டெல்லி : உயிரோடிருந்த குழந்தை இறந்துவிட்டதாக அறிவித்த தனியார் மருத்துவமைனை

இந்திய தலைநகர் டெல்லியில், உயிரிழந்ததாக இறுதிச் சடங்குக்கு கொண்டு செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை உயிரோடிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, பிறந்த குழந்தை இறந்து விட்டதாக அம்மருத்துவமனை அறிவித்திருந்தது.

இரட்டைக் குழந்தைகளில், ஒரு குழந்தை இறந்து பிறந்த சில மணி நேரங்கள் கழித்து இந்த குழந்தையும் உயிரிழந்ததாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையான மேக்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அறிவித்தனர்.

இறந்ததாக கருதப்பட்ட பச்சிளம் குழந்தைகளை அவர்களது பெற்றோர்களிடம் மருத்துவர்கள் ஒப்படைத்தனர். இந்நிலையில் அந்த பையில் ஏதோ நெளிந்ததை உணர்ந்த பெற்றோர்கள், ஒரு குழந்தை உயிரோடிருப்பதை கண்டுபிடித்தனர்.

சிகிச்சைக்கு அதிக விலை வாங்கும் தனியார் மருத்துவமனையில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது, அவற்றின் தரம் குறித்த விவாதத்தை எழுப்பியுள்ளது.

இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதே போல, இச்சம்பவத்தை “அதிர்ச்சி தரும் குற்றச்செயல்” என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு குழந்தை நெளிந்ததினால் அதிர்ச்சியடைந்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், அங்கு குழந்தை உயிரோடிருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்ததாகவும், அக்குழந்தைகளின் தாத்தா கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் கருத்து தெரிவித்த மேக்ஸ் மருத்துவமனை, இந்த சம்பவம் குறித்து “அதிர்ச்சி” மற்றும் “கவலை” அடைந்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது விசாரணை நிலுவையில் இருக்க, அவர் விடுமுறைக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

இது குறித்த விசாரணையை டெல்லி போலீஸார் தொடங்கிவிட்டதாகவும், சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.

சமீப காலத்தில், இந்தியாவில் தனியார் மருத்துவமனையில் சர்ச்சைக்குரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது இது இரண்டாவது முறை.

கடந்த மாதம் டெங்கு பாதிப்பினால் ஒரு சிறுமி உயிரிழக்க, சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வேறொரு மருத்துவமனை மீது குற்றச்சாட்டு எழுந்தது. -BBC_Tamil

TAGS: