ராமர் பாலத்தில் யாராவது எப்போதாவது நடந்திருக்கிறார்களா?

அமெரிக்காவில் ஒளிபரப்பான ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியின் முன்னோட்டம் இந்தியாவில் ‘ராமர் பாலம்’ பற்றிய விவாதங்களை மீண்டும் தொடங்கி வைத்திருக்கிறது.

அமெரிக்காவின் அறிவியல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் ஒரு சேனல், இந்தியா மற்றும் இலங்கையை இணைக்கும் கல்லால் உருவாக்கப்பட்ட ராமர் பாலம் தொடர்பாக ட்விட்டரில் முன்னோட்ட நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.

ராமர் பாலத்தில் உள்ள கற்களை ஆய்வு செய்ததில் பாலம் அமைக்க பயன்பட்ட கற்கள் வேறு எதோவொரு இடத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது என்றும், 30 மைல்கள் தொலைவுள்ள இந்த பாலம் மனிதர்களால் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிகழ்ச்சியில் கூறப்பட்டது.

ராமாயணத்தின்படி ராமர், இலங்கை அரசனும், அரக்கர்குல தலைவருமான ராவணனிடம் இருந்து தனது மனைவி சீதையை மீட்கும் போரில் கடலை கடப்பதற்காக ராமர் பாலம் கட்டினார் என்று கூறப்படுகிறது. பாலத்தை கட்டியது வானரங்கள் என்றும் ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.

ராமனின் கதை என்று பொருள்படும் ராமாயணம் இந்தியாவில் மட்டுமல்ல, தென்கிழக்கு ஆசியாவிலும் பிரபலமான காப்பியமாகும்.

ராமாயணம், அதன் கதாபாத்திரங்கள் மற்றும் அவை தொடர்பான கிளைக்கதைகள் அனைத்தும் கற்பனையே என்று சொல்லும் ஒரு தரப்பினர் ராமாயணத்தை கட்டுக்கதை என்று சாடினால், மறுதரப்போ அதற்கு வெகுண்டெழுந்து கட்டுக்கதை என்று சொல்வது மாபெரும் புனைகதை என்று சொல்லி, தங்களுடைய வாதத்திற்கு ஆதாரமாக ராமர் பாலத்தை முன்வைப்பது பல்லாண்டுகளாக தொடரும் விவாதப்போர்.

அவ்வப்போது மழைக்காளானாய் திடீரென வெளிப்படும் இந்த விவாதங்கள், தண்ணீர் தெளித்த கொதிக்கும் பாலாய் அடங்கிவிடுவதும் உண்டு. தற்போது தொலைகாட்சியில் வெளியான நிகழ்ச்சியின் முன்னோட்டம் சர்ச்சைகளுக்கு கட்டியம் கூறியிருக்கிறது.

வானரங்களும் அரக்கர்களும், மனிதர்களும் ஈடுபட்ட போருக்கு பயன்பட்டதாக கூறப்படும் ராமர் பாலம், தற்போது தலைவர்கள், அரசியல் தலைவர்கள் இடையிலான சொற்போரை முடுக்கிவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தின் மூலம் ராமர் பாலம் இருப்பதை முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு நிராகரித்தாலும், ராமர் பாலம் இருப்பதை விஞ்ஞானிகள் இப்போது உறுதிப்படுத்தியிருப்பதாக பாரதிய ஜனதா கட்சி டிவிட்டரில் பதிவிட்டுள்ளது.

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது டிவிட்டர் செய்தியில், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறி வரவேற்க, பா.ஜ.க தலைவர் சுப்ரமணியம் சுவாமியும் இந்தக்கூற்றை வரவேற்றிருக்கிறார்.

மிகப் பழைய விவாதம்

ராமர் பாலம் மட்டுமல்ல, அதைப் பற்றிய விவாதமும் புதிதல்ல. 2005ஆம் ஆண்டு வங்காள விரிகுடாவையும் அரபிக்கடலையும் இலங்கையை சுற்றிச் செல்லாமல் கப்பல் போக்குவரத்தால் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதல் ஆட்சிக்காலத்தின்போது, 12 மீட்டர் ஆழம் மற்றும் 300 மீட்டர் அகலம் கொண்ட கால்வாய் அமைக்கும் சேது சமுத்திர கால்வாய் திட்டத்திற்கு பச்சைக்கொடி காட்டப்பட்டது.

அப்போது எழுந்த விவாதத்தின்போது, இந்தத்திட்டம் ராமர் பாலம் இருக்கும் பகுதியில் அமைந்திருப்பதால் அங்கு திட்டம் வரக்கூடாது என்று முட்டுக்கட்டை போடப்பட்டு, இறுதியில் திட்டமே முடங்கிப்போனது.

இந்தத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், இந்த வழியாக பயணப்படும் கப்பல்கள்களின் பயண நேரத்தில் 36 மணி நேரம் குறையும், ஏனெனில் தற்போது இலங்கையைச் சுற்றியே கப்பல்கள் செல்லவேண்டியிருக்கிறது என்று திட்டத்தை செயல்படுத்த விரும்புபவர்கள் கூறினார்கள்.

இந்தத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் ராமர் பாலம் சேதமடையும் என்று இந்து அமைப்புகள் கச்சைக் கட்டிக்கொண்டு கோதாவில் இறங்கின.

இந்தத்திட்டத்தால் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் கடல்சார் உயிரினங்களும் கடல் சூழலும் பாதிக்கப்படும் என்று இந்தியா மற்றும் இலங்கை சுற்றுச்சூழல்வாதிகள் கூறினார்கள்.

1860ஆம் ஆண்டு இந்தியாவில் பணிபுரிந்த பிரிட்டன் தளபதி எடி டெய்லர் இந்தத் திட்டத்தை முன்வைத்திருந்தார்.

அந்தத் திட்டம் தூசு தட்டப்பட்டு 2005ஆம் ஆண்டு புதிய திட்டம் உருவெடுத்தது.

முன்மொழியப்பட்ட திட்டத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ராமாயணத்தில் குறிப்பிடப்பட்ட விஷயங்களுக்கு அறிவியல் ரீதியான ஆதாரங்கள் இல்லை என்று மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் இதே போன்ற வாக்குமூலத்தை அறிக்கையாக கொடுத்தது.

திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட இந்து குழுக்களும் தங்கள் தரப்பு மனுவை தாக்கல் செய்தன.

பின்னர், ‘கம்ப ராமாயணத்தை’ மேற்கோள் காட்டிய அரசு, ராவணனுடனான போருக்கு பிறகு ராமர் அந்த பாலத்தை அழித்துவிட்டார் என்ற கூற்றை முன்வைத்தது.

இப்படியே சர்ச்சை அனுமன் வாலாக நீண்டு உச்ச நீதிமன்றத்தை அடைந்தது.

அறிவியல் சேனலில் இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பப்படும் என்பது தெரியவில்லை, ஆனால் முன்னோட்ட நிகழ்ச்சியே காரசாரமான விவாதத்தை ஏற்படுத்திவிட்டது.

முன்னோட்டத்தின்படி, ராமர் பாலத்தில் இருக்கும் கற்கள் ஏழாயிரம் ஆண்டு பழமையானது, ஆனால் அங்கிருக்கும் மணல் 4,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறப்பட்டது.

மேலும் பாலத்தை கட்டியது மனிதர்கள் என்றும் நிகழ்ச்சியின் முன்னோட்டம் கூறியிருப்பதால் நிகழ்ச்சி ஒளிபரப்பாவதற்கு முன்னரே அதற்கான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துவிட்டது.

இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் நிலைப்பாடு என்ன?

அது சரி, இப்படி பரபரப்பாக விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இதுபற்றி இந்திய தொல்பொருள் அமைப்பு ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளதா?

2008 முதல் 2013 வரை உச்சநீதிமன்றத்தில் சேது சமுத்திர திட்டத்தின் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்தார் ஏ.கே. ராய். தேசிய நினைவுச் சின்னங்களின் ஆணைய இயக்குநராகவும் இவர் பணிபுரிந்திருக்கிறார்.

இவரின் கருத்துப்படி, “ராமர் பாலம் தொடர்பான சர்ச்சைகள் பூதாகரமாக உருவெடுத்த பிறகு இந்த விஷயத்தில் யாரும் தலையிட விரும்பவில்லை. ஏனெனில் உச்சநீதிமன்றத்திற்கு சென்றுவிட்ட இந்த விடயம், மக்களுடைய உணர்ச்சிகள் மற்றும் மரபுகளுடன் தொடர்புடையது. இதுபோன்ற விவகாரங்களில் யாரும் தலையிட்டு சிக்கலில் சிக்கிக்கொள்ள மாட்டார்கள்”.

இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் ராமர் பாலம் பற்றி என்ன சொல்கிறது?

“இதை ஆய்வு செய்ய இந்தியத் இந்நிறுவனம் ஒருபோதும் முயன்றதில்லை, இந்த பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டதாக சொல்லும் எந்தவொரு ஆதாரமும் இல்லை. இதுபோன்ற ஆராய்ச்சிகள் மேற்கொள்ள புதிய நிறுவனங்களும் இதில் இணையவேண்டியது அவசியம். எந்தவொரு விடயத்தையும் ஆம் அல்லது இல்லை என்று சொல்வதற்கு ஏதாவது ஓர் ஆதாரம் வேண்டும், இந்த விவகாரத்தில் எதையும் சொல்வதற்க்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை” என்கிறார் ஏ.கே.ராய்.

ராமேசுவரத்திற்கு சென்றால், அங்கு நிறைய குண்டங்கள் உள்ளன. தண்ணீரில் கற்கள் மிதப்பதை காண்பிக்கும் மக்களை அங்கு சந்திக்கலாம்.

‘பாலத்தை ராமர் கட்டவில்லை என்றால் வேறு யார் கட்டினார்கள்?’

“பவளமும், சிலிக்கா கல்லும் சூடாக இருக்கும்போது அதில் காற்று சேர்ந்தால், அது லோசாகி மிதக்கத் தொடங்கும். அதுபோன்ற கல்லைத் தேர்ந்தெடுத்து கட்டப்பட்டது இந்த பாலம்” என்று சொல்கிறார் வரலாறு மற்றும் தொல்பொருள் துறை பேராசிரியர் மாக்கண்லால்.

“1480ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு புயலில் பாலத்தின் பெரும்பகுதி சிதைந்துவிட்டது. அதற்கு முன்புவரை இந்தியா மற்றும் இலங்கை மக்கள் நடைபயணமாகவும், சக்கர வண்டிகள் மூலமாகவும் இந்தப்பாலத்தை பயன்படுத்தினார்கள்” என்கிறார் அவர்.

“ராமாயணமானது தன்னை எப்போதாவது ஒரு புராணம் என்று சொன்னதா? இதை சொல்வது நான், நீங்கள், ஆங்கிலேயர்கள்தான்”.

“உலகில் வாய்மொழியாக உண்மையும் பரவலாம், அதேபோல் கதைகளும் பரவலாம். அனைத்திற்கும் எழுதப்பட்ட ஆதாரங்கள்தான் வேண்டும் என்று கருதினால், எழுத படிக்கத் தெரியாதவர்களின் நிலை என்ன?” என்று விடைபகரா முடியா பகாசுர கேள்வியை முன்வைக்கிறார் வரலாறு படித்த தொல்லியல் பேராசியர்.

இப்போது விவாதம் படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் இடையில் மட்டுமல்ல, புராண இதிகாசங்களை நம்புபவர்களுக்கும், நம்பாதவர்களுக்கும் இடையிலானதாகவோ, ஆத்தீகர்களுக்கும் நாத்தீகர்களுக்கும் உரியதாகவோ மட்டும் இல்லை, விஞ்ஞானத்திற்கும் நம்பிக்கைகளுக்கும் இடையிலானதாகவும் உருமாறிவிட்டது.

தொலைகாட்சி நிகழ்ச்சியின் முன்னோட்டமே வாத விவாதங்களை சூடாக்கிவிட்டது என்றால், முழு நிகழ்ச்சியும் ஒளிபரப்பானால் அது மற்றுமொரு சொற்போருக்கான பாலத்தை உருவாக்குமா? -BBC_Tamil

TAGS: