புதுடெல்லி,
கர்நாடகாவில் கடந்த 2013 முதல் 2017 வரை 5 ஆண்டுகளில் 3, 515 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அம்மாநில வேளாண் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
கர்நாடகாவில் கடந்த 5 வருடங்களில் தற்கொலை செய்துகொண்ட 3,515 விவசாயிகளில் வறட்சி மற்றும் பயிர் மகசூல் குறைபாடு காரணமாக 2,525 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 2015 முதல் ஏப்ரல் 2017 வரை இடைப்பட்ட காலத்தில் மட்டும் சுமார் 2,514 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அதிலும், கடந்த ஏப்ரல் 2017 முதல் நவம்பர் 2017 –இன் இடைப்பட்ட காலத்தில் மட்டும் 624 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
அதிகபட்சமாக கடந்த 2015-16 ஆண்டுகளுக்கு இடையே 1,483 தற்கொலைகளும் குறைந்தபட்சமாக கடந்த 2013-2014 ஆண்டுகளுக்கு இடையே 106 தற்கொலைகளும் நிகழ்ந்துள்ளதாக வேளாண் துறை இயக்குனர் பி.வை.ஸ்ரீநிவாஸ் கூறியுள்ளார்.
தற்கொலை செய்தவர்களில் எண்ணிக்கை அடிப்படையில் கரும்பு விவசாயிகள் முதலிடத்திலும், அவர்களைத் தொடர்ந்து பருத்தி மற்றும் நெல் விவசாயிகள் இருப்பதாக ஸ்ரீநிவாஸ் கூறினார்.
தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் ரூ .1 லட்சம் முதல் 5 லட்சம் வரை நஷ்ட ஈட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
-dailythanthi.com