சென்னை: தமிழகத்தின் மிகப் பெரும் அவமான சின்னமாக உருவாகிக் கொண்டிருக்கிறது ஆர்.கே.நகர். இம்முறையில் ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ரத்து செய்யடுவதற்கான அத்தனை சாத்தியங்களும் அரங்கேறிவிட்டது. எந்த நிமிடத்திலும் ஆர்கே நகர் தேர்தல் மீண்டும் ரத்து என்கிற அறிவிப்பு வெளியாகலாம் என்றே கூறப்படுகிறது.
ஆர்.கே. நகரில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஏப்ரல் மாதம் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் வரலாறு காணாத வகையில் தினகரன் தரப்பு பணத்தை வாரி இறைத்தது. ஒட்டுமொத்த தமிழக அரசே களத்தில் குதித்து தினகரனுக்கு ஆதரவாக அப்போது வேலை பார்த்தது. முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் அனைவருமே பண விநியோக சிக்கலில் மாட்டினர். இதனால் தேர்தலே ரத்து செய்யப்பட்டது.
ஓட்டுக்கு ரூ10,000
இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி இப்போது தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் மிகச் சிறிய ஆர்.கே.நகர் தொகுதியின் ஒவ்வொரு வாக்காளர் வீடும் ஒரு ஓட்டுக்கு ரூ10,000 என குறையாமல் விலை பேசப்பட்டிருக்கிறது.
வாக்காளர்கள் பிஸி
ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு தேர்தல் பிரசாரத்துக்கு போவதுதான் இப்போது வாழ்வாதாரம். காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்வதில் அத்தனை வாக்காளப் பெருங்குடி மக்களும் படுமுனைப்புடன் இருக்கின்றனர்.
அன்றாட காட்சி
திரும்பிய பக்கமெல்லாம் பணபட்டுவாடா… தேர்தல் அதிகாரிகள் திணறுகிறார்கள்.. ஆட்சி அதிகாரத்தைக் கண்டு போலீஸ் தடுமாறுது… எதிர்க்கட்சிகளும் மல்லுக்கட்டுகிறது.. இதுதான் ஆர்கே நகரில் தினம் தினம் நடந்தேறும் காட்சி.
ரத்தாகிறது தேர்தல்?
தற்போது கூடுதல் தேர்தல் பார்வையாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இன்று அனைத்து அரசியல் கட்சியினரும் கூடுதல் பார்வையாளர்கள் ஆலோசனை நடத்தினர். இன்றைய கூட்டத்திலும் புகார் ஓலைகள் மாற்றி மாற்றி வாசிக்கப்பட்டு ஆதாரங்களும் கொடுக்கப்படுகின்றன. தற்போதைய நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெறுமா என்பது நிச்சயம் சந்தேகம்தான். ஆர்கே நகர் தேர்தல் ரத்து என்கிற அறிவிப்பு மீண்டும் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்கின்றன தேர்தல் ஆணைய வட்டாரங்கள்.