2016-17-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிவு: மக்களவையில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தகவல்

புதுடெல்லி,

மக்களவையில் இன்று  பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது:‘‘இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை குறிக்கும், ஜிடிபி என அழைக்கப்படும், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், 2015 -2016 நிதியாண்டில் 8 சதவீதமாக இருந்தது. 2016 -17 நிதியாண்டில் இது, 7.1 சதவீதமாக குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டான, 2017 – 2018ன் முதல் காலாண்டில், 5.7 சதவீதமும், இரண்டாவது காலாண்டில் 6.3 சதவீதமும் பொருளாதார வளர்ச்சி இருந்துள்ளது.

தொழில்துறை மற்றும் சேவைதுறையில் ஏற்பட்டுள்ள சரிவால் இந்த வளர்ச்சி குறைவு ஏற்பட்டுள்ளது. அந்த துறைகளில் நிலவிய கட்டமைப்பு, நிதி மற்றும் புறக்காரணங்களால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.

எனினும் சர்வதேச நிதியம், 2016ம் ஆண்டில் உலக அளவில் மிகவேகமான பொருளதார வளர்ச்சி கண்ட நாடாகவும், 2017ம் ஆண்டில் உலக அளவில் இரண்டாவது பொருளாதார வளர்ச்சி கண்ட நாடாகவும், இந்தியாவை குறிப்பிட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழில் மற்றும் வர்த்தகத்துறை  வளர்ச்சியில் ஜிஎஸ்டி குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கும்’’ இவ்வாறு அவர் கூறினார்.

-dailythanthi.com

TAGS: