குஜராத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கும் மோடிக்கும் கூறுவதென்ன? 5 முக்கிய அம்சங்கள்

கண்டிப்பாக வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் குஜராத் தேர்தலில் களமிறங்கிய பாரதீய ஜனதா கட்சியின் நூலிழை வெற்றி அக்கட்சிக்கு பெரும் நிம்மதியை அளித்திருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமாக குஜராத் இருப்பதால், இங்கே மோசமான செயல்பாட்டையோ அல்லது தோல்வியையோ கண்டிருந்தால் அது மாநிலத்திற்கு வெளியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

இதற்கு முன்னர் நடந்த தேர்தல்களில் குஜராத்தில் எளிதாக வெற்றி பெற்ற பாஜக, இம்முறை உள்ளூர் அரசாங்கத்தின் மந்தமான செயல்பாட்டினாலும் மற்றும் தொடர்ந்து 22 ஆண்டுகளாக பாஜகவை தேர்தெடுத்த வாக்காளர்கள் மத்தியிலும் சோர்வு நிலவிய சூழலில் தேர்தலை எதிர்கொண்டது.

தலித்துகள் மற்றும் மற்ற சாதியினரை தவிர்த்து தங்களுக்கென வேலைகளில் தனி இடஒதுக்கீடு கோரிய படிதார்கள் சமூகத்தின் அதிருப்தி அக்கட்சிக்கு ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தது.

காங்கிரஸ் கட்சி பாஜகவை அதன் மிகப்பெரிய கோட்டையில் எதிர்கொள்வதற்காக ஒரு வித்தியாசமான கூட்டணியை அமைத்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக, பாஜகவின் கவசத்தில் நிலவும் குறைபாடுகள் மீது கவனம் செலுத்தி ஒரு முக்கிய பிரசாரத்தை நடத்தினார் ராகுல் காந்தி. இதில் குறிப்பாக விவசாயிகள் மத்தியில் நிலவிய கோபம் மற்றும் வர்த்தகர்கள் இடையே சரக்கு மற்றும் சேவை வரி குறித்து நிலவும் பிரச்சனைகளை முன்னிறுத்தினார்.

தேர்தலுக்கு முன்னர் நடத்தப்பட்ட அனைத்து கருத்துக் கணிப்புகளும் பாஜக தனது வாக்கு வீதத்தை இழந்து வருவதை காட்டியது.

தற்போது எழும் மிகப்பெரிய கேள்வியே பாஜக தோல்வியடைவதற்கு வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட நிலையில் அது எவ்வாறு ஒரு சுமாரான வெற்றியை பதிவு செய்தது என்பதேயாகும்.

பாஜக கடைசி கட்ட பிரசாரத்தின்போது அதை களைவதற்கான அனைத்து வழிவகைகளையும் கையாண்டது. குஜராத் பெருமை மற்றும் தேர்தலில் பாகிஸ்தான் பாதிப்பை உண்டாக்கவுள்ளதாக கூறி இந்துக்களின் வாக்குகளை மோடி கவர நினைத்தார்.

இது காங்கிரஸ் தலைவர்களான கபில் சிபல் மற்றும் மணிசங்கர் ஐயர் போன்றோரை எதிர்வினையாற்ற வைத்தது.

காங்கிரசை பொறுத்தவரை இது ஒரு கசப்பும் இனிப்பும் கலந்த முடிவாகவே அமைந்தது. அதாவது சிங்கத்தை அதன் சொந்த குகையிலேயே எதிர்கொண்டாலும், இறுதிக் கட்டத்தில் தோல்வியுற்றது. காங்கிரஸ் உள்ளூரில் சிறந்த தலைவரை கொண்டிராத சூழலில், ராகுல் காந்தி தேவையான அனைத்து செயல்களையும் செய்து தனது கட்சி தேர்தலில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்துவதற்கு உதவினார்.

ஆனால், குஜராத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டது அத்தேர்தலில் சிறிதளவு ஏமாற்றத்தையே பதிவு செய்துள்ளது.

இவரது “பெரும்பான்மை” வெற்றி என்ற வாக்குறுதி தவறானதாகிவிட்டது. இரண்டு கட்சிகளுக்குமே பெரும்பான்மையான வாக்குகளை பெறவில்லை.

எனவே, இத்தேர்தல் முடிவுகள் மோடிக்கும் பாஜகவுக்கும் கூறுவதென்ன?

ஐந்து முக்கியமான விடயங்கள் உள்ளன.

முதலாவதாக, விவசாயிகள் மற்றும் சிறுதொழில் வர்த்தகர்கள் ஆகியோர் இதுவரை நிலவி வந்த பொருளாதார சூழல் குறித்து மகிழ்ச்சிகரமாக இல்லை.

வேலைவாய்ப்பின்மையே ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. பாஜகவின் திட்டங்களுக்கு அபாயத்தை உண்டாக்கும் கட்டத்தை நெருங்கிய படிதார்கள் வேலைகள் குறித்து தங்களது முணுமுணுப்பை தெரிவித்தனர்.

சரக்கு மற்றும் சேவை வரி சிறு மற்றும் முறைசாரா வர்த்தகங்களை பாதித்தது. சரக்கு மற்றும் சேவை வரியின் தற்போதைய வடிவம் கண்டிப்பாக தொடர்ந்து நீடிக்க முடியாது.

இரண்டாவதாக, ராகுல் காந்தியின் தலைமையின் கீழுள்ள காங்கிரஸிடம் பா.ஜ.க அதன் முக்கிய இந்து வாக்குகளின் ஒரு பகுதியை இழந்து விட்டது. தற்போது காங்கிரஸிடம் சென்றுள்ள தனது முக்கிய வாக்குகளின் ஒரு பகுதியை பாஜக வென்றாக வேண்டுமென்பதே இங்கு முக்கியமான விடயமாகும்.

மூன்றாவதாக, 2019ம் ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டு மோடி அரசாங்கம் அதன் பொருளாதார மற்றும் அரசியல் செயல்பாடுகளை மாற்றுவதற்கான வாய்ப்புள்ளது. சாமானியர்களுக்கு முன்னர் இருந்ததைவிட இப்போது அதிக ஆதரவை எதிர்பார்க்கலாம்.

நான்காவதாக, இதுவரை எதிர்பார்க்காத அரசியல் சார்ந்த பாதிப்பை குஜராத் தேர்தல் முடிகள் ஏற்படுத்தியுள்ளதால் மோடி மற்றும் அமித் ஷா தங்களது 2019ம் ஆண்டு தேர்தல் கூட்டணி குறித்து உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாது. இதற்கு முன்னர் அவர்கள் செயல்படாத வகையில், தங்களது கூட்டணி கட்சிகளை சாந்தப்படுத்தவும் மற்றும் கவரவும் வேண்டும்.

ஐந்தாவதாக, கர்நாடகா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வரும் 2018ம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தல் பாஜகவுக்கு பெரும் சவாலானதாக உள்ளது. குஜராத் போன்றல்லாமல் உள்ளூர் தலைவர் இன்றி மோடியை மட்டுமே சார்ந்து இந்த மாநிலங்களில் செயல்பட முடியாது. பாஜகவின் அதிகாரத்திற்கு தற்போதுதான் சவால்கள் உருவாகத் தொடங்கியுள்ளன. -BBC_Tamil

TAGS: