காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு, காங்கிரஸார் கொண்டாட்டம்

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, 1998-ம் ஆண்டு முதல் 19 ஆண்டுகளாக அப்பதவியை வகித்து வருகிறார்.

அவருக்கு உடல்நிலை சரி இல்லாததால், காங்கிரஸ் துணைத்தலைவரும், சோனியாவின் மகனுமான ராகுல் காந்திக்கு பதவி உயர்வு அளிக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீர்மானித்தனர். அதன்படி, காங்கிரஸ் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடந்த 4-ந் தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம், ராகுல் காந்தி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரை முன்மொழிந்து அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் மனு தாக்கல் செய்தனர். வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.

ராகுல் காந்திக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட 89 மனுக்களும் தகுதியானவையாக இருந்ததால், அனைத்து மனுக்களும் ஏற்கப்பட்டன.

ராகுல் காந்தியை தவிர, வேறு யாருக்கு ஆதரவாகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியது. மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள் ஆகும். எனவே, இன்று காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ராகுல் காந்தி தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கான சான்றிதழ் 16–ந் தேதி சோனியாகாந்தி மற்றும் முன்னணி தலைவர்கள் முன்னிலையில் வழங்கப்படுகிறது. அதன்பின்னர் அன்று காலை 11 மணிக்கு சோனியா காந்தி கட்சி பொறுப்புகளை ராகுல்காந்தியிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைப்பார். தொடர்ந்து காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நாடு முழுவதும் இருந்து வந்த பல்வேறு தலைவர்களை ராகுல்காந்தி சந்திக்கிறார். அப்போது அவர்கள் ராகுல்காந்திக்கு வாழ்த்து தெரிவிப்பார்கள் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

ராகுல்காந்தி கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றாலும் சோனியா காந்தி, கட்சியின் வளர்ச்சிக்கு முக்கிய பாங்காற்றுவதோடு, சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்வார் என கார்நாடக முன்னாள் முதல்–மந்திரியும், முன்னாள் மத்திய மந்திரியுமான வீரப்பமொய்லி தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் கொண்டாடி வருகிறார்கள். காங்கிரஸ் தொண்டர்கள் நாடு முழுவதும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள்.

-dailythanthi.com

TAGS: