மும்பை,
தமிழகத்தின் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள், கேரளாவின் கடலோர பகுதிகள் மற்றும் லட்சத் தீவு ஆகியவற்றை கடந்த வாரம் ஒகி புயல் கடுமையாக தாக்கியது. இதனால் கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் படகுகளுடன் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்கள் படிப்படியாக மீட்கப்பட்டு வருகின்றனர்.
இதுபற்றி மேற்கு பிராந்திய கடலோர காவல் படை தளபதி நவ்தியால் நிருபர்களிடம் கூறியதாவது:-
காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் கடலோர காவல் படையின் 12 கப்பல்கள், 3 டோர்னியர் விமானங்கள், 2 ஹெலிகாப்டர்கள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. நடுக் கடலில் தத்தளித்த மீனவர்கள் 183 பேரை கடந்த 2 நாட்களில் மீட்டு உள்ளோம். நடுக்கடலில் மீட்கப்படும் மீனவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை அளித்து அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கும்படி கொச்சி மற்றும் கவரட்டியில் உள்ள மேற்கு பிராந்திய கடலோர காவல் படையினருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
கடலில் கொந்தளிப்பான சூழல் காணப்படும் நிலையில் மீனவர்களை தேடும்பணி தொடர்ந்து நடந்து வருகிறது. நடுக்கடலில் தத்தளித்து மீட்கப்பட்ட மீனவர்களுக்கு முதல் உதவி, உணவு அளிப்பதில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
-dailythanthi.com