வீட்டுக் கதவைத் தட்டி, லஞ்சப் பணத்தை திருப்பி அளிக்கும் அதிகாரிகள்

அரசுத்துறை சார்ந்த அலுவலகங்களில் தங்களது வேலை உடனடியாக நடக்க வேண்டும் என்பதற்காகவும் பணி நியமனம், பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றுக்காகவும் லஞ்சம் அளிக்கப்படுவது நாடு முழுவதும் வழக்கத்தில் உள்ளது. இவற்றில், லஞ்சம் கொடுத்தும் காரியம் சாதிக்க முடியாமல் ஏமார்ந்தவர்களும் உள்ளனர்.

அவ்வகையில், அனைத்து துறைகளிலும் லஞ்சம் புரையோடிப்போன மாநிலமாக கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, ஆந்திர மாநிலம் இரண்டாமிடத்தில் உள்ளதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

இந்த இழிநிலையை மாற்ற தீர்மானித்த ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, அரசு பணியாளர்களுக்கு யாராவது லஞ்சம் கொடுத்து இருந்தால் 1100 என்ற உதவி மையத்தை தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம். அந்தப் பணம் அவர்களுக்கு திருப்பி அளிக்கப்படும் என கடந்த மே மாதம் அறிவித்திருந்தார்.

புகார் அளிப்பவர்களின் அடையாளம் பாதுகாக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதால் இந்த உதவி மையத்தில் புகார்கள் குவிய தொடங்கின. இதையடுத்து, புகார் அளிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் முதல்கட்டமாக துறை ரீதியான விசாரணை நடத்தப்படுகிறது.

இந்த விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொள்பவர்கள் மேல் நடவடிக்கைக்கு பயந்து, யாரிடம் இருந்து லஞ்சமாக பணம் வாங்கினார்களோ, அவர்களின் வீடுதேடி சென்று, கதவைத் தட்டி வாங்கிய பணத்தை திருப்பி அளித்து வருகின்றனர். அவ்வகையில், கடந்த ஆறு மாதங்களில் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான பொதுமக்ககள் கொட்டி அழுத பல லட்சக்கணக்கான ரூபாய் அளவிலான லஞ்சப்பணம் திரும்பி வந்து சேர்ந்துள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால், இந்த புகார்கள் எல்லாம் சுமார் 500, 1000 ரூபாய் லஞ்சம் தொடர்பாகவே உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. எனினும், இப்போது மீன்களுக்கு விரிக்கப்பட்டுள்ள வலையில் பிற்காலத்தில் சில பெரிய திமிங்கலங்களும் சிக்கலாம் என்பதால் கை அரிப்பு எடுத்த அரசு அதிகாரிகள் தற்போது சற்று அடக்கி வாசிப்பதாக கூறப்படுகிறது.

-athirvu.com

TAGS: