி; வளர்ச்சி அரசியல் மீண்டும் வெற்றி பெற்றது – பிரதமர் மோடி பெருமிதம்

லக்னோ,

உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி 8 மாதங்கள் ஆன நிலையில் அங்கு உள்ளாட்சி தேர்தல் நடந்தது. உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது. 16–ல் 14 மேயர் பதவிகளை கைப்பற்றியது. 2014 பாராளுமன்றத் தேர்தலிலும் பாரதீய ஜனதா அமோக வெற்றியை தன்வசப்படுத்தியது, மாநிலத்தில் நடந்துவரும் ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றிய தன்வசம் கொண்டு வருகிறது. இப்போது உள்ளாட்சி தேர்தலிலும் பலத்தை காட்டிஉள்ளது. அடுத்த இலக்கு 2019 பாராளுமன்ற தேர்தல்தான் என அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறிஉள்ளார்.

காங்கிரஸ் கோட்டையாக கருதப்படும் ராகுல் காந்தி எம்.பியாக உள்ள அமேதி நகர பஞ்சாயத்தை காங்கிரஸ் பறி கொடுத்தது. அங்கு பா.ஜனதா வெற்றி பெற்றது.

உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதாவிற்கு கிடைத்த வெற்றி தொடர்பாக டுவிட்டரில் தகவல் வெளியிட்டு உள்ள பிரதமர் மோடி, ‘‘நாட்டில் வளர்ச்சிக்கான அரசியல் மீண்டும் வெற்றியை கண்டுள்ளது. இந்த மகத்தான வெற்றியை தந்த உத்தரபிரதேச மாநில மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். முதல்–மந்திரி ஆதித்யநாத், கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். இந்த வெற்றி, மக்களின் மேம்பாட்டுக்காக இன்னும் கடினமாக உழைக்க நம்மை ஊக்குவிப்பதாக அமைகிறது’’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டு உள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷாவும், பா.ஜனதா வெற்றிக்கு பா.ஜனதா தொண்டர்கள் மற்றும் யோகி ஆதித்யநாத்திற்கு பாராட்டை தெரிவித்து உள்ளார்.

-dailythanthi.com

TAGS: