ஆர்.கே.நகரில் பதற்றம் நீடிப்பு போலீசார்–தேர்தல் அதிகாரிகள் பரிதவிப்பு

சென்னை,

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், பண பட்டுவாடா சத்தம் இல்லாமல் நடந்து வந்தது. தேர்தல் நெருங்குவதையொட்டி பண பட்டுவாடா விசுவரூபம் எடுத்துள்ளது. புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் மக்கள் கையில் தாராளமாக புழங்குகின்றன. ஒரு ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் போட்டிபோட்டு வினியோகம் நடைபெறுவதாக பரபரப்பு புகார்கள் எழுந்துள்ளன.

நேற்று முன்தினம் பல இடங்களில் வெளிப்படையாகவே வாக்காளர்களுக்கு பண வினியோகம் நடந்தது. இதுதொடர்பாக 10 பேர் பிடிபட்டனர். ரூ.20 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இதன் காரணமாக ஆங்காங்கே சாலை மறியல் என ஆர்.கே.நகர் தொகுதி முழுவதுமே பரபரப்புடன் காணப்பட்டது.

இந்தநிலையில் நேற்று காலைப்பொழுதும் பரபரப்புடனே விடிந்தது. ஆங்காங்கே பண பட்டுவாடா நடப்பதாக புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. அதன்படி சென்னை கொருக்குப்பேட்டை திருவள்ளுவர் நகரில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான செல்வி (வயது 42) என்பவரது வீட்டில் பண பட்டுவாடா நடப்பதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அவரது வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ரூ.16,500 பணம் கைப்பற்றப்பட்டது. பின்னர் அவரை போலீசார் விசாரணைக்காக ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் தேர்தல் செலவின பார்வையாளர் விசாரணை நடத்தினார். அப்போது அவர் தான் பண பட்டுவாடாவில் ஈடுபடவில்லை என்றும், தன்னிடம் இருந்தது சீட்டு பணம் என்றும், விளக்கம் அளித்தார். எனினும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் செல்வி கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் செல்வியை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதை கண்டித்து டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். சாலை மறியல் போராட்டத்திலும் குதித்தனர். இதனால் கொடுங்கையூர் மணலி நெடுஞ்சாலையில் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர்.

இதற்கிடையே சென்னை கொருக்குப்பேட்டை சாஸ்திரிநகரில் அ.தி.மு.க.வினர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் சண்முகம் (42) என்பவருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சண்முகத்தின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதுகுறித்து அவர் தரப்பில் ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் தேனி மாவட்ட அ.தி.மு.க.வினர் கிருஷ்ணகுமார், காளை, மிதுன் சக்ரவர்த்தி ஆகியோர் தன்னை கட்டையால் தாக்கியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் சி.எஸ்.ஆர். பதிவு செய்தனர். காயமடைந்த சண்முகம் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

சண்முகம் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்து அவருடைய உறவினர்களும், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களும் ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களையும் சமாதானப்படுத்தி கலைந்து போக செய்தனர். தொடர் மறியல் மற்றும் முற்றுகை சம்பவங்களால் ஆர்.கே.நகர் போலீஸ் நிலையம் முன்பு பதற்றம் நிலவியது.

இதையடுத்து துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் ஆர்.கே.நகர் போலீஸ் நிலையம் கொண்டுவரப்பட்டது. துணை ராணுவத்தினர் போலீஸ் நிலையத்தின் உள்ளேயும், வெளியேயும் துப்பாக்கி ஏந்தியபடி அரண் போன்ற பாதுகாப்பில் ஈடுபட்டனர். ஆர்.கே.நகர் தொகுதியில் பண பட்டுவாடா, மோதல், சாலைமறியல் சம்பவங்களால் தொகுதி முழுவதும் பதற்றம் நீடிக்கிறது. தேர்தல் அதிகாரிகளும், போலீசாரும் பரிதவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

-dailythanthi.com

TAGS: