ஓகி புயலில் சிக்கிய தமிழக மீனவர்கள்… தகவல்களை இருட்டடிப்பு செய்கிறதா தமிழக அரசு?

கன்னியாகுமரி: ஓகி புயலில் தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல்களை மாநில அரசு இருட்டடிப்பு செய்கிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத் தாழ்வு நிலை ஓகி புயலாகி மாறி கன்னியாகுமரி மாவட்டத்தை உருக்குலைத்துப் போட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் அவற்றை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தகவல்கள் இல்லை

அதே நேரத்தில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் தொடர்பான தெளிவான தகவல் எதுவும் தமிழக அரசு சார்பில் வெளியிடப்படாதது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநில முதல்வர் தொடர்ந்து மீட்கப்பட்ட மீனவர்கள், மீட்பு நடவடிக்கைகள் குறித்து விவரித்து வருகிறார்.

எத்தனை மீனவர்கள் எங்கே?

ஆனால் தமிழக அரசு எத்தனை பேர் மீன்பிடிக்க போனார்கள்? எத்தனை பேர் எங்கெங்கே கரை ஒதுங்கியுள்ளனர்? எஞ்சிய மீனவர்கள் நிலைதான் என்ன? என்பது குறித்து எந்த ஒரு தெளிவான தகவலையும் தெரிவிக்கவில்லை. இது மீனவர்களின் உறவினர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மீனவர் உடல்கள்

குளச்சல், விழிஞம் கடற்பரப்பில் மீனவர்களின் உடல்கள் ஒதுங்கியதாகவும் அது கேரளா மீனவர்களின் உடல்கள் எனவும் கூறப்படுகிறது. இது போன்ற தகவல்கள் வரும் நிலையில் தமிழக அரசு தெளிவான விளக்கத்தை தெரிவிக்க வேண்டும்.

அரசுக்கு கடமை உண்டு

அப்படி தெரிவிக்காததால் மீனவர்கள் நிலைமை தொடர்பான விவரங்களை தமிழக அரசு இருட்டடிப்பு செய்ய முயற்சிக்கிறதோ? என்கிற சந்தேகத்தை உறவினர்கள் எழுப்புகின்றனர். இயற்கை சீற்றத்தில் சிக்கி உறவுகளை காணாமல் தவிப்போருக்கு தெளிவான தகவல் தந்து ஆறுதல் தர வேண்டியது தமிழக அரசின் கடமை.

tamil.oneindia.com

TAGS: