குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியீடு.

குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச மாநில சட்டப்பேரவை முடிவுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அதன்படி, குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலில் பாஜக 99 இடங்களை வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 77 இடங்களை வென்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியையும், பாரதிய பழங்குடி கட்சி இரண்டு தொகுதிகளையும், சுயேச்சைகள் மூன்று தொகுதிகளையும் வென்றுள்ளனர் .

குஜராத் சட்டமன்றத்தில் அறுதி பெரும்பான்மைக்குத் தேவையான 92 உறுப்பினர்களை விட அதிக நபர்களை பெற்றுள்ளதால் பாஜக மீண்டும் ஆட்சியைத் தொடர்கிறது. குஜராத்தில் பாஜக ஆட்சியமைப்பது இது ஆறாவது முறையாகும். 1995 ஆம் ஆண்டு முதல் அங்கே பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

தேர்தலில் பதிவான வாக்குகளில் 49.1% வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இராண்டாவது இடத்தில் காங்கிரஸ் (41.4 %) உள்ளது. நோட்டாவுக்கு 1.8% வாக்குகள் பதிவாகியுள்ளன. சுமார் 5,51,615 வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்துள்ளன.

இமாச்சல் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் நாற்பத்து நான்கு தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் 21 தொகுதிகளில் வெற்றி கண்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் சுயேச்சைகள் இரண்டு இடங்களிலும் வென்றுள்ளனர். இந்த தேர்தலில் பாஜகவிடம் ஆட்சியை இழந்துள்ளது காங்கிரஸ்.

இமாச்சல் தேர்தலில் பதிவான வாக்குகளில் 48.8% வாக்குகளை பாஜக வென்றது. காங்கிரஸ் கட்சி 41.7% வாக்குகளையும், சுயேச்சைகள் 6.3% வாக்குகளையும், மார்க்சிஸ்ட் கட்சி 1.5% வாக்குகளையும், நோட்டா 0.9% வாக்குகளையும் வென்றுள்ளன. -BBC_Tamil

TAGS: